Friday, December 29, 2017

அகரமுதல்வன்களையும் தாண்டி

•அகரமுதல்வன்களையும் தாண்டி
தமிழ் இன விடுதலைப் போராட்டம் செல்லும்!
கவிதைக்கு பொய் அழகாக இருக்கலாம்.
கதை விடுவதைக்கூட இலக்கியம் ஏற்கலாம்
ஆனால் இலக்கியவாதி என்று கூறிக்கொண்டு
இந்துத்துவாவோடு உறவாட “கதை” விடக்கூடாது.
அதை அரசியல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
முதலில் சச்சிதானந்தம் “சிவசேனை” என்றார்
அடுத்து காசிஆனந்தன் “இந்துத் தமிழீழம்” என்றார்
இப்போது அகரமுதல்வன் “இந்துத்துவா”வோடு உரையாடுவேன் என்கிறார்.
இவர்கள் எந்த முகத்தோடு வந்தாலும்
இவர்கள் பின்னால் இருப்பது “இந்திய அரசின் முகம்”
என்பதை அறிய முடியாதவர்களா தமிழ் மக்கள்?
தான் ஆசையாக பெத்து வளர்த்த பிள்ளை
தன்னை “அம்மா” என்று கூப்பிடாதா என்று ஏங்கியிருக்க
அந்த பிள்ளை “அடி வேசை” என்று கூப்பிட்டால்
அந்த தாயின் பெத்தவயிறு எப்படி பத்தி எரியும்?
அதைவிட மோசமாக இருக்கிறது அகரமுதல்வனின் பேச்சு.
இந்திய அரசை நம்ப வேண்டாம். நம்பினால் மிகப் பெரிய அழிவை சந்திக்க வேண்டி வரும் என்று 1984ல் எச்சரித்தவர் தோழர் தமிழரசன்
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததால்தானே தோழர் தமிழரசன் கொல்லப்பட்டார்.
ஈழத் தமிழர்களை கொலை செய்யும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்றுகூறி கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைக்கும்போது பலியானவர் தோழர் தமிழ்மாறன்.
ராஜீவ் காந்தியைக் கொன்ற தானுவுக்கு வீர வணக்கம் செலுத்தி குண்டு வைத்தவர் தமிழ்நாடுவிடுதலைப்படைத் தளபதி லெனின்.
ஆனால் முத்துக்குமார் மற்றும் அப்துல் ரவூப் ஆகியோரின் பெயரை உச்சரித்த அகரமுதல்வன் இவர்களின் பெயரை உச்சரிக்கவில்லை.
இவர்களை அகரமுதல்வன் அறியவில்லையா அல்லது இவர்கள் பெயரை உச்சரிப்பதை இந்துத்துவா விரும்பாது என்பதால் தவிர்த்தாரா?
நான் அறிந்தவரையில் தாய்த் தமிழகம் போல் வேறு எந்த இனமும் தன் தன் இனத்திற்கு உதவியதில்லை.
ஈழத் தமிழர்களுக்காக 18 தமிழர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். 14 பேர் ஈழத்தில் வந்து புலிகள் அமைப்பில் சேர்ந்து போராடி வீர மரணம் அடைந்துள்ளனர்.
இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது 5000 ற்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு ஈழத் தமிழன் கூட கொல்லப்படாமல் காப்பாற்றியவர்கள் தமிழக மக்கள் அன்றி வேறு யார்?
அகதிகளை வெளியேற்ற வேண்டும். சிறப்புமுகாம் அகதிகளை அந்தமானுக்கு அனுப்ப வேண்டும் என்று ஜெயா அம்மையார் முனைந்தபோது அதை போராடி தடுத்து நிறுத்தியவர்கள் தமிழக மக்கள் அன்றி வேறு யார்?
புலிகளுக்கு ஆதரவாக மட்டுமன்றி ஈழத் தமிழருக்கு ஆதரவாக பேசினாலே தடா பாயும் என்று மிரட்டிய போதும் அதற்கு அஞ்சாது தம் ஆதரவை உறுதியாக தந்தவர்கள் அந்த மக்கள்தானே.
ஆனால், நாம் அடைக்கலம் தந்த அந்த மக்களின் மண்ணில் கொலை செய்தோம். கொள்ளை அடித்தோம். பஸ்சில் தாலி அறுத்தோம். இத்தனைக்கும் பின்பும்கூட அந்த மக்கள் எங்களை வெறுக்கவில்லை.
எனவேதான் ஈழத் தமிழரும் தமிழக தமிழரும் ஒன்று சேர்ந்து போராடி விடக்கூடாதே என்று இந்திய அரசு அச்சம் கொள்கிறது.
ஆனால் இந்திய அரசுக்கு உதவும் அகரமுதல்வன்களையும் தாண்டி தமிழ் இன விடுதலைப் போராட்டம் செல்லும்.

No comments:

Post a Comment