Sunday, December 20, 2020

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின் இன்று மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும். தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது. தோழர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பதில்களை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2014/12/blog-post_26.html

No comments:

Post a Comment