Thursday, January 30, 2020

வேலை நேரம் குறைக்க முடியாதா?

வேலை நேரம் குறைக்க முடியாதா? குரங்கில் இருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம் முக்கியமானது என்கிறார் எங்கெல்ஸ் மனிதன் இன்று அடைந்திருக்கும் அத்தனை முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக இருப்பது மனிதனின் உழைப்பே. உலகின் உண்மையான உன்னதமான அதிசயம் எனில் அது உழைப்பு மட்டுமே என்று கூறமுடியும். ஆனால் வாழ்வதற்காக உழைக்க ஆரம்பித்த மனிதன் இன்று உழைப்பதற்காக வாழவேண்டிய நிலையில் இருக்கிறான். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் உழைத்தாலே போதுமானது. ஆனால் எட்டு மணி நேரம் உழைத்தும் மனிதனால் சந்தோசமாக வாழ முடியவில்லை. ஏனெனில் அவனது உழைப்பு சுரண்டப்படுகிறது. சுரண்டப்படும் செல்வம் முழுவதும் மக்கள் தொகையில் வெறும் 3 % மான முதலாளிகளிடம் சிக்கியுள்ளது. இந்த செல்வத்தை பறித்து மக்களுக்கு பங்கிட வேண்டிய அரசுகளோ உழைக்கும் மக்களுக்கு சிறிய சம்பள உயர்வை மட்டும் வழங்கி சமாளிக்க முயல்கிறது. வருடா வருடம் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. இந்த விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப உழைப்பாளர்களின் சம்பளம் அதிகரிப்பதில்லை. இதனால் அம் மக்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறை இடைவெளியானது வருடா வருடம் அதிகரித்து வருகிறது. மக்களால் சமாளிக்க முடியாத நிலை தோன்றி வருகிறது. இதனால் உழைக்கும் மக்கள் தமது உரிமைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் அரசு அவர்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்குகின்றது. அரசுகள் உழைக்கும் மக்களின் சம்பளத்தை அவ்வப்போது அதிகரித்து வருகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் வேலை நேரத்தை குறைக்க முன்வருவதில்லை. அதேபோல் உழைக்கும் மக்களின் தொழிற் சங்கங்களும் சம்பள உயர்வு கேட்டு போராடி வருகின்றனவேயொழிய வேலை நேரத்தை குறைக்கும்படி கோருவதில்லை. இலங்கை ஜனாதிபதி கோத்தபாயா ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்போவதாக கூறுகிறார். மலையக தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவதாகவும் அறிவிக்கிறார். அலுவலகங்களுக்கு திடீர் விசிட் அடித்து வேலை நேரத்தில் நித்திரை கொள்ளும் பணியாளர்களை பிடிக்கிறார். ஆனால் அவர்களின் வேலை நேரத்தை குறைத்து அவர்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்க முடியும் என்பதை உணர மறுக்கிறார். இன்று இருக்கும் எட்டு மணி வேலை நேரம் என்பது தானாக கிடைத்தது இல்லை. 12 மணி வேலை நேரத்திற்கு எதிராக அமெரிக்க உழைக்கும் மக்கள் ரத்தம் சிந்தி போராடிப் பெற்றதே இந்த எட்டுமணி வேலைநேர உரிமை. தற்போது சுவீடன் நாட்டில் வேலை நேரம் 6 மணியாக இருப்பதாக கூறுகிறார்கள். அதேபோல் பின்லாந்தும் தன் நாட்டில் வேலை நேரத்தை 6 மணி நேரமாக்கப் போவதாக அறிவித்துள்ளது. வேலை நேரத்தை எட்டு மணியில் இருந்து 6 மணியாக குறைப்பதால் முதலாளிகளுக்கு இழப்பு ஏற்படும். எனவே அதற்கு அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் 6 மணி நேர வேலை என்பது தொழிலாளர்களுக்கு அதிக சுறுசுறுப்பை கொடுக்கிறது என்றும் இதனால் முதலாளிகளுக்கு உற்பத்தியில் எந்த இழப்பும் ஏற்படாமல் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே உழைக்கும் மக்களின் வேலை நேரத்தை முதலாளிகளின் எதிர்ப்பு இன்றி அரசுகளால் 6 மணி நேரமாக குறைக்க முடியும். குறைக்க வேண்டும். குறிப்பு - பின்லாந்து அரசு வேலை நேரத்தை 6 மணியாக குறைப்பதோடு மாணவர்களின் கல்வி நேரத்தையும் 4 மணி நேரமாக குறைக்கவுள்ளது. நல்ல முடிவு. இதனை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும். Image may contain: 1 person, smiling, possible text that says 'வாரத்திற்கு 4 நாட்கள் தினமும் 6 மணிநேரம் மட்டுமே வேலை பின்லாந்து பிரதமர் சன்னா அதிரடி உத்தரவு. மற்ற நேரத்தை குடும்பத்துடன் செலவிட வேண்டும். ம்.'

No comments:

Post a Comment