Wednesday, April 27, 2022

தோழர் லெனினும் பிரதமர் மோடியும்

•தோழர் லெனினும் பிரதமர் மோடியும் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனினை சந்திப்பதற்கு அமெரிக்க பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றிருந்தார். பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த ரைஸ் வில்லியமுக்கு அவருக்கான சந்திப்பு நேரம் வந்திருந்தபோதும் கதவு திறக்கப்படவில்லை. இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நேரம் தவறாமையில் மிகவும் கறாராக இருப்பவர் தோழர் லெனின். சரி, யாரோ மிக மிக முக்கிய பிரமுகர் லெனினுடம் விவாதித்து கொண்டிருக்கிறார் என்று அந்த அமெரிக்க பத்திரிகையாளர் நினைத்தார். அரைமணி, ஒரு மணி, ஒன்றரை மணி ஆயிற்று. கதவு திறக்கவில்லை. லெனினுடன் இவ்வளவு நீண்ட பேட்டிக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் முழு அதிகாரம் பெற்ற அந்த தூதர் யாரோ? என்பதே அப் பத்திரிகையாளரின் கேள்வியாக இருந்தது. கடைசியில் கதவு திறந்தது. அவரது அறையில் இருந்து வெளியே வந்தவரைப் பார்த்ததும் அனைவரும் அசந்து போய்விட்டார்கள். ஏனெனில் வெளியே வந்தவர் பரட்டைத் தலையும் அழுக்கு உடையும் கொண்ட ஒரு ஏழை விவசாயி. லெனினுடைய அறைக்குள் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றார். அவரிடம் லெனின் சொன்னார், " உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஏழை விவசாயி தம்போவ் பகுதியை சேர்ந்தவர். மின்சாரமயமாக்கல், கூட்டு பண்ணை அமைப்பு, புதிய பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி அவருடைய கருத்துகளை கேட்டேன். உரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. இதனால் நேரத்தை மறந்துவிட்டேன்." என்று சொன்னார் இவர்தான் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனின். அதேவேளை இந்திய பிரதமராக இருக்கும் மோடியையும் நினைத்து பார்க்கிறேன். கடந்த வருடம் பல மாதமாக டில்லியில் விவசாயிகள் போராடினார்கள். அதில் என்பதுக்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். ஆனாலும் பிரதமர் மோடியின் மனம் இரங்கவில்லை. விவசாயிகளை சந்திப்பதற்கு அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை. நடிகைகளுக்கு நேரம் ஒதுக்கி சந்திக்க முடிந்த மோடியால் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது கொடுமைதான். முதலாளிகளுக்காக அயராது பாடுபடும் பிரதமர் மோடி விவசாயிகளுக்காக பாடுபடுவார் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்தான். ஆனாலும் லெனின் காட்டிய வழி விவசாயிகளுக்கு இருக்கிறது. அவர்கள் அதில் பயணம் செய்து மோடிகளை தூக்கி எறிவார்கள். இது நிச்சயம்.

No comments:

Post a Comment