Thursday, January 30, 2020

•நான் ஏன் எழுதுகிறேன்?

•நான் ஏன் எழுதுகிறேன்? எனது எட்டு வருட சிறைவாழ்வை முடித்துக்கொண்டு சிறப்புமுகாமில் இருந்து நான் விடுதலை பெற்றபோது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறுமி “ எல்லோரும் விடைபெறும்போதும் கவலைப்படாதே உன்னை விரைவில் விடுதலை செய்ய உதவுவேன் என்பார்கள். ஆனால் அது என்னை ஆறுதல்படுத்த அவர்கள் கூறும் வார்த்தைகள் என்பதை அறிவேன். ஆனால் நீங்கள் அவ்வாறு கூறாவிட்டாலும் நீங்கள்தான் நிச்சயம் என் விடுதலைக்கு உதவுவீர்கள் என நம்புகிறேன்” என்றாள். அதேபோன்று மண்டபம் அகதிமுகாமில் இருக்கும் ஒரு பெண் தனது கணவருக்கு இன்னும் அகதிப் பதிவு கிடைக்கவில்லை. தாசில்தாரிடம் கேட்டால் கலெக்டரிடம் கேட்கச் சொல்கிறார். கலெக்டரிடம் கேட்டால் கியூ பிராஞ் பொலிசிடம் கேட்கச் சொல்கிறார். கியூ பிராஞ்சிடம் கேட்டால் தாசில்தாரிடம் கேட்கச் சொல்கிறார்கள் என்று கவலையுடன் கூறுகிறார். சேலம் அகதிமுகாமில் இருக்கும் ஒரு பெண் “நாம் தமிழர்” கட்சியைச் சேர்ந்த தமிழக தமிழர் ஒருவர் தன்னை திருமணம் செய்தார் என்றும் இப்போது வரதட்சனை கேட்டு அவரும் அவரின் தாயாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் கூறுகிறார். அகதி ஒருவர் தான் சினிமாவில் உதவி இயக்குநராக இருப்பதாகவும் தன் மகள் ஒரு படத்தில் நடித்திருப்பதாகவும் தற்போது தன் மகளை கியூ பிராஞ் பொலிஸ் கடத்தி சென்று இரகசியமாக அடைத்து வைத்திருப்பதாகவும் மகள் விடுதலையாவதற்கு என்னை உதவும்படி கேட்கிறார். தாங்கள் “அகதிகள் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு” ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் தமக்கு நான் வழி காட்ட வேண்டும் என்று விழுப்புரம் அகதி முகாமில் இருந்து அகதிகள் கேட்கிறார்கள். இவ்வாறு தினமும் பலர் பலவிதமான பிரச்சனைகளுடன் என்னை தொடர்பு கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் என்னிடம் கேட்கும் ஒரே உதவி தங்கள் பிரச்சனையை என் முகநூலில் எழுதும்படி மட்டுமே. நான் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. நான் மாகாணசபை உறுப்பினர் இல்லை. நான் பிரதேசசபை உறுப்பினர்கூட இல்லை. ஆனாலும் இவர்கள் என்னிடம் வந்து தங்கள் குறைகளை கூறுகிறார்கள். நான் ஊடகம் நடத்தவில்லை. எந்த ஊடகத்திலும் சென்று பங்குபற்றுவதில்லை. என் முகநூலில் மட்டுமே எழுதுகிறேன். இருப்பினும் நான் எழுதினால் தங்கள் குறைகள் நீங்கும் என இவர்கள் நம்பி என்னிடம் வந்து கூறுகிறார்கள். நேர வித்தியாசம் தெரியாமல் சிலவேளை நள்ளிரவில்கூட நித்திரையில் இருக்கும் என்னை ஏழுப்பி வைத்து தங்கள் குறைகளை சொல்வார்கள். அப்போது என்னால் அவர்களுக்கு செய்யக்கூடிய ஒரே உதவி அவர்கள் கூறுவதை பொறுமையாக கேட்பதே. எனக்கு இவர்களின் குறைகளை பொறுமையாக கேட்பதோ அல்லது அதற்காக குரல் கொடுத்து எழுதுவதோ ஒரு சுமையாக தோன்றவில்லை. மாறாக இதை நான் முகநூலில் லைக் வாங்குவதற்காக எழுதுவதாக சுமந்திரனின் விசுவாசி ஒருவர் கூறும்போதுதான் கொஞ்சம் வலிக்கிறது. லைக்கை வைத்து ஒரு சிங்கிள் டீ யைக்கூட குடிக்க முடியாது என்பது மட்டுமன்றி சுமந்திரன் போன்ற அரசியல் தலைவர்கள் பொறுப்பாக நடந்தால் இவர்கள் ஏன் என்னிடம் வந்து தங்கள் குறைகளை கூறப்போகிறார்கள் என்பதுகூட இந்த விசுவாசிக்கு புரியவில்லையே! குறிப்பு - இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும்போது சுமந்திரனின் தொகுதியில் உள்ள கரவெட்டி கிராம சுடலை (மயான)ப் பிரச்சனை தொடர்பாக என்னை எழுதுமாறு வந்த செய்தி இது. "You know sonappu was with bushes for a long time. But its well developed recently. Really it is great work, but some haters writing against to it.. I expect you to write something on this" Image may contain: Balan Chandran, sitting

No comments:

Post a Comment