Sunday, November 29, 2020

செங்கொடியும் செந்தூரனும்

•செங்கொடியும் செந்தூரனும் இருவரும் தமிழர்கள். ஒருவர் ஈழத் தமிழர். மற்றவர் தமிழக தமிழர். இருவரும் சிறையில் உள்ள தமிழர் விடுதலைக்காக தமது உயிரை அர்ப்பணித்தவர்கள். தோழர் செங்கொடி ஏழுதமிழர் விடுதலைக்காக தீக்குளித்து உயிர் துறந்தார். மாணவன் செந்தூரன் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக ரயில் முன் பாய்ந்து உயிர் துறந்தார். செங்கொடி உயிர் துறந்த இடத்தில் அவருக்கு நினைவு சின்னம் எழுப்பி வருடா வருடம் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். ஆனால் மாணவன் செந்தூரன் உயிர் துறந்த தண்டவாளத்தில் இன்னமும் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவன் விரும்பிய தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை பெற்று வரவில்லை. எமது தலைவர்கள் இந்திய தூதருடன் சேர்ந்து 20 காந்தி சிலைகளை வைக்க எடுக்கும் அக்கறையை இந்த மாணவனுக்கு ஒரு நினைவுக் கல்லைக்கூட வைக்க காட்டவில்லை. எமது தலைவர்கள் அரசியல் கைதிகளையும் மறந்து விட்டார்கள் அதற்காக உயிர் விட்ட மாணவன் செந்தூரனையும் மறந்து விட்டார்கள். அவர்களது கவலை எல்லாம் தங்கள் பதவியை எப்படிக் காப்பாற்றுது, சொகுசு பங்களா வாகனம் எப்படி வாங்குவது, தமக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெறுவது என்பது பற்றியே இருக்கிறது. தம்பி செந்தூரா! எங்களை மன்னித்துவிடு! மாஸ்ரர் படம் வரப்போகுது அதுக்கு கட்அவுட் கட்ட வேண்டும். அப்பறம் மாகாணசபை எலெக்சன் வருது தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்ட வேண்டும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு அதில் உன்னை நினைக்க ஏது நேரம்? ஆனாலும் ஒரு விடயத்தில் நீ ஆறுதல் கொள்ளலாம் ஏனெனில் நல்லவேளை 2015ல் நீ செத்துவிட்டாய் இல்லையேல் ஏன் கோத்தபாயா வரும்போது சாகவில்லை என்று கேட்டிருப்பார்கள். அல்லது, ஒரு கட்சி தூண்டிவிட்டுத்தான் செத்தாய் என்று கூறியிருப்பார்கள். குறிப்பு- அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 26.11.2015 யன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரன் நினைவாக எழுதும் குறிப்பு இது.

No comments:

Post a Comment