Saturday, August 29, 2020

ஒரு காலத்தில் இவர் மீது கல் எறிந்தவர்கள் இப்போது இவர் மீது பூக்களை தூவிறார்கள்.

ஒரு காலத்தில் இவர் மீது கல் எறிந்தவர்கள் இப்போது இவர் மீது பூக்களை தூவிறார்கள். இவர் அரசியலுக்கு வந்த ஆரம்ப நாட்களில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த மேலூர் சிறப்புமுகாம் முன்னால் மேடை போட்டு “சிறப்பு முகாம்களை மூட வைப்போம்” என்று பேசியது இன்றும் நன்றாக என் நினைவில் இருக்கிறது. ஆனால் துரதிருஸ்டவசமாக கடந்த 25 வருடமாக சிறப்புமுகாம்கள் மூடப்படவில்லை. இன்றும்கூட திருச்சி சிறப்புமுகாமில் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சிறப்புமுகாமையே மூட வைக்க முடியாத இவரால் ஈழத்தில் இருக்கும் தமிழர்களுக்கு என்ன உதவியை செய்துவிட முடியும் என யாராவது கேட்டுவிட முடியும். அதனால்தான் என்னவோ இப்பெல்லாம் இவர் சிறப்புமுகாம் பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டார் போலும். பரவாயில்லை. எனது வருத்தம் என்னவெனில் பலமுறை பாராளுமன்றம் சென்றுள்ளார். பலமுறை பல பிரச்சனைகள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். ஆனால் ஒருமுறைகூட இந்த சிறப்புமுகாம் பற்றி பேசவில்லை என்பதே. அல்லது, இவர் விரும்பியிருந்தால் சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக ஒரு வழக்காவது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க முடியும். ஆனால் அதைக்கூட அவர் செய்ய முனையவில்லை. 2009ல் முள்ளிவாய்க்கால் அழிவின்போது புலிகள் சில தமிழக தலைவர்களுடன் பேச முயன்றபோது அவர்களின் தொலைபேசிகள் அணைந்திருந்ததாக கூறுகின்றனர். அவ்வாறு அணைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகளில் இவருடைய தொலைபேசியம் ஒன்று என்று கூறுகின்றனர். அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தமிழர் சிந்திய ரத்தம் காயுமுன்னரே இவர் இலங்கை வந்து மகிந்த ராஜபக்சாவுடன் கைகுலுக்கி பரிசில்கள் பெற்றுச் சென்றது ஈழத் தமிழர் மனங்களில் ஆறாத வேதனையை கொடுத்தது. அதைவிட ஈழத் தமிழின படுகொலைக்கு உதவிய அதே காங்கிரஸ் கட்சியுடன் இவர் கூட்டுச் சேர்ந்திருப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கொடுத்தது. இது குறித்து கேட்டபோது “இப்போது இந்துத்துவா அபாயம் இருக்கிறது. எனவே அதனை முறியடிக்க காங்கிரஸ் உடன் கூட்டுச் சேர்வது அவசியம்” என்று விளக்கம் தந்தார். ஆனால் அதே காங்கிரஸ் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தாமே காரணம் என்று பாஜக வுக்கு போட்டியாக உரிமை கோருகிறது. இதன் மூலம் இந்துத்வாவை எதிர்ப்பதற்கான தார்மீக தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது. எனவே இனி இவர் என்ன கூறப்போகிறார்? ஆனால் இவ்வாறான சந்தர்ப்பவாதக் கூட்டணியை இவர் மேற்கொள்வது இவரின் தவறு அல்ல. மாறாக இவர் தேர்ந்தெடுத்த தேர்தல் பாதையின் விளைவு ஆகும். Image may contain: 1 person, standing and outdoor

No comments:

Post a Comment