Friday, December 29, 2017

289 நாட்களாக தொடரும் காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம்!

•289 நாட்களாக தொடரும்
காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம்!
கொட்டும் மழை. நடுங்கும் குளிர். இத்தனைக்கும் நடுவில் 289 நாட்களாக தொடரும் போராட்டம்.
காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருமாறு கோரி அவர்களின் உறவுகள் 289 நாட்களாக போராடுகின்றனர்.
ஆனால் நல்லாட்சி அரசு இரங்கவில்லை. அவர்களுக்கு ஒரு தீர்வை இன்னும் வழங்கவில்லை.
ஆயுதம் ஏந்திப் போராடினால் பயங்கரவாதிகள் என்றார்கள். அகிம்சை வழியில் போராடினால்தீர்வு கிடைக்கும் என்றார்கள்.
இவர்கள் காந்தி சொன்ன அகிம்சை வழியில்தானே போராடுகிறார்கள். ஏன் இன்னும் தீர்வு வழங்கவில்லை?
வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளை நிறுவ முயலும் இந்திய தூதரும்கூட இவர்களுக்கு குரல் கொடுக்கவில்லையே.
காணாமல் போனவர்களின் பிரச்சனையைக்கூட தீர்க்க முடியாதவர்கள் இனப் பிரச்சனையைத் தீர்ப்பார்கள் என்று எப்படி நம்புவது?
உள்ளுராட்சி தேர்தலுக்காக கூட்டணி அமைக்க பல தமிழ் கட்சிகள் போட்டி போடுகின்றன.
ஆனால் இதில் ஒரு கட்சிகூட இந்த காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டத்திற்காக கூட்டணி அமைக்க முன்வரவில்லை.
இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் மரணமடைந்துவிட்டனர். போராட்டம் இப்படியே தொடருமானால் மீதி உள்ளவர்களும் விரைவில் மரணமடைந்துவிடுவார்கள்.
இந்த போராட்டம் இப்படியான ஒரு முடிவை எட்டுவதையே இந்த அரசும் தமிழ் தலைவர்களும் விரும்புகிறார்கள் போலும்.
இந்த தலைவர்களின் ஒரு உறவு காணாமல் போயிருந்தால் அல்லது இந்த தலைவர்களின் ஒரு உறவு இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் இப்படி பாராமுகமாக அக்கறையற்று இருப்பார்களா?
காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி தமிழ் தலைவர்கள் அரசை வலியுறுத்துவதில்லை.
வெளிநாட்டு பிரதிநிதிகளிடமும்கூட இந்த பிரச்சனையை தமிழ் தலைவர்கள் கூறுவதில்லை.
குறிப்பாக ஒவ்வொரு வாரமும் இந்திய தூதுவரை சந்திக்கிறார்கள். ஆனால் அவரிடம்கூட இதனை வலியுறுத்துவதில்லை.
காணாமல்போனோர் பிரச்சனையை அரசு இதுவரை தீர்க்காமைக்கு இந்த தமிழ் தலைவர்கள்தான் காரணம் என்றால் அது மிகையல்ல.
தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல மாற்றுத் தலைமை தேவை என்பதையே இந்த பிரச்சனையும் உணர்த்துகிறது.

No comments:

Post a Comment