Wednesday, March 4, 2015

சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து- (Part-2)

சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து- (Part-2)

சிங்கள அரசு தமிழர்களை விடுதலை செய்தாலும் தமிழக அரசு விடுதலை செய்ய மறுக்கிறது

அண்மையில் இலங்கையில் பதவியேற்ற புதிய ஜனாதிபதி மைத்திரி அவர்கள் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக உறுதியளித்துள்ளார். அவருடைய உறுதி மொழி ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் என்ன ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் யார் பதவிக்கு வந்தாலும் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய மறுக்கின்றார்கள். விடுதலை செய்வது குறித்து எந்த உறுதிமொழியைக்கூட தர மறுக்கிறார்கள். தமிழ் அகதிகளை தொடர்ந்தும் அடைத்து வைத்து சித்திரவதை செய்யவே முனைகின்றனர். சிங்கள இனவாத அரசு தமிழர்களை விடுதலை செய்தாலும்கூட தமிழ்நாடு அரசு தமிழ் அகதிகளை விடுதலை செய்ய மறுப்பது என்பது ஈழதமிழ் மக்கள் நினைத்துக்கூட பார்த்திhhத கொடுமை.

தமிழ்நாட்டில் ஜெயா அம்மையாருக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் பல வருடங்களாக கறுப்பு பூனை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இருவருக்கும் புலிகள் இயக்கத்தால் உயிருக்கு ஆபத்து எனக்கூறியே அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. புலிகள் அமைப்பு பலமாக இருந்த காலத்தில்கூட இந்த இருவரையும் கொல்வதற்கு அவர்கள் ஒருபோதும் முனைந்தது கிடையாது. அப்படியிருக்க இன்று புலிகள் இல்லாத நிலையிலும்கூட இவர்கள் இருவரும் தமது உயிருக்கு புலிகளால் ஆபத்து என்று கூறி கறுப்பு பூனை பாதுகாப்பை பெற்று வருவது கேவலமானது.
இவர்கள் இருவரும் தமது சுயநலன்களுக்காக புலிகள் அமைப்பிற்கு எதிராக செயற்பட்டபோதும்கூட புலிகள் அது குறித்து பொது வெளியில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனமே கடைப்பிடித்தார்கள். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களால்; வழங்கப்பட்ட பணத்தைக்கூட கலைஞர் கருணாநிதி வழங்காமல் சுருட்டியபோதும்கூட புலிகள் அது குறித்து பொது வெளியில் எதுவும் கூறியதில்லை. அப்படியிருந்தும்கூட கொஞ்சம்கூட மனிதாபிமானம் இன்றி கலைஞரும் ஜெயா அம்மையாரும் புலிகளால் தமது உயிருக்கு ஆபத்து எனக்கூறி கறுப்பு பூனை பாதுகாப்பை பெற்று வருகின்றனர்.

2009ல் புலிகள் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்னரும்கூட அவர்களில் பலர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். கலைஞரின் மகள் கனிமொழியின் ஏற்பாட்டின் பேரிலேயே வெள்ளைக்கொடியுடன் அவர்கள் சரணடைந்தபோதும் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதை மாகாணசபை உறுப்பினர் அனந்தி அவர்கள் அண்மையில் தெரிவித்துள்ளார். உண்மையில் கலைஞரும் அவர் மகள் கனிமொழியும் போர்க் குற்றத்திற்கு உடந்தையானவர்கள் என்பதற்காக விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் கலைஞரோ ஒரு புறம் தமிழீழத்திற்காக டெசோ மாநாடு நடத்திக்கொண்டு; மறு புறத்தில் புலிகளால் ஆபத்து என்று  கறுப்பு பூனை பாதுகாப்பை பெற்று வுருகிறார்.

ஜெயா அம்மையாரோ சட்டசபையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல தீர்மானங்களை நிறைவேற்றி ஈழத் தாய் பட்டம் பெற்றுள்ளார். புலிகள் தற்போது இல்லை என்பதும் அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதும் நன்கு தெரிந்தும் கறுப்புபூனை பாதுகாப்பை தொடர்ந்து பெறுவதற்காக புலிகளால் ஆபத்து என்கிறார். அதுமட்டுமல்ல அவர் மீதான ஊழல் வழக்கில்  தீர்ப்பின்போது நீதிமன்றத்தை மாற்றுவதற்காகவும்கூட புலிகளால் தனக்கு ஆபத்து என்று முறையிட்டார். இவர் வேண்டுமென்றே பொய் சொல்கிறார் என்று நன்கு தெரிந்தும் யாருமே இது குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை. குறிப்பாக புலிகளின் பிரதிநிதியாக தன்னைக்காட்டிக் கொள்ளும் “நாம் தமிழர்” சீமான் கூட இதனைக் கண்டிக்காதது ஆச்சரியமே!



புலிகள் மீதான தடையும் தொடரும் சிறப்புமுகாம் கொடுமையும்.

ஜெயா அம்மையார் தமது கறுப்பு பூனை பாதுகாப்பை தொடர்ந்து பெறுவதற்காகவே புலிகள் மீதான தடையை நீடிக்க ஆதரவு வழங்கி வருகிறார். அதேபோல் கலைஞர் கருணாநிதியும்கூட தமது கறுப்பு பூனை பாதுகாப்பை தொடருவதற்காகவே இல்லாத புலிகள் அமைப்பு மீதான தடைக்கு எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் இருக்கிறார். இதில் மிகக்கொடிய கொடுமை என்னவெனில் புலிகளுக்காக குரல் கொடுப்பதாக கூறும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்களும்கூட கலைஞரும் ஜெயா அம்மையாரும் தமது கறுப்பு பூனை பாதுகாப்பை தொடருவதற்காகவே இப்படி புலிகளை தடைசெய்கின்றனர் என்பதைக்கூட மக்களுக்கு தெரிவிப்பதில்லை.

கலைஞரும் ஜெயா அம்மையாரும் தமது சுயநலன்களுக்காக எப்படி புலிகள் மீதான தடையை நீடித்து வருகின்றனரோ அதேபோல் புலிகள் மீதான தடைக்கு உதவும் முகமாக சிறப்பு முகாமையும் மூடாமல் இருந்து வருகின்றனர். அப்பாவி அகதிகளை பிடித்து புலிகள் எனக் கணக்கு காட்டி சிறப்பு முகாமில் அடைத்து வருகின்றனர். தமது கறுப்பு பூனை பாதுகாப்பிற்காக அப்பாவி அகதிகளை பலி கொடுக்கின்றனர். ஆனால் இவர்கள் தான் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பவர்கள் என்று இன்றும்கூட  பல்லாயிரம் தமிழர்கள் அப்பாவித்தனமாக நம்புகின்றார்கள்.

முன்னாள் காவல்துறை அதிகாரியின் வாக்குமூலம்

ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் ஒரு அப்பாவி எனப் பலர் ஆரம்பம் முதல் கூறிவந்தனர். ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்திய அரசும் ஏற்கவில்லை. ஆனால் அந்த வழக்கை விசாரணை செய்த ஒரு அதிகாரி  பேரறிவாளனின் வாக்கு மூலத்தை தான் மாற்றி பதிவு செய்ததால்தான் அவர் தண்டனைக்குள்ளானார் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பின்பே  அப்பாவி பேரறிவாளன் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டார் என்பதை அனைவரும் ஒத்துக்கொண்டனர். இருந்தும் பேரறிவாளன் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் அவர் ஒரு அப்பாவி என்பது ஒரு அதிகாரி மூலம் வெளி உலகிற்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சிறப்புமுகாம் அகதிகளைப் பொறுத்தவரையில் ஒரு உயர் காவல்துறை அதிகாரியே “அகதிகள் அப்பாவிகள் என்றும் சட்ட விரோதமாக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தும்கூட அது குறித்து யாருமே அக்கறை கொள்ளாதது பேரறிவாளனைவிட மோசமான நிலையிலேயே ஈழ தமிழ் அகதிகளின் நிலை உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

முன்னாள் காவல்துறை தலைவரான வைகுந் அவர்கள் “நான் சமாளித்த சவால்கள்” என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் சிறப்பு முகாம் குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார். ஈழ அகதிகளை அடைத்து வைப்பது பற்றி அவர் குறிப்பிடுகையில் “ வெளிநாட்டை சேர்ந்தவர்களை இங்கு வைத்து நாம் பாதுகாக்கும்போது அதை முழுமையாக உறுதி செய்வதற்கு சட்டரீதியிலான அதிகாரம் நமது காவல்துறைக்கு தரப்படவில்லை என்பதை நாம் இங்கு குறிப்பாக கவனிக்க வேண்டும். வெளிநாட்டவர் சட்டத்தின் 2(2)(இ) பிரிவின்படி உப்புச் சப்பில்லாத சட்டப்போர்வையில் அதுவும் ஜந்தாண்டுகள் வெளிநாட்டவரை வெளியே சுதந்திரமாக நடமாட முடியாதபடி முழுமையாக ஒரு இடத்தில் அடைத்து வைப்பதற்கு நமக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.” என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் “வெளிநாட்டவர் சட்டப்படி பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவைத் தவிர அவர்களை சிறப்புமுகாம்களில் அடைத்து வைத்திருக்க வேறு எந்த சட்டரீதியான அதிகாரத்தையும் நாம் பெற்றிருக்கவில்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில் பார்த்தால் அவர்கள் கைதிகளும் இல்லை. விசாரணைக் கைதிகளும் இல்லை. ஆகவே அவர்களை சிறைத்துறை விதிகளைக் கொண்டு எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் யதார்த்த நிலையாக இருந்தது” என்கிறார்.

வைகுந் அவர்கள் கியூபிராஞ் புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த காலத்திலேயே வேலூர் சிறப்புமுகாமில் இருந்த அகதிகள் சுரங்கம் தோண்டி தப்பி சென்றனர். இது குறித்து வைகுந் அவர்கள் தனது புத்தகத்தில் குறிப்பிடுகையில் “திப்புமகாலில் இருந்தவர்களை நான் இலங்கை தமிழர்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தேனே தவிர போராளிகள் என்றல்ல. ஒரு சாதாரண இலங்கை தமிழன் யார்? இலங்கைப் போராளி யார்? என்பதைப் பிரித்து பார்க்க நமது மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறையிடம் எவ்விதமான உறுதியான நெறிமுறைகளும் கிடையாது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். மத்திய உளவு அமைப்புகளுக்குகூட ஒரு சாதாரண அகதி யார்? தீவிரவாதி யார்? என்பதை அடையாளம் கண்டு கொள்ள எவ்விதமான உறுதியான நெறிமுறைகளும் இல்லை என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்” என்கிறார். அத்தோடு “திப்புமகால் என்பது சிறையல்ல. வெறும் சிறப்பு அகதிகள் முகாம்தான். மேலும் அதில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் எந்த சிறை விதிமுறைகளுக்கும் உட்பட்டவர்கள் அல்ல. எனினும் அதைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும், கண்காணிப்பு கோபுரங்களும், ஏ.கே47 துப்பாக்கிகளும் இருந்தன. ஆனால் இவையெல்லாம் தேவையில்லாத பயனற்ற சட்டத்திற்கு உட்படாத ஒரு பணி என்பதை நாம் ஆழ்ந்து சிந்தித்து பாhத்தால் புரியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் காவல்துறை தலைவர் வைகுந் அவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் புலிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். அவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும் கூறிகிறார். அதுமட்டுமல்ல  அடுத்தடுத்து வந்த மத்திய மாநில அரசுகள் பின்பற்றி வரும் கொள்கைகளினால் ஏற்படும் குழப்பத்திற்கு எதற்காகத் தேவையில்லாமல் பொலிஸ் மீது பழி போட வேண்டும்? எனவும் கேட்கிறார்.
முன்னாள் காவல்துறை தலைவர் மட்டுமன்றி வேலூர் சிறப்புமுகாம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட  நீதிபதி சிங்கார வேலு அவர்களும் தனது அறிக்கையில் மத்திய மாநில அரசுகள் இரண்டையுமே குற்றம் சாட்டியிருக்கிறார். இவ்வாறு காவல் துறை தலைவர் மற்றும் நீதிபதி எல்லாம் குற்றம்சாட்டியும்கூட மத்திய மாநில அரசுகள் எவ்வித அக்கறையுமின்றி சிறப்புமுகாம்களை தொடர்ந்தும் சட்டவிரோதமாக இயக்கி வருகின்றன.

அதிகாரிகளின் அதிகார துஸ்பிரயோகம்

1991ல் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின் தமிழகக் காவல்துறை நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களை மனித வேட்டையாடிய போது அதற்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பியவர் இர.சிவலிங்கம் அவர்கள். அதற்காக அவர் கைது செய்யப்பட்டு கால்களிலும் கைகளிலும் விலங்கிடப்பட்ட நிலையில் சிறையிலிடப்பட்டு வதையுற்றார். அவர் தனது சிறப்புமுகாம் கோர அனுபவத்தை  “மக்கள் மன்றம்” ஏட்டில் விபரித்து எழுதியுள்ளார். அதில் அவர் “என்னைக் கைப்பற்றி உடனடியாக காஞ்சிபுரம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டிருந்தது என்றால் நம்பமுடியவில்லை. கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் சட்டபூர்வமாக வாழ்ந்து வந்த என்னை திடீர் என்று அகதியாக்கி பொலிஸ் காவலில் அகதிகள் முகாமில் வைக்க அரசுக்கு என்ன கேடு வந்தது? இன்றுவரை இந்தக் கேள்விக்கு விடையில்லை. நான் அகதியாக இந்தியாவிற்கு வரவில்லை. அரசிடம் அடைக்கலம் கோரவில்லை. ஜந்து பைசா உதவி கோரவில்லை. எனது முந்தையர் நாட்டுக்கு என் சுயவிருப்பப்படி வந்து குடியேறி அரசாங்க அனுமதியுடன் பொதுத்தொண்டில் ஈடுபட்டிருக்கும் ஒருவனை எவ்வித எச்சரிக்கையும் ஏதுவுமின்றி சிறைபிடிக்கும் செயலை யார் செய்வார்? ஏன் செய்வார்? இந்தியா ஜனநாயக நாடுதானா? சட்டத்தையும் மனித உரிமைகளையும் மதிக்கும் நாடுதானா?” என்று கேட்கிறார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்  “தாயகம் திரும்பிய இந்தியத் தமிழர்களை தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் என்று அழைப்பதும், அவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற விஷமப் பிரச்சாரம் செய்வதும,; ஒரு முக்கிய அரசியல் பொழுது போக்காகிவிட்டது. இதனை நம்புகின்ற அரசாங்க அதிகாரிகளும் பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகளும் ஏராளம். லீனா நாயர் என்ற நீலகிரிக் கலெக்டர் இந்த விஷமப் பிரச்சாரத்தை ஆய்ந்தோய்ந்து பாராது பயங்கர புலிவேட்டை ஆடினார். பல அப்பாவி தமிழர்களை துன்புறுத்தினார். அந்த அம்மையாரின் கைங்கரியத்தால்தான் நமக்கும் சிறப்புமுகாம் செல்லும் வாய்ப்பேற்பட்டது. தாயகம் திரும்பியோருக்கு குரல் கொடுப்பதையே குற்றமாகக் கருதி நமக்கும் புலி வேஷம் போட்டு அதிகார துஸ்பிரயோகம் செய்த ஜ.ஏ.எஸ் அதிகாரிக்கு விரோதமாக நடவடிக்கை எடுக்க நமது சட்டம் எளிதில் இடந்தருவதில்லை” என்கிறார்.

தாயகம் திரும்பிய மலையக தமிழர்கள் சட்டப்படி இந்திய குடிமக்கள். அவர்களை வெளிநாட்டவர் சட்டப்படி சிறப்புமுகாமில் அடைக்க முடியாது. ஆனால் லீனாநாயர் என்ற ஒரு அதிகாரி அதுகுறித்து எந்த கவலையும் இன்றி பொறுப்பற்ற முறையில் அவர்களை சிறப்பு முகாமில் அடைத்துள்ளார் என்பதற்கு இர.சிவலிங்கம் அவர்கள் ஒரு உதாரணமாகும்.

இந்திய பிரஜைகளையும் சிறப்புமுகாமில் அடைத்த கொடுமை

தமிழக அரசு மட்டுமன்றி பல அதிகாரிகளும் பொறுப்பற்ற தன்மையுடனே செயற்பட்டுள்ளனர். அவர்கள் தாயகம் திரும்பிய தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டு தமிழர்களைக்கூட சிறப்புமுகாமில் அடைத்துள்ளனர். திருமதி வெங்கடேஸ்வரி ஒரு இந்திய பெண். அவர் மதுரையைச் சேர்ந்தவர்.  அவரையும் அந்நியர் சட்டத்தின் கீழ் செங்கற்பட்டு சிறப்புமுகாமில் சிறை வைத்தார்கள். வெங்கடேஸ்வரி தான் ஒரு இந்திய பெண் என்பதை மேலதிகாரிகளுக்கு எத்தனையோ முறையீடு செய்தும் யாரும் அதனை கவனிக்கவில்லை. இறுதியாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது விடுதலையை பெற்றார். வெங்கடேஸ்வரியை சட்ட விரோதமாக சிறை வைத்ததற்காக தமிழக அரசு ரூ.50000ம் நஷ்டஈடும்  தாசில்தார் தனது சொந்தப் பணத்திலிருந்து ஜயாயிரமும் அந்த அம்மாவுக்கு தரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது செங்கல்பட்டு சிறப்பு முகாமின் கொடுமையை ஈவிரக்கமற்ற நிர்வாகத்தை உலகுக்கு உணர்த்தியது. ஓர் இந்தியப் பெண்மணியை எப்படி அந்நியர் சட்டத்தின் கீழ் சிறைவைக்க முடியும்? இது தவறு  என்று உணர்த்துவதற்கு உயர் நீதிமன்றம் தேவையா? எவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் செங்கல்பட்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறதென்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

சட்டவிரோதமான சிறப்புமுகாம்கள்

செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட இர.சிவலிங்கம் அவர்கள் ஒரு சட்டதரணி. அவர் இந்த வெளிநாட்டவர் சட்டம் பற்றி குறிப்பிடுகையில் “அந்நியர் சட்டம் என்பது 1946ம் வருடம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. பொதுவாகவே காமன் வெல்த் நாடுகளுக்கு  உட்படாத பிற அந்நிய  பிரஜைகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதற்காக இயற்றப்பட்ட சட்டம். இச் சட்டம் இலங்கைப் பிரஜைகளையும் பாதிக்காது. ஆனால் 1958ம் ஆண்டு உள்நாட்டு அமைச்சு வெளியிட்ட அரசாணைப்படி இந்த சட்டத்தை அமுல் செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் இந்த சட்டத்தை மாநிலங்களுக்கு வழங்கிய அரசாணையும் இதை இலங்கை அகதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதும்  உள்நாட்டு வெளிநாட்டு சட்டங்களுக்கு எதிரானது என்பதும் சர்வதேச மனித உரிமைக்கும்  சர்வதேச அகதிகள் பற்றிய ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதும் சட்ட நிபுணர்களின் முடிவு. குறிப்பாக  இந்தியா இலங்கை அகதிகளுக்கும் எதிராக அமுல் நடத்த முடியாது என்பது எனது ஆணித்தரமான கருத்து. குறிப்பாக தமிழக அரசு இந்த சட்டத்தை அமுல் நடத்தும் முறை கேலிக் கூத்தானது என்பதும்  எல்லா சட்டங்களுக்கும் முரண்பாடானது என்பதும் ஜயமில்லை. இது முக்கியமான சட்டப் பிரச்சனை என்பதால் இதன் நுணுக்கங்களை மேலும் விவரிக்காமல் இத்துடன் விடுகிறேன். இந்த சட்டத்தை இவ்வாறு தமிழ்நாடு துஷ்பிரயோகம் செய்வதை இன்னும் முறையாக எவரும் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்று வாதாடவில்லை. அவ்வாறு செய்யின் இன்று சிறப்பு முகாம்களில் உழலும் பலருக்கு விடிவேற்படும் என்பதில் ஜயமில்லை” என்கிறார். தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தொடர்பாக அனுதாபம் உள்ள பல சட்டத்தரணிகள் இருக்கின்றனர். அவர்களில் யாராவது ஒருவர் இதனை உச்சநீதிமன்றம் கொண்டு செல்வாரேயானால் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு நிச்சயம் விடுதலை கிட்டும் வாய்ப்புள்ளது. யாராவது செய்வார்களா?

தாயகம் திரும்பியோரும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர்

இர.சிவலிங்கம் அவர்கள் தாயகம் திரும்பிய மலையக தமிழர். அவர் ஊட்டியில் உள்ள தாயகம் திரும்பிய மக்களுக்காக பாடுபட்டவர். அவர் எந்த வன்முறை அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டவரல்ல. ஜனநாயக அமைப்பில் நம்பிக்கை கொண்டவர். அவர் ஒரு படித்த சட்டத்தரணியும்கூட. அவரை வயதானவர் என்றும்பாராமல் சிறப்புமுகாமில் அடைத்தனர். அவரை விடுதலை செய்யும்படி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஸ்ணய்யர் கேட்டுக்கொண்டார். அப்போதைய இலங்கை அமைச்சர் தொண்டமான் அவர்களும் கேட்டுக்கொண்டார். பல மனிதவுரிமை அமைப்புகள் கேட்டுக்கொண்டன. இருந்தும் தமிழக அரசு அவரை விடுதலை செய்ய மறுத்தது. அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் பொலிஸ் அவரை சட்டவிரோதமாக சங்கிலியால் பிணைத்து துன்புறுத்தியது. இதுகுறித்து அவரது மனைவியினால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்பு, தான் தண்டிக்கப்படலாம் என அச்சப்பட்ட நிலையிலேயே அவரை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வந்தது. அதிகாரிகளின் அதிகார துஸ்பிரயோகத்திற்கு இர.சிவலிங்கம் அவர்கள் ஒரு சிறந்த உதாரணமாகும்.

தாயகம் திரும்பிய தமிழர்களும் சட்டவிரோதமாக செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டமைக்கு இன்னொரு உதாரணம் முனியம்மா குடும்பமாகும். முனியம்மா மதுரையைச் சேர்ந்தவர். அவரது கணவன் பெயர் பெருமாள். அவர்கள் மகன் பெயர் செல்லத்துரை. இந்த மூவருமே தாயகம் திரும்பிய இந்தியர்கள். பெருமாள் மதுரை மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரது மனைவியும் மகனும் எந்தக் காரணமும் இன்றி செங்கற்பட்டு சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களோடு சேர்ந்து மேலும் மூன்று தாயகம் திரும்பியோரும் பத்து மாதங்களுக்கு மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பத்து மாதங்களுக்கு பிறகுதான் “கியூ” பிரிவு மேதாவிகள் இந்த ஜவரும் தாயகம் திரும்பியோர்கள், ஆதலால் அவர்களை சிறப்புமுகாமில் அடைத்து வைக்க முடியாது என்று கண்டு பிடித்தனர். அதன் பின்னர் அந்த ஜவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் பரம ஏழைகள். அவர்கள் ஊரான மதுரைக்குத் திரும்பிச் செல்ல அவர்களிடம் எந்த வசதியும் இல்லை. பஸ் கட்டணம் செலுத்தப் பணமில்லை. முறைப்படி எங்கிருந்து கொண்டு வரப்பட்டார்களோ அங்கு கொண்டுபோய்விட வேண்டும். ஆனால் பத்து மாதம் தவறுதலாக அவர்களைச் சிறைப்படுத்தி கொடுமை செய்து விட்டோமே என்று எவ்வித மனச்சாட்சியுமற்ற “கியூ” பிரிவு அதிகாரிகள் அந்த ஏழைகள் வீடு திரும்புவதற்கான எவ்வித உதவியும் செய்யவில்லை. அவர்கள் உள்ளேயிருந்த அகதிகளிடம் கெஞ்சி மன்றாடி பணந்திரட்டி ஊர் போய்ச் சேர்ந்தனர். என்ன கொடுமை இது? இந்த அதிகாரிகளுக்கு கொஞ்சம்கூட இரக்கம் இல்லையா?

சிறப்புமுகாமில் புலிகளே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழ்நாடு அரசு சொல்லிவருகிறது. அவ்வாறு வைக்கப்பட்டிருப்பவர்கள்  புலிகள் என்றும் அவர்களை வெளியே விட்டால் தமிழ்நாடு அமைதிக்கு ஆபத்து ஏற்படும் என கியூ பிரிவு பொலிசார் தெரிவிக்கின்றனர். ஆனால் கியூ பிரிவு தலைவராக இருந்த முன்னாள் காவல்துறை தலைவர் வைகுந் அவர்களோ அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அகதிகள் என்றும் அவர்களை சட்டவிரோதமாகவே காவலில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் அப்பாவி அகதிகள் மட்டுமல்ல தாயகம் திரும்பியோர் மற்றும் தமிழ்நாட்டு தமிழரும்கூட  சிறப்புமுகாமில் அடைக்கப்படுவதை மேலே பல உதாரணங்கள் மூலம் கண்டோம். இங்கு இவற்றைவிட கொடுமையான இன்னொரு விடயம் என்னவெனில் கனடா பிரஜாவுரிமை பெற்ற தமிழக தமிழரும்கூட இந்த அதிகாரிகளினால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதே.

கனடா பிரஜையையும் சிறப்புமுகாமில் அடைத்த கொடுமை

சோமு என்பவர் கனடிய தமிழர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். திருச்சியில் இருக்கும் தனது தாய் தந்தையரைப் பார்ப்தற்காக கனடாவில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அப்போது அவரை “விடுதலைப் புலி” என்றும் ஜெயா அம்மையாரை தற்கொலைப் படையாக கொல்ல வந்தவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். இவர் தான் ஈழத்தமிழர் அல்ல என்றும் தனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் முதலமைச்சர் ஜெயா அம்மையார் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு எழுதினார். தான் ஒரு தமிழ்நாட்டு தமிழர் என்றும் தனது தாய் தந்தையர் திருச்சியில் வாழ்ந்து வருவதாகவும் அதற்குரிய ஆதாரங்களையும் சமர்ப்பித்தார். ஆனால் எந்த அதிகாரியுமே அதனைக் கண்டு கொள்ளவில்லை.  இறுதியாக தனது கனடிய அரசுக்கு தெரிவித்தார். கனடிய அரசு உடனே தனது டில்லி தூதர அதிகாரி ஒருவரை செங்கல்பட்டிற்கு அனுப்பி நேரில் பார்த்து உடன் நடவடிக்கை மேற்கொண்டது. அவர் மீண்டும் கனடா செல்ல வழியேற்படுத்திக்கொடுத்தது. ஒரு தமிழரை தமிழ்நாடு அரசு பொறுப்பற்ற முறையில் சிறப்புமுகாமில் அடைத்தது. ஆனால் கனடிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை மீண்டும் கனடா நாட்டிற்கு எடுத்துக்கொண்டது. என்னே வேடிக்கை இது? தமிழகத்தில் இருந்து துரத்தப்பட்ட தமிழனுக்கு கனடாவில் குடியுரிமை. ஆனால் தமிழ்நாட்டில் சிறைவாசம். தமிழகமே இது தமிழன் வாழும் நாடுதானா?

அகதிகள் மீதான அதிகாரிகளின் பாலியல் சேட்டைகள்

தமது சொந்த நாட்டு பெண்களிடமே பாலியல் வல்லுறவு புரியும் தமிழக அதிகாரிகள் கேட்பதற்கு யாருமே அற்ற அனாதைகளான ஈழ அகதிகளை விட்டு வைப்பார்களா? சிறப்புமுகாம்களில் காவல் புரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொறுப்பான தாசில்தார்களினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட ஈழ அகதிகள் ஏராளம். அவை பற்றிய விபரங்கள் அடுத்த இதழில் இடம்பெறும்.

(தொடரும்.)



















No comments:

Post a Comment