Sunday, November 29, 2020

தோழர் பிரடெரிக் எங்கெல்சின் 200வது பிறந்தநாள்.

•தோழர் பிரடெரிக் எங்கெல்சின் 200வது பிறந்தநாள். . தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார். ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார். அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் அவர்களின் 200வது பிறந்ததினம் இன்று ஆகும். உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார். தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார். மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார். எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment