Thursday, May 26, 2016

தோழர் தமிழரசனும் அவரது தத்துவ வழிகாட்டியும்.

தோழர் தமிழரசனும் அவரது தத்துவ வழிகாட்டியும்.

(தோழர் பாலன் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலில் இருந்து)

தோழர் தமிழரசன் ஒரு புரட்சியாளர். அவர் மாக்சிச லெனினிய மாவோ சேதுங் சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார். இந்தியாவில் புரட்கர இயக்கத்திற்கு தோழர் தமிழரசன் செய்த பங்களிப்புகள் குறித்து அரசியல் மற்றும் வரலாற்றுவியலாளர்கள், மார்க்சிய புத்திஜீவிகள் , இடதுசாரிகள் மத்தியில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இருக்கின்ற போதிலும் தமிழ்நாட்டில் மாக்சிச லெனிய மாவோசேதுங் சிந்தனையில் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து தலைமைதாங்கி வழிநடத்தியதில் அவர் ஆற்றிய முதன்மையான பங்களிப்பு குறித்து எந்தவிதமான மறுகருத்துக்கும் இடமிருக்க முடியாது.

உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றிபெறும் என்பது இன்னும் விடைக்குரிய வினாவாகவே எழுப்பப்பட்டு வருகின்றது. இதனை நோக்கும்போது இந்த நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கும் அதன் உச்சமான ஏகாதிபத்தியத்திற்கும் மட்டும் உரியதொன்றாக இருக்குமா அல்லது சோசலிசத்திற்குரிய நூற்றாண்டாக அமையப் போகின்றதா என்பது நடைமுறை சார்ந்த கேள்வியாகிறது. ஆனால் மார்க்சிசத்தின் பின்னரான ஒன்றரை நூற்றாண்டு காலப் போராட்டங்களும் அவற்றின் விளைவான சோசலிச வென்றெடுப்புகளும் முதலாளித்துவதற்கு நேர் எதிரானதாகவும் ஓரே மாற்றாகவும் இருப்பதற்கு ஆற்றல் பெற்றது மாக்சிசமும் சோசலிசமும்தான் என்பதை நிரூபித்து வந்துள்ளன.

மாபெரும் ஆசான் கார்ல் மாக்ஸ் விஞ்ஞான பூர்வமாக வகுத்து அளித்துச் சென்ற தத்தவார்த்த பொக்கிசமே மார்க்கிசமாகும். அன்றுவரை ஆதிக்கம் செலுத்திவந்த பழமைவாத கருத்து முதல் உலக நோக்கிற்கு எதிராக இயங்கியல் பொருள்முதல்வாதம் என்னும் புரட்சிகரமான உலக நோக்கை மாக்சிசம் நிலை நிறுத்திக் கொண்டது. இத்தகைய மாக்சிச உலக நோக்கானது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு மட்டுமன்றி முழு மனிதகுல விடுதலைக்குமான தலைவிதியோடு தன்னை இணைத்துக்கொள்ளும் மாபெரும் வலிமையும் பெற்றுக்கொண்டது.
மாக்சிசம் ஒரு விஞ்ஞானபூர்வமான தத்துவார்த்தத்தை முன்வைக்கிறது. அத்துடன் அது தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை. எவ்வாறு முதலாளித்துவத்தின் தோற்றம் வளர்ச்சி என்பவற்றை நடைமுறை ஆய்வுக்கு உட்படுத்தி தனது முடிவுகளை திடப்படுத்தி நிரூபித்துக்கொண்டதோ அவற்றை முதலாளித்தவத்திற்கு எதிரான போராட்டமாக பிரயோகித்தும் மார்க்சிசம் வெற்றிகண்டு கொண்டது.

முதலாளித்துவத்தின் கீழ் மனிதர்களின் உழைப்பு அதன் பெறுமதி கூலி விலை இலாபம் உபரி உற்பத்தியும் உபரி மதிப்பும் விநியோகம் என்பனவற்றின் அடிப்படைகள் கண்டறியப்பட்டன. முதலாளித்துவத்தின் ஒரே இலக்கு இலாபத்தை குவிப்பதும் மூலதனத்தைப் பெருக்குவதும்தான். மனிதர்களின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதோ அன்றி அவர்கள் எதிர் நோக்கும் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோ அல்ல என்பதையும் மாக்ஸ் தனது ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்திக் காட்டினார்.

அன்றைய முதலாளித்துவம் தன்னை வளர்த்து நிலை நிறுத்திக்கொள்வதற்கு உலக நாடுகளை அடிமைப்படுத்தி அந் நாடுகளின் விலைமதிப்பற்ற வளங்கள் அனைத்தையும் சூறையாடிச் சென்றது. காலனித்தவ அமைப்பை இறுக்கிக்கொண்டது. இத்தகைய முதலாளித்துவ வளர்ச்சியையும் அதன் ஈவிரக்கமற்ற சுரண்டலையும் மாக்சிசம் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுடன் நில்லாது அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கமும் அடக்கப்படும் காலனி நாடுகளும் போராட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது.

இன்றைய உலக சூழலில் முதலாளித்துவம் ஏகாதிபத்திய நிலை நின்று தமது இராட்சத மூலதனம் கொண்டு உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையிட புதிய புதிய வழிகளில் கங்கணம் கட்டி நிற்கின்றது. அதுவே உலகமயமாதல் என்னும் நிகழ்ச்சித் திட்டமாகும். மாக்சிசத்திற்கும் சோசலிசத்திற்கும் ஏற்பட்ட தற்காலிக பின்னடைவை மீள முடியாத நிரந்தரமானது என்ற காட்டிக் கொள்வதற்கு ஏகாதிபத்தியப் பிரச்சாரம் பல முனைகளில் இருந்தும் ஏவப்படுகிறது. அதனூடே உலகமயமாதல் திட்டங்களை முன்தள்ளியும் காரியமாற்றப்படுகிறது.

இராட்சத பல்தேசியக் கம்பனிகள் மூலமான பாரிய மூலதன ஊடுருவல் நடத்தப்படுகின்றது. முதலாளித்துவ நிலைப்புக்கான கருத்தியல்களும் கலாச்சார சீரழிவுகளும் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. சமூக நலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துகளும் அவற்றுக்கு சார்பான சோசலிச எண்ணங்களும் குறிவைத்து அடிக்கப்படுகின்றன. போராட்டங்கள் எழுச்சிகள் சமூக மாற்றம் என்பன மறுக்கப்படுகின்றன. பழமைவாதம், ஆதிக்கம், அடக்குதல் என்பன மீட்டு நிலைநிறுத்தப்படும் போக்கு வலுவடைகின்றது. இவை இலங்கை இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகளில் முனைப்படைந்திருக்கம் நிகழ்வுப் போக்குகளாகும்.

மாக்சிசம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது. மாபெரும் அக்டோபர் புரட்சி மூலமாக லெனிசமாக வளர்ச்சி கண்டது. சீனப் புரட்சியின் ஊடாக மாசேதுங் சிந்தனையாக விரிவு பெற்றது. இன்னம் பல நாடுகளின் புரட்சிகளில் மாக்சிசம் வளம் பெற்றுக் கொண்டது. எனவே இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சிசம் தனது ஒட்டுமொத்த வளர்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது.  இந்தியாவில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் தன்னால் இயன்றளவு தோழர் தமிழரசன் வழங்கியுள்ளார்.

ரொட்ஸ்கியவாதம், சீர்திருத்தவாதம், நவீன திரிபுவாதம் ஆகியவற்றுக்க எதிராக தோழர் தமிழரசன் நடத்திய இடையறாத விட்டுக்கொடுப்பற்ற தத்துவார்த்த போராட்டம் அவரது மகத்தான தகுதிகளில் ஒன்றாகும். ட்ரொக்சியும் அவரது ட்ரொக்சிய தத்துவமும் அவரது வாழ்நாள் காலத்திலேயே தோற்கடிக்கப்பட்டது. எனினும் அவரது வாரிசுகள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இப்பவும் புரட்சியை காட்டிக்கொடுத்து வருகின்றனர். தோழர் ஸ்டாலின் மீது வசை பாடி வருகின்றனர்
ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை ஏதோ பெரிய முழக்கங்களாகக் காட்ட சில ட்ரொக்சியவாதிகள் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.

ட்ரொஸ்கியவாதத்தின் இன்றைய வக்கீல்கள் இதனைப் பற்றி அவ்வளவாக பேச விரும்பாவிட்டாலும் தனியொரு நாட்டில் மட்டும் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியுமா என்பதே ட்ரொஸ்கியவாதிகளுக்கும் கம்யூனிசவாதிகளுக்கும் இடையிலான பிரதான பிரச்சனையாக இருந்தது. இன்று சோஷலிசத்தை ஒரே நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் முற்றிலும் பொழுது போக்கற்ற அறிவு ஜீவிகளின் விவாதத் தலைப்புகளில் இடம் பிடிப்பவை. அதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிரூபித்தார்கள்.

ஜரோப்பாவின் பிரதான முன்னேறிய நாடுகளில் முதலில் புரட்சிகள் நடைபெறும் என லெனின் எதிர்பார்த்தது உண்மைதான். லெனின் ஒரு சர்வதேசியவாதி. எனவே அவர் உண்மையில் இதற்காக ஊக்கத்துடன் உழைத்தார். ஆனால் புரட்சிவாதி விரும்பும் பாதையிலேயே வரலாறு எப்பொழுதும் செல்வதில்லை. புரட்சி ஏற்பட்ட கங்கேரி, ஜெர்மனி போன்ற நாடுகளில் அது தோல்வி கண்டது. இந் நிலையில் தாம் வெற்றிக்கு இட்டுச் சென்ற ரஸ்சியப் புரட்சியை ரஸ்சியப் புரட்சியாளர்கள் என்ன செய்வது? ஸ்டாலின் வினவியவாறு “அதனை உலகப் புரட்சிக்கு காத்திருந்து கொண்டு அதன் சொந்த முரண்பாடுகளில் சிக்கி வேர்வரை அழுக விடுவதா?”
லெனின் இத்தகைய ஒரு வளர்ச்சியை எதிர்பார்த்தார். அவர் 1916ல் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் யுத்தத்திட்டம் என்பதில் “முதலாளித்துவதத்தின் வளர்ச்சி பல்வேறு நாடுகளில் மிகுதியும் சமாந்திரமற்ற முறையில் நடைபெற்றது. பண்ட உற்பத்தி அமைப்பின் கீழ் வேறுவிதமாக அது நடைபெறமுடியாது. இதிலிருந்து சோசலிசம் சகல நாடுகளிலும் ஏக காலத்தில் வெற்றி பெறமுடியாது என்பது புலனாகிறது. அது முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்

இந்த லெனிசக் கருத்துக்களின் அடிப்படையில் முதலில் லெனினாலும் பின்னர் அவருடைய வாரிசான ஸ்டாலினாலும் தலைமை தாங்கப்பட்ட போல்ஷ்விக் கட்சி புரட்சி வெற்றி பெற்ற ஒரு நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒழுங்கு படுத்தியது. வரலாறு அது சரி என நிரூபித்து விட்டது.
ஆனால் ட்ரொஸ்கி வேறுவிதமாக சிந்தித்தார். பின்தங்கிய ரஸ்சியாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி தப்பிப் பிழைப்பதை அவர் முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டத்தின் வெற்றியுடன் இணைத்தார். அவர் “உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்ற அரங்கில்தான் ரஸ்சியப் புரட்சியைக் காப்பாற்ற முடியும்” என்று ஆடம்பரமாகப் பிரகடனம் செய்தார்.
விவசாயிகளின் புரட்சிகர உள்ளார்ந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்காததே ட்ரொஸ்கியின் இந்த தவறான தர்க்கத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். புரட்சி சோசலிசக் கட்டத்தை நோக்கி நகரும் போது பாட்டாளி வர்க்கத்திற்கு பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல விவசாயிகளுடனும் மோதல் ஏற்படும் என அவர் கருதினார். அதனால் அவர் இவ்வாறு கூறினார் “ ….பாட்டாளி வர்க்க முன்னனிப்படை அதன் வெற்றியை அடையப் பெறுவதற்காக அதன் ஆட்சியின் அதி ஆரம்பக் கட்டத்திலேயே நிலப்பிரபுத்துவ சொத்தைப் பறிப்பது மட்டுமல்ல முதலாளித்துவ சொத்தையும் பறிக்க நேரிடும். இதில் பாட்டாளி வர்க்கம் புரட்சிப் போராட்டத்தின் முதல் கட்டங்களில் தனக்கு ஆதரவளித்த பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல தன்னை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு காரணமாயிருந்த பரந்துபட்ட விவசாயிகளுடனும் பகைமையான மோதலில் ஈடுபட நேரிடும்”.

லெனினுடைய கருத்துக்கள் ட்ரொஸ்கியின் கருத்துக்களுக்கு நேர் எதிர்மாறானவை. ரஸ்சிய மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான விவசாயிகளுக்கு புரட்சியின் இரண்டு கட்டங்களிலும் புரட்சிப் பாத்திரம் உண்டு என்று லெனின் வாதிட்டார். இந்த விவசாய மக்களை தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒழுங்கு படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த விசேட நேச அணி பற்றி லெனின் பின்வருமாறு வர்ணித்தார் “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது உழைப்பாளிகளின் முன்னனிப் படையான பாட்டாளி வர்க்கத்திற்கும் உழைப்பாளிகளின் பாட்டாளிகள் அல்லாத எண்ணற்ற பிரிவினருக்கும் (குட்டி பூர்சுவா சிறிய கைவினைஞைர்கள் விவசாயிகள் அறிவுஜீவிகள் போன்றன) அல்லது பெரும்பாலான பிரிவினருக்கும் இடையில் உள்ள விசேட வடிவ வர்க்கக் கூட்டணியாகும்”.

ஆகவே விவசாயிகளுடனான கூட்டணியில் நம்பிக்கையற்ற ட்ரொஸ்கியால் ரஸ்சியப் புரட்சிக்கு எந்த எதிர்காலத்தையும் காண முடியவில்லை. அவருடைய கருத்தில் உலகப் புரட்சிதான் அதைக் காப்பாற்ற முடியும். ஆனால் அது நடைபெறவில்லை. ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியாது என அவர் கூறிக்கொண்டே இருந்தார்.
ஆனால் ஸ்டாலின் தலைமையிலான போல்ஷ்விக்கள் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியும் என்பதை நிரூபித்ததுடன் சோவியத்யூனியனுக்கு எதிரான பாசிச ஆக்கிரமிப்பின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாறு காணாத கொடிய தாக்குதலுக்கு எதிராகவும் அதனைப் பாதுகாத்தார்கள். வரலாறு இவ்வாறு இந்தப் பிணக்குகள் பற்றிய தீர்ப்பை வழங்கி முன்னேறிச் சென்றது. வரலாறு இவ்வாறு தெளிவாக தீர்ப்பு அளித்தபோதும் அதனை ஏற்றுக்கொள்ளாத ட்ரொக்சியவாதிகள்  ட்ரொக்சியின் இடத்தை அபகரித்தவிட்டதாக தோழர் ஸ்டாலின் மீது தொடர்ந்து  அவதூறு பரப்பி வருகிறார்கள்.

லெனினின் வாரிசு என்ற பிரச்சனையிலும் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தார் என்ற ட்ரொஸ்கியவாதிகளின் பிரச்சாரத்தில் எள்ளவும் உண்மையில்லை என்பதை நாம் தெளிவாக காணலாம்.
வரலாற்றின்படி ட்ரொஸ்கி புரட்சிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தான் போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஆனால் ஸ்டாலினோ 1912ல் பிராக் மாநாட்டில் மென்ஷிவிக்குகளிடமிருந்து பிரிந்த போது போல்ஷ்விக் கட்சியில் லெனினுடன் இணை ஸ்தாபகராக இருந்தார். இந்த மாநாட்டில் ஸ்டாலின் மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் ரஷ்யாவுக்குள்ளே புரட்சிகர வேலைக்கு வழிகாட்டுமுகமாக ஸ்டாலினை தலைவராகக் கொண்ட மத்தியக் கமிட்டி ரஷ்யசபை என்ற நடைமுறையான கேந்திரம் அமைக்கப்பட்டது. இது ஸ்டாலினுடைய தலைசிறந்த ஸ்தாபன திறமைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். லெனின் பெரிதும் வெளிநாடுகளில் இருந்து இயக்கத்திற்கு தலைமை தாங்கிய போது ரஷ்யாவுக்குள்ளே தலைமறைவுக் கட்சியை கட்டியமைத்தது ஸ்டாலின்தான்.

அப்போது 1912ல் ட்ரொஸ்;கி “ஆகஸ்ட் குழு” என்பதை மும்முரமாக ஒழுங்குபடுத்தினார். அவர் இதில் லெனினுக்கும் போல்ஷ்விக் கட்சிக்கும் எதிரான குழுக்களையும் போக்குகளையும் ஒன்றினைத்தார். அப்பொழுதுதான் லெனின் அவரை “யூதாஸ் ட்ரொஸ்கி” என்று அழைத்தார்.
1917 மே 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஸ்டாலின் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவுக்கும் அவர் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் மத்திய கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஏடான “பிராவ்டா”வின் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

1917ம் ஆண்டு ஜீலை 26ம் திகதி முதல் ஆகஸ்ட் 3ம் திகதி வரை நடைபெற்ற போல்ஷ்விக் கட்சியின் ஆறாவது காங்கிரசில்தான் ட்ரொஸ்கியை ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அப்பொழுது லெனின் பின்லாந்தில் இருந்து மாநாட்டிற்கு வழிகாட்டினார். ஸ்டாலின்தான் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பிரதான அறிக்கையை சமர்ப்பித்தார். இதிலிருந்து அக்டோபர் புரட்சியின் போது லெனினுக்கு அடுத்தபடியான பாத்திரத்தை வகித்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாகிறது. இதனாற்தான் 1922ல் துப்பாக்கிக் குண்டின் காயம் காரணமாக லெனின் செயல்பட முடியாது இருந்த நிலைமையில் கட்சியின் பொதுச் செயலாளராக லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார்.

இவற்றை மறுக்க முடியாத ட்ரொஸ்க்கியவாதிகள் இறுதியில் பற்றிக்கொள்ளும் விடயம் லெனின் மரணசாசனம். இது உண்மையில் எதிர்வர இருந்த காங்கிரசுக்கு லெனின் சொல்ல எழுதப்பட்ட கடிதமாகும். இந்த காங்கிரஸ் லெனின் மறைவின் பின் 1924ம் ஆண்டு மே 24ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற்றது. இந்தக் கடிதத்தை காங்கிரசில் வாசிக்க வேண்டும் என்பதே லெனினுடைய வேண்டுகோள். அதன்படி ஸ்டாலினே இக் கடிதத்தை வாசித்தார். இக் கடிதத்தில் ஸ்டாலினும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ட்ரொஸ்கியும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால் ட்ரொஸ்க்கியவாதிகள் கூறுவது போல் பொதுச்செயலாளர் பதவிக்கு ட்ரொஸ்கியை நியமிக்கவேண்டும் என்று அதில் கூறப்படவில்லை.

இந்தக் கடிதம் வாசிக்கக் கேட்ட பின்னர்தான் காங்கிரஸ் ஸ்டாலினை பொதுச் செயலாளராக தெரிவு செய்தது. ஒரேயொரு வாக்கு ட்ரொஸ்கியின் வாக்குதான் எதிராக விழுந்தது. அவர் தனக்குத்தானே வாக்களித்தார். ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனவும் அவர் ட்ரொஸ்கிக்கு போதிய விவாத வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் ட்ரொஸ்க்கியவாதிகள் சேறு பூசுகின்றனர். இது முற்றிலும் பொய். சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் வரலாற்றில் ஸ்டாலினைப் போல் இவ்வளவு அதிகாரம் படைத்திருந்த ஒரு தலைவர் தனது எதிரிக்கு ஸ்டாலின் ட்ரொஸ்க்கிக்கு காட்டியது போன்ற பொறுமையைக் காட்டியது கிடையாது.

விவாதங்கள் போல்ஷ்விக் கட்சிக்கு உள்ளேயும் கம்யுனிச அகிலத்திற்கு உள்ளேயும் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. மீண்டும் மீண்டும் ட்ரொஸ்க்கி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை.1927 அக்டோபரில் நடைபெற்ற கட்சியின் 15வது மாநாட்டிற்கு முன்னர் ஒவ்வொரு உறுப்பினரினதும் நிலைப்பாட்டை அறிவதற்காக வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது. 724000 உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையிலான மத்திய கமிட்டியின் கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். 4000 பேர் ஆதாவது ஒருசத வீதத்திற்கும் குறைவானோர் ட்ரொஸ்க்கிய குழுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது ட்ரொஸ்க்கிக்கு கிடைத்த இறுதி அடியாகும்.

ட்ரொஸ்க்கிக்கு வேண்டியது ஜனநாயக விவாதமும் தீர்ப்பும் என்றால் அது போதிய அளவு கிடைத்தது. ஆனால் அவர் திருந்தவில்லை. தனது குழுவாத நடவடிக்கைகளை கைவிடவில்லை. கட்சியின் பொறுமை சோதிக்கப்பட்டது. 1927 நவம்பர் 14 திகதி மத்திய கமிட்டி ட்ரொஸ்க்கியை வெளியேற்றியது. சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் சோவியத் யூனியனின் ஓதுக்குப்புறக் குடியரசு ஒன்றிற்கு நாடு கடத்ப்பட்டார். ஆனால் அவர் இந்த நிபந்தனையை மீறியபடியால் ஒருவருட முடிவில் சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சோவியத்யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ட்ரொஸ்க்கியின் நடவடிக்கைகள் பற்றியோ சர்வதேச சோவியத் எதிர்ப்பு நடவடிக்கையின் கேந்திரமாக அவர் எப்படி மாறினார் என்பது பற்றியோ இந்தக் கேந்திரம் அவரது ஆடம்பரங்களுக்கு எவ்வாறு பெரும் தொகை பணத்தை செலவழித்தது என்பது பற்றியோ அவர் இறுதியில் பெரிதும் அரண் செய்யப்பட்ட கோட்டையில் குடியேறினார் என்பது பற்றியோ இறுதியில் அவருடைய பெண் காரியதரிசியின் காதலனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இங்கு விரிவாக கூறவேண்டியதில்லை. அவை அனைவரும் அறிந்த வெட்ட வெளிச்சமான விடயங்கள்.

இன்று சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் வேறு பொழுது போக்கற்ற அறிவுஜீவிகள்தான் அவைபற்றி விவாதிப்பார்கள். அதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிருபித்துவிட்டனர். ஆனால் 1920ம் ஆண்டுகளில் ரஸ்சியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு தெளிவு இருக்கவில்லை. இதனைச் செய்ய முடியுமா என்று பலர் சந்தேகித்தனர். இவ்வாறுதான் அப்பொழுது ட்ரொக்சியவாதத்திற்கு ஒரு சமுதாய அடிப்படை இருந்தது. ஆனால் இன்று ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியாது என்ற ட்ரொக்சியின் தத்துவம் செத்த தத்துவம் ஆகும்.

ட்ரொஸ்க்கியவாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு உள்ளேயிருந்த தவறான தத்துவம் என்ற நிலைமையில் இருந்து பகிரங்கமான எதிர்ப்புரட்சித் தத்துவமாக மாறியுள்ளது. ட்ரொக்சிய வாதம் என்னும் எதிர்ப் புரட்சிகரத் தத்துவம் உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு கவர்ச்சிகரமானது. ஏனென்றால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதாக பாசாங்கு செய்கின்றது. அதேவேளையில் அதன் பிரதான பங்கும் செயல்பாடும் புரட்சிக்கு எதிரானது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. சர்வதேசிய முதலாளித்துவப் பத்திரிகைகள் ட்ரொக்சியைப் பாராட்டும் அதேவேளையில் ஸ்டாலினை இன்றுவரை திட்டுவதன் அடிப்படை நோக்கத்தை ஒரு உண்மையான புரட்சியாளனால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.

மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.

பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.

தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. (முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது.

ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.

தோழர் தமிழரசன் தமிழக பொதுவுடமை இயக்கத்pன் முன்னோடி தலைவர்களில் ஒருவர். பொதுவுடமை இயக்கத்தின் மூலமாக மாக்சிசம் லெனினிசம் மாசேதுங் சிந்தனையை புரட்கரமான நிலைப்பாட்டில் நின்று இறுதிவரை முன்னெடுத்து வந்த ஒரு தலைமைப் போராளி. அவர் தனது வாழ்நாளில் அரசியல் தொழிற் சங்க வெகுஜனப் போராட்டங்களில் தீவிர பங்கேற்று தலைமை தாங்கி வந்த அதேவேளை மாக்சிச கல்விக்கும் முதன்மையளித்து வந்துள்ளார். அவர் எமது இயக்க தோழர்களுக்கு வழங்கிய மாக்சிச அரசியல் வகுப்புகள் பிரசித்தமானவையாகும். அவரது மாக்சிச அரசியல் வகுப்பகளின் தாக்கம் பற்றி இப்பொழுதும் எமது தோழர்கள் பலர் வியப்புடன் நினைவு கூருவர். மாக்சிய லெனினிய மாவோசேதுங் சிந்தனை அடிப்படையில் அவர் எழதிய பெண்ணாடம் மாநாட்டு அறிக்கை  மற்றும் மீன்சுருட்டி ஆய்வறிக்கை என்பன தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது. மாக்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையில் இந்தியப் புரட்சியை தமிழ்நாடு விடுதலையினுடாக முன்வைத்து ஆழப்படுத்தியதில் தோழர் தமிழரசன் பங்களிப்பு என்றும் நினைவு கூரத்தக்கதாகும்.

பெண்ணாடம் மாநாட்டு அறிக்கையில் தோழர் தமிழரசன் பின்வருமாறு குறிப்பிடுகிறார் “ இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது இந்திய அரசு எல்லைக்குள் இருக்கிற தேசிய இனப் பிரச்சனையை  குறிப்பாக தமிழத்; தேசிய இனப் பிரச்சனையை மாக்சிய லெனினிய மாவோ சிந்தனையின் வழிகாட்டுதலில்  மறு ஆய்வு செய்யுமாறு நம்மைத் தூண்டுகிறது. தமிழ்தேசிய உணர்வின் முதல் வெளிப்பாடாக அமைந்த திராவிடர் இயக்கத்திலும் பிற தமிழர் நல அமைப்புகளிலும் இருக்கின்ற புரட்சிகரமான அணியினர் அனைவரும் விடுதலை லட்சியத்தை வஞ்சித்த தலைமையைத் தூக்கியெறிந்துவிட்டு தமிழகத்திலும் பிற மாநிலங்களிலுமுள்ள பரந்துபட்ட மக்கள் திரளினரின் விடுதலைப் போராட்டத்தில் மாக்சிய லெனினிய சக்திகளின் தலைமையில் பங்கேற்க முன்வரவேண்டும் என்று இப் பிரச்சனை அறைகூவி அழைக்கின்றது.”

தோழர் தமிழரசன் “சாதி ஒழிப்பும் தமிழக விடுதலையும்” என்னும் மீன்சுருட்டி மாநாட்டு அறிக்கையில் “ சாதிப் பிரச்சனை என்பது ஜனநாயகப் பிரச்சனையில் சாதி ஒழிப்பின் வடிவமே. இது இந்தியாவிற்கு மட்டுமே இந்திய துணைக்கண்டப் புரட்சிக்கு மட்டுமே உரியதென்பதால் மற்ற நாட்டு புரட்சி போல் அல்லாமல் இதற்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே தீர்க்கப்பட முடியும் என்பதால் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அனைத்து ஜனநாயக போராட்டங்களுடனும் அதாவது புதிய ஜனநாயகப் புரட்சிக்குரிய ஜனநாயகப் போராட்டங்களுடனும் இணைக்கப்பட வேண்டும். சாதி ஒழிப்பு போராட்டங்கள் உழவர் விடுதலை மற்றம் தமிழக விடுதலைப் போராட்டங்களுடன் இணைக்கப்பட்டாக வேண்டும். அதிகாரத்தையும் நிலத்தையும் கைப்பற்றாமல்  தாழத்தப்பட்டவர்களால் சாதியை ஒழிக்க முடியாது. பாட்டாளி வர்க்க தலைமையில்லாமல்  உழைக்கும் மக்களை அணி சேர்க்காமல்  தாழத்தப்பட்டவர்களால் அதிகாரத்தை வெல்லவே முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓர் ஒடுக்குமுறை முதலாளிய அரசாங்க இயந்திரம் இல்லாமல் சுரண்டல் ஒரு நிமிடத்திற்கு மேல் நிலைக்காது என்பது நிச்சயமாக தெளிவாகின்றது. ஆயுதப் படையினரதும் பொலிஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கி இல்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படுவோரை கீழே போட்டு மிதிக்க முடியாது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நூற்றுக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலமைகளில் எவ்வாறு அவர்களால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ளவர்களை பலவந்திப்படுத்தி சுரண்ட முடிகிறது. அவர்களின் காவல் நாய்களான பொலிஸ் மற்றும் ராணுவம் கரங்களில் உள்ள  துப்பாக்கிகளின் சக்தியே அது. அதனாலேயே தோழர் மாசேதுங் அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது என்பதை ஒவ்வொரு புரட்சியாளனும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார். அது அரசு பற்றிய மாக்சிய கோட்பாட்டை இரத்தின சுருக்கமாக தருகின்றது. மாக்சிய லெனியத்தின் சாரம் அதுவே.

இந்த உண்மையை மறைப்பதற்கும் மக்களைக் குழம்ப செய்து அவர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவுமே முதலாளிகளும் மற்றைய பிற்போக்கு சக்திகளும் பாராளுமன்றம் என்ற ஏமாற்றுவித்தையைக் கண்டு பிடித்தனர். பாராளுமன்றம் வெறுமனனே கதைபேசும் கடையே தவிர வேறொன்றும் இல்லை. அது மூலதனத்தின் வெளிப்படையான சர்வாதிகாரத்தை மறைப்பதற்கான ஒரு திரை. அது ஒரு அணிகலனுமாகும். அது மக்களை மடையர்களாக்குவதற்கும் பிளவு படுத்தவதற்கும் பாராளுமன்றம் மூலம் சோசலிசத்தை அடையலாம் என்ற மாயையை பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும் முயலுகின்றது. அது  ஆயுதப்படையிற்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து திசை திருப்பவதற்கும் முயல்கின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு பதில் வெறும் சொற்களால் போராட்டம் நடத்தும் மாற்று யோசனையை கூற முயல்கிறது.

இந்திய நாட்டில் இதுவரை பலமுறை தேர்தல்கள் நடந்துள்ளன. மக்களும் பல முறை வாக்களித்துள்ளனர். ஆனால் சொத்து உறவில் என்றாலும் அல்லது சுரண்டலின் தரத்தில் என்றாலும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? இல்லை. அதே சுரண்டல் தொடர்கிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். அதேவேளை ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். ஏனெனில் முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசாங்க மாற்றங்கள் பொருளாதாரக் கட்டுக்கோப்பில் அல்லது அதைப் பாதுகாக்கின்ற முதலாளிய அரசு இயந்திரத்தில் எவ்வித அடிப்படை மாற்றம் எதையும் கொண்டு வரவில்லை. அதனால்தான் ஒவ்வொரு புரட்சியாளனும் இப்போதுள்ள ஏகாதிபத்திய நிலமானிய பெரு முதலாளிய பொருளாதாரக் கட்டுக்கோப்பை நொருக்காமலும் அத்துடன் அதன் காவல்நாயாக விளங்கும் ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தை  பலாத்காரத்தினால் உடைக்காமலும் முதலாளிய பாராளுமன்ற ஜனநாயக நாடகத்தின் மூலம் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும்  மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்துவைக்க மாட்டாது என்ற உண்மையை கவனத்திற் கொள்ள வேண்டும்.

முதலாளிய அரசு இயந்திரத்தை பாராளுமன்ற பாதை மூலம் அல்ல மாறாக பலாத்காரத்தின் மூலம் நொருக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தை எற்படுத்த வேண்டும் என்று மாக்சிச லெனினிய மாவோ சிந்தனை போதிக்கின்றது. கிட்டத்தட்ட சகல எகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளிலும் அரசாங்க பலம் பெரிய அளவில் ராணுவமயமாக்கப்பட்ட ஏகாதிபத்திய காலகட்டத்தில் சுரண்டலை பாதுகாத்து அதன் காவல் நாயாக விளங்கும் முதலாளிய அடக்குமுறை அரசு இயந்திரத்தை தொழிலாள வர்க்கமும் அதன் நேச அணிகளும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலமே அடித்து நொருக்க முடியும். விசாலமான கிராமப் புறங்களில் புரட்கர தளங்களை தோற்றுவித்து இந்த தளப்பிரதேசங்களில் மக்கள் படையை பயிற்றுவித்து நீண்ட மக்கள் யுத்தத்தில் ஈடுபடுவதன் மூலமே தொழிலாள வர்க்கமும் அதன் நேச அணிகளும் இறுதி விடுதலையைப் பெறமுடியும்.

எனவேதான் தோழர் தமிழரசன் மாக்சிச லெனினிய மாவோ சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார். அவர் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்தார். அவரது தத்துவ வழிகாட்டியும் அவர் முன்னெடுத்த பாதையும் சரியானது மட்டுமன்றி இன்றும்கூட அவசியமானது என்பதை வரலாறு எமக்கு காட்டுகிறது. எனவே மாக்சிச லெனினிச மாவோ சிந்தனையை தத்துவ வழிகாட்டியாக கொண்டு மக்கள் யுத்தப்பாதையில் தொடர்ந்து முன்னெடுப்பதே தோழர் தமிழரசனுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருப்பதோடு தமிழக மக்களை விடுதலை செய்யும் சரியான அவசியமான வழியும் ஆகும்.






1 comment:

  1. தோழர் இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு என்ற புத்தகத்தில் தோழர் லெனின் அது எவ்வளவு பிற்போக்கான பாராளுமன்றமாய் இருந்தாலும் அதில் பங்கேற்கலாம் என்று செயலுத்தியாய் கூறுகிறாரே அதைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

    ReplyDelete