Wednesday, January 30, 2019

•காந்தி மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார்

•காந்தி மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார்
யாழ்ப்பாணத்தில் காந்தி சுடப்பட்டார்
1927ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்ததாக கூறுகின்றார்கள்.
இந்தியாவில் மீண்டும் இந்து வெறியர்களால் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால் அவர் வேறு வழியின்றி இன்று மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார்.
யாழ் இந்திய தூதர் தன் நினைவு தினத்தை கொண்டாடியதையும் அவர் மேலும் 20 காந்தி சிலைகளை நிறுவ இருப்பதையும் அறிந்து மிக்க மகிழ்வுடன் அவர் யாழ்ப்பாணம் வந்தார்.
ஆனால் வரும் வழியில் காணாமல்போனவர்களின் உறவுகள் 580 நாட்கள் அகிம்சை வழியில் போராடுவதையும் கேப்பாப்புலவு மக்கள் 700 நாட்கள் போராடி வருவதையும் கண்டு திடுக்குற்றார்.
“வெள்ளைக்காரன் கூட என் அகிம்சை போராட்டத்தை மதித்தானே. ஆனால் இவர்கள் ஏன் தங்கள் சொந்த மக்களின் போராட்டத்தை மதிக்கவில்லை?” என்று தனக்கு தானே ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டார்.
இது பற்றி தனக்கு விழா நடத்திய யாழ் இந்திய தூதரிடம் கேட்க வேண்டும் என விரும்பினார். அதற்கு முன் தனக்கு மாலை அணிவித்த யாழ் மேயருக்கு நன்றி சொல்ல விரும்பினார் காந்தி.
யாழ் மேயர் அலுவலகத்திற்கு சென்று “நான் காந்தி வந்திருக்கிறேன்”என்றார்.
யாழ் மேயர் - எந்த காந்தி?
காந்தி - இன்று காலை இந்திய தூதருடன் சேர்ந்து மாலை போட்டீர்களே. அந்த காந்திதான்.
யாழ் மேயர் - ஓ! அதுவா? இந்திய தூதர் எப்ப எதற்கு அழைத்தாலும் போய் கலந்து கொள்ள வேண்டும் என்று என்ட சேர் சொல்லியிருக்கிறார். அதுதான் வந்தனான்.
காந்தி – யார் உங்கட சேர்?
யாழ் மேயர் - அவரை தெரியாதா? அவர்தான் சுமந்திரன் சேர். அண்மையில் ரணிலுக்காக நீதிமன்றம் சென்று ஜனநாயகத்தை நிலை நாட்டியவர். இலங்கையின் பிரபலமான சட்டத்தரணி.
காந்தி- அப்படியா தம்பி. மிக்க மகிழ்ச்சி. உங்கட சுமந்திரன் ஏன் இந்த கேப்பாப்புலவு மக்களுக்காக நீதிமன்றம் செல்லவில்லை? நீங்க கூட எனக்கு மாலை அணிவித்தீர்கள். ஆனால் என் வழியில் போராடும் அந்த மக்களுக்கு சென்று ஆதரவு தெரிவிக்கவில்லையே?
யாழ் மேயர் - அதெல்லாம் எனக்கு தெரியாது. அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வந்திடும் என்று எங்கட தலைவர் அறிக்கை விட்டுள்ளதை நீங்க படிக்கவில்லையா?
காந்தி – யாரப்பா அந்த உங்கட தலைவர்?
யாழ் மேயர் - அவரை தெரியாதா? அவர்தான் ஈழத்து காந்தி சம்பந்தர் அய்யா.
காந்தி – என்னது ஈழத்து காந்தியா? அவர் செய்த ஒரு அகிம்சை போராட்டத்தை கூறும் பிளீஸ்
யாழ் மேயர் - “புலிகள் பயங்கரவாதிகள். அவர்களை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை” என்று பாராளுமன்றத்திலேயே தைரியமாக கூறியவர் எமது தலைவர் சம்பந்தர் அய்யா.
காந்தி – அப்படியென்றால் புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு தமிழ்செல்வனுக்கு பின்னால் பைல் தூக்கி கொண்டு திரிந்தவர் வேற சமபந்;தர் அய்யாவா? அதுமட்டுமல்ல 1966ல் தமிழரசுக்கட்சியினர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தியபோது உங்கட சம்பந்தர் அய்யாவையும் பொலிசார் கைது செய்தாங்க அப்ப உங்கட அய்யா தனக்கும் இந்த போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு விடுதலை பெற்றவராச்சே!
யாழ் மேயர் - உப்படியெல்லாம் குண்டக்க மண்டக்க கேட்க கூடாது. அப்புறம் நான் சோத்துக்கு என்ன செய்வது? எனக்கு சோறுதான் முக்கியம்.
காந்தி- உமக்கு சோறுதான் முக்கியம் என்று தெரியுது. அதுக்கு என்னை ஏன் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறீர்? சரி பரவாயில்லை. பக்கத்திலை நிற்பவர் யார்?
யாழ் மேயர் - மாகாணசபை அவைத் தலைவர் சிவஞானம் இவரும் உங்களுக்கு மாலை போட்டவர்.
காந்தி - ஓ! அவரா? நான் தமிழ் மக்களின் எளிமையை பார்த்து மேல் சட்டை போடுவதை கைவிட்டவன். ஆனால் இவரோ தமிழ் மக்களின் பணத்தில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியில் ஆடம்பர கதிரை வாங்கியவராச்சே. அதுவும் ஒன்று போதாது என்று இரண்டு கதிரை வாங்கியவராச்சே.
சிவஞானம் - அய்யா அது வந்து …
காந்தி – பேசாதையும். அது மட்டுமன்றி நீர் உமது குடும்ப உறுப்பினர்களை உதவியாளர்கள் என்று பதிவு செய்து சம்பளம் பெற்றதையும் நான் அறிவேன்.
“தமிழ் மக்களை ஏமாற்றும் உங்களை சந்திக்க வந்தது பெரிய பாவமாக கருதுகிறேன். உங்களுடன் இனி பேச நான் விரும்பவில்லை. நான் இந்திய தூதரை சந்தித்து நியாயம் கேட்க வேண்டும்” என்று கூறிவிட்டு யாழ் இந்திய தூதரை சந்திக்க காந்தி சென்றார்.
காந்தி- நான் காந்தி வந்திருக்கிறேன்
இந்திய தூதர் - எந்த காந்தி? எனக்கு சோனியா காந்தி தெரியும். ராகுல் காந்தி தெரியும். இப்ப பிரியங்கா காந்தியையும் தெரியும்.
காந்தி - இன்று காலை யாழ் மருத்துவமனைக்கு முன்னால எனக்கு மாலை அணிவித்தீர்களே. வடக்கு கிழக்கு முழுவதும் எனது 20 சிலைகளை நிறுவப் போவதாக கூறினீர்களே?
இந்திய தூதர் - ஓ! அதுவா? இந்திய உளவுப்படை றோ காரன்கதான் செய்யச் சொன்னாங்க செய்தேன். இந்த மக்கள் மீண்டும் ஆயுதத்தை தூக்கக்கூடாது என்பதற்காக இதை செய்யச் சொன்னாங்க.
காந்தி - இந்த மக்கள் ஆயுதம் தூக்கினால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
இந்திய தூதர் - இந்த மக்கள் ஆயுதம் தூக்கினால் நாங்க இலங்கையை ஆக்கிரமிக்க முடியாது. அதுமட்டுமல்ல இவங்களைப் பார்த்து தமிழ்நாட்டிலும் ஆயுதப் போராட்டம் வரும். அப்படி வந்தால் இந்தியா சுக்கு நூறாகி விடும் அல்லவா.
காந்தி – ஓ! அப்ப நீங்க உங்கட நலனுக்காகதான் என்ர சிலையை வைத்து விழா நடத்துறீங்க. சரி. பரவாயில்லை. அப்ப என்ர வழியில போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம் அல்லவா?
இந்திய தாதர் - இந்த மக்களின் தலைவர்களே இந்த மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அப்புறம் நாம் எதற்காக குரல் கொடுக்க வேண்டும்?
காந்தி- அப்படியில்லை தூதரே. அகிம்சை வழியில் போராடும்போது அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வார்கள்? மீண்டும் ஆயுதத்தைதானே தூக்குவார்கள்.
இந்திய தூதர் - அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அவர்கள் ஆயுதம் தூக்கினால் மீண்டும் இலங்கை அரசு மூலம் ஆயிரக் கணக்கில் கூட்டுக் கொல்வோம்.
காந்தி – உங்களோடு பேசி பயன் இல்லை. நான் விரும்பிய இந்தியா இல்லை இது. நான் இந்த மக்களுடன் சேர்ந்து போராடப் போகிறேன்.
இந்திய தூதர்- நீங்கள் தாராளமாக போராட்டம் நடத்தலாம். ஆனால் அதற்கு முன் ஒரு விடயம். இப்போது ஆட்சியில் இருப்பது வெள்ளைக்காரர்கள் இல்லை. கொள்ளைக்காரர்கள். அவர்கள் உங்கள் போராட்டத்தை மதிக்க மாட்டார்கள்.
காந்தி – அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் என் பேரால் நீங்கள் இந்த மக்களை ஏமாற்றுவதையும் ஆக்கிரமிப்பதையும் என்னால் அனுமதிக்க முடியாது.
இடம் - கேப்பாப்புலவு
வீதியோரத்தில் தாயுடன் படுத்திருந்த சிறுவனை தட்டி எழுப்பினார் காந்தி.
காந்தி – தம்பி ! அகிம்சை வழியில் போராடினால் தீர்வு வரும். பாராளுமன்ற பாதையில் பயணித்தால் தீர்வு வரும் என்பாங்கள். அதையெல்லாம் நம்பாதே.
சிறுவன் - ஏன் தாத்தா?
காந்தி – அந்த வழியில் போராடினால் தலைவர்களுக்கு பதவி வரும். சொகுசு பங்களா வரும். கூடவே 5 கோடி ரூபாவில் வாகனமும் வரும். ஆனால் உனக்கு தீர்வு வராது?
சிறுவன்- அப்ப என்னதான் வழி தாத்தா? எனக்கு என் சொந்த நிலம் கிடைக்காதா?
காந்தி – தம்பி அரசு என்ன மொழியில் பேசுகிறதோ அந்த மொழியில் நீயும் பேச வேண்டும். அப்பதான் அரசுக்கு புரியும்.
சிறுவன் - அப்படின்னா?
காந்தி – அரசு ஆயுத வழியில் உன்னை அடக்கினால் நீயும் அதே ஆயுத வழியில் பதில் சொல்ல வேண்டும். வேறு வழி இல்லை.
சிறுவன் - நான் ஆயுதம் தூக்கினால் குழந்தைப் போராளி என்று ஜநா கூறுமே. பயங்கரவாதி என்று இலங்கை அரசும் இந்திய அரசும் சுட்டுக் கொல்லுமே?
காந்தி – நீ 700 நாட்களாக ரோட்டில படுத்திருக்கியே. இந்த மயிராண்டிகள் எவனேனும் உனக்காக கவலைப்பட்டானா? அப்புறம் நீ ஏன் அவனுகளுக்காக கவலைப் படுகிறாய்?
கேப்பாப்புலவு சிறுவனை ஆயுதம் ஏந்தும்படி காந்தி கூறிய செய்தி யாழ் இந்திய தாதர் மூலம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பல தொலைபேசி உரையாடல்களுக்கு பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் வைத்து காந்தி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மீண்டும் புலிகள் இயக்கத்தை கட்ட முனைந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அவரது உடல் அருகில் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கி தோட்டாக்களும் இருந்ததாக இலங்கை இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால் இம்முறை காந்தி சாகும்போது “ஹரே ராம்” என்று கூறவில்லை. மாறாக “ஈழத் தமிழர்களின் போராட்டம் வெல்க” என்று கூறியதாக அருகில் இருந்த சிலர் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment