Wednesday, January 30, 2019

• தமிழின விடுதலைக்கான பாதை எது?

• தமிழின விடுதலைக்கான பாதை எது?
1948ல் இருந்து தமிழ் மக்கள் பாராளுமன்ற பாதையில்தான் பயணிக்கின்றனர். ஆனால் இதுவரை எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
1948ல் இருந்து இதுவரை பல தடவைகள் இனக்கலவரம் நடந்துள்ளது. இந்த கலவரங்கள் யாவும் இலங்கை அரசின் ஆதரவினூடே நடைபெற்றது.
1948ல் இருந்து தமிழ் மக்கள் நடத்திய அத்தனை அகிம்சைப் போராட்டமும் இலங்கை அரசினால் ஆயுத முனையில் நசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் தமிழ் இளைஞர்கள் வேறு வழியின்றி ஆயுதப் பாதையை தேர்தெடுத்தார்கள்.
இந்நிலையில் 2009ல் மாபெரும் தமிழின அழிப்புடன் ஆயுதப் போராட்டத்தை இலங்கை அரசு நசுக்கியுள்ளது.
இனி தமிழ் மக்கள் என்ன வழியை தேர்ந்தெடுப்பது?
ஏனெனில் தமிழ் இளைஞர்கள் என்ன காரணத்திற்காக ஆயுதம் ஏந்தினார்களோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்க்கப்படவில்லை.
எனவே மீண்டும் போராடுவதா அல்லது அடிமையாக கிடந்து அழிந்து போவதா என்பதே தமிழ் மக்கள் முன் உள்ள கேள்வி.
தமிழ் மக்கள் நீண்ட போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். அவர்கள் போராடி மடிந்துபோவர்களேயொழிய ஒருபோதும் அடிமைத்தனத்திற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.
சரி. போராடுவதான் என்று முடிவெடுத்துவிட்டால் இனி எந்த வழியில் போராடுவது என்ற மிகப்பெரிய கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது.
சிலர் மீண்டும் பாராளுமன்ற பாதையில் சென்று தமிழின விடுதலை பெற முடியும் என்கிறார்கள்.
அப்படியென்றால் 2009ல் இருந்து பாராளுமன்ற பாதையில் சென்று பெற்ற தீர்வு என்னவென்று கேட்டால் இவர்களிடம் பதில் இல்லை.
சரி இனியாவது இந்த வழியில் தீர்வு கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையில் பயணிப்பது என்று கேட்டாலும் இவர்களிடம் பதில் இல்லை.
அடுத்து இன்னும் சிலர் ராஜதந்திர ரீதியில் பயணித்து விடுதலை பெறலாம் என்கிறார்கள்.
பாராளுமன்ற பாதையாக இருந்தாலும் சரி அல்லது ஆயுதவழிப் பாதையாக இருந்தாலும் சரி அவற்றில் ராஜதந்திரங்கள் உண்டு. எனவே ராஜதந்திரபாதை என்று தனியாக ஒரு பாதை இல்லை. அவ் வழியில் அடையலாம் என்பதும் தவறு.
வேறு சிலர் இந்தியா மூலம் தமிழின விடுதலை பெறலாம் என கூறகிறார்கள். இதில் மூன்று வகையினர் இரக்கிறார்கள்.
முதலாவது வகையினர்- இந்தியா அருகில் இருக்கும் பெரிய நாடு. எனவே எந்தவொரு தீர்வை பெறுவதாக இருந்தாலும் இந்தியாவின் தயவு இன்றி பெறமுடியாது என்று கூறுபவர்கள்.
இரண்டாவது வகையினர் - இந்து தமிழீழம் கேட்டால் தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி அரசு நிச்சயம் உதவி செய்யும் என்று கூறுபவர்கள்.
மூன்றாவது வகையினர் - இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. எனவே இந்திய அரசு தனது நலனுக்காக தமிழீழத்தை ஆதரிக்கும் என்று கூறுபவர்கள்.
இவர்கள் மூன்று வகையாக பிரிந்து இருந்தாலும் இந்திய அரசை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே வகையைச் சேர்ந்தவர்களே.
1983ல் இருந்து இந்தியாவைப் பயன்படுத்த வேண்டும் என நினைத்து இந்தியாவுக்கு பயன்பட்டதே இவர்கள் வரலாறு.
ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி இந்திய அரசு இலங்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் பயன்பெறவில்லை. தமிழ் மக்களும் பயன்பெறவில்லை. இந்திய அரசே அதிகளவு பயன் பெற்றுள்ளது.
1983க்கு முன்னர் எமது கையில் இருந்த,
• பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது
• காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மற்றும் துறைமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.
• மன்னார் எண்ணெய்வளம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
• சம்பூரில் மின்சார நிலையம் மற்றும் 650 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது.
• புல்மோட்டை கனிமவளம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
• திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய்குதங்கள் கொடுக்கப்ட்டுள்ளன.
தமிழர்களின் இத்தனை வளங்களையும் பெற்றுக்கொண்ட இந்தியா தமிழ் மக்களுக்கு தந்தது என்ன?
தமிழ் மக்களை மேலும் அடக்கி ஒடுக்குவதற்கு இலங்கை அரசுக்கு இரண்டு யுத்தக்கப்பல்கள், மற்றும் பயிற்சிகள்.
தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு தொடர்ந்து உதவி வரும் இந்திய அரசு தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் என்று தொடர்ந்து நம்பும் முட்டாள்களை என்னவென்று அழைப்பது?
இறுதியாக ஒன்றை மட்டுமே கூறவிரும்புகிறோம்.
நாம் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால் இலங்கை அரசு வன்முறை மொழியில் பேசினால் அதே மொழியில் பதில் அளிப்பது எமக்கு தவிர்க்க முடியாததாகிறது.
மாவோ கூறியதுபோல் எம்மீது யுத்தம் திணிக்கப்பட்டால் யுத்தத்தை தவிர்ப்பதற்கான யுத்தத்தை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
தமிழின விடுதலைக்கான ஆயுதப் பாதை என்பது நாம் விரும்பி தேர்தெடுத்த பாதை அல்ல. மாறாக எம்மீது திணிக்கப்பட்டபாதை. எனவே அப் பாதையில் பயணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment