Friday, December 29, 2017

சபேஸ் சுகுணசபேசன் ( Sabes Sugunasabesan ) அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் சபேஸ் சுகுணசபேசன் ( Sabes Sugunasabesan ) அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சபேஸ் சுகுணசபேசன் அவர்கள் பன்முக திறமை கொண்டவர். காத்திரமான வாசிப்பு கொண்டிருப்பதோடு எனது படைப்புகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து ஊக்கம் கொடுத்து வருபவர்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ள சுகுணசபேசன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
பாலனை கூட்டங்களில் தான் சந்திப்பேன். அதிகம் பேச மாட்டார். சிறிதாய் புன்னகைப்பார்.
தமிழக போலீசுடன் கையில் விலங்குடன் இவர் நடக்கும் படம் ஒன்றை முகநூலில் பார்த்தேன். அது பல வருடங்களுக்கு முன்னயது.
பின்னர் அவர் எழுதிய “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூலை வாசித்தபோதே அவருடைய அரசியல் வாழ்வுப் பின்னணி சற்று தெரிந்தது.
எட்டு வருடங்கள் தமிழக சிறை மற்றும் சிறப்புமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார். தமிழரசனுடன் செயல்பட்டிருக்கிறார். தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவையை நெப்போலியனுடனும் இன்னும் சிலரோடும் சேர்ந்து அமைத்திருக்கிறார்.
இவர் போல் பல ஈழத்தமிழ் போராட்டத்துடன் இணைந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு கோட்பாடுகளையும் அணுகுமுறைகளையும் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எழுதாவிட்டால் அல்லது அவர்கள் பற்றி யாரும் சொல்லாவிட்டால் யாருக்கும் அவர்களின் பங்கும் அன்றய சிந்தனையும் கடந்த வாழ்வும் தெரியாமலே போய்விடும்.
அத்தோடு ஒரு காலக்கட்டத்தில் இருந்த சிந்தனைகளும் தடம் இல்லாது போய்விடும். எனவே அதனை எழுதுவதற்காய் பாலனுக்கு முதலில் நன்றி.
தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக ஓர் புரட்சிகர சக்திகளின் ஐக்கியம் அவசியம் என்ற கண்ணோட்டத்தில் 1980ல் தொடங்கப்பட்டதும், நெப்போலியன் , பாலன் இவர்களின் பாத்திரமும், இவர்கள் தமிரசனின் தமிழக பொதுவுடைமை கட்சியுடன் ஏற்படுத்திய தொடர்பும் இந்த புத்தகத்தின் தொடக்கப் புள்ளிகளாகும்.
தமிழரசன் பற்றிய புத்தகம், தோழமை-நட்பு-நன்றிக்கடன் இவை பற்றிய உருக்கமான நினைவுகூரல். தமிழரசன் பற்றி புலவர் கலிய பெருமாள் தனது புத்தகம் எழுதியதாக அறிகிறோம். ஆனாலும் பாலன் எழுதியது ஓர் ஈழப்போரளியின் அனுபவத்திலும் பார்வையிலும் ஆகும்.
இதனால் ஒரு தமிழக முற்போக்கு அரசியல் குழுவின் கண்ணோட்டத்தில் ஈழப்போராட்டம் எப்படி அணுகப்பட்டது என்பது பற்றி அறிகிறோம். அதற்கும் மேலாக, அதிகம் பேசப்படாத, தெரியப்படாத ஈழத்தேசியத்தின் ஒரு புரட்சிகர குழுவின் பார்வையில் இது கூறப்படுகிறது.
எனக்கு அறிந்தமட்டில் ஈழத்தேசியப்போராட்டத்தில் சில முற்போக்கு குழுக்கள் இருந்திருந்தாலும் தமிழக முற்போக்காளர்கள் ஈழத்தில் நடந்து கொண்டிருந்த போராட்டத்தின் முற்போக்கு, பிற்போக்கு கூறுகளை மாத்திரம் அல்ல ஈழத்தேசிய போராட்டத்தின் சரித்திரப் பரிமாணத்தையே புரியாது இருந்தனர்.
ஆனால் இந்த புத்தகம் எனக்கு புதிய தகவலைத் தந்தது. தமிழரசன் தலைமையில் இருந்த தமிழ்நாடு பொதுவுடமை கட்சி ஈழத்தில் நடப்பது ஒரு தேசிய இனவிடுதலை போராட்டம் என்ற நிலைபாட்டை எடுத்தது மாத்திரம் அல்லாமல் அதற்கு ஆதரவான செயற்பாடுகளையும் தமிழ் நாடு விடுதலை படைஊடாக எடுத்தது. தமிழக பொதுவுடைமை கட்சி பேரவைக்கு ஆதரவு தந்தது. இதன் உதாரணங்களை புத்தகத்தில் காணலாம்.
தமிழரசன் இந்திய அரசின் ஏகாதிபத்திய விரிவாக்கம் தமிழ் சிங்கள மக்களின் ஒருமைப்பாட்டினால் மாத்திரமே எதிர்க்கப்பட முடியும் என்ற நிலைபாட்டை கொண்டிருந்தார் என அறிகிறோம்.
இது போல நேப்பாளம், பூட்டான் , மாலைதீவு ஆகிய நாடுகளில் இந்திய விரிவாக்கத்தை எதிர்த்தார். இந்த கொள்கை நிலையை தமிழக தேசிய விடுதலை எனும் கட்டத்தில் இருந்து அடைந்திருக்கிறார்.
இந்தியாவின் வியாபார, ராணுவ விரிவாக்க நோக்கம் ஈழ அரசியலில் தலையீடு பற்றியும் தமிழரசன் தெளிவாக இருந்திருக்கிறார். இது பற்றி ஈழத்தமிழ் விடுதலை குழுக்களுடன் உரையாட விரும்பினார். இது கைகூடவில்லை. ஏதோவகையில் அனைத்து ஈழத்தமிழ் குழுக்களும் இந்திய சூணியத்தால் கட்டுண்டோ மாண்டோ போன துயரம் எமக்கு எல்லோருக்கும் தெரியும்.
ஈழம் உட்பட சிறீலங்கா இந்தியாவுக்கு ராஜபக்ஷாவினாலும்; பின்னர் சிரிசேனாவினாலும் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழ் அரசியலாளர்களும் இந்த பின்னணியில் சலுகைகள் பெறுகிறார்கள். யார் நாட்டினதும் மக்களினதும் நலன்களை காக்கிறார்கள் என்ற கேள்வி நியாயமாக எழுகிறது. தமிழரசனின் சிந்தனை இதை முன்கூட்டி சுட்டிக்காட்டுகிறது.
தமிழரசனின் நிலைபாடு நக்சல்பாரி இயக்கதில் இருந்து வந்திருக்கிறது. இது மாக்சிய லெனினிச மாவோயிச கோட்பாடு.
மக்கள் மத்தியில் அரசியல் வேலைகளை செய்வதற்கு இளைய தோழர்களை தமிழரசன் தயாரிக்கும் சந்தர்ப்பங்களை நகைச்சுவையுடன் பாலன் சொல்லுகிறார்.
ஆயுதங்கள் கையில் இருந்தபோதும் சுற்றியுள்ள மக்கள் சாகக்கூடாது என்பதற்காக தமிழரசன் அவற்றைப் பாவிக்காது விடுவதை வாசிக்கிறோம்.
அவருடைய மகத்தான மனிதாபிமானத்தை பாலன் அவரை நேரில் தெரிந்தவராக நட்பும் துயரமும் கலந்த உணர்வில் எழுதுகிறார். தோழமையும், மதிப்பும் நன்றிக்கடனும் புத்தகத்தில் இழைந்து ஓடுகின்றன.
தோழர்களுடனான உள்முரன்பாடுகளை எப்படி தமிழரசன் தீர்த்தார் என்பதை வாசிக்கும் போது ஈழப்போராட்டகுழுக்கள் ஏன் ஆயுதங்களால் முரண்பாடுகளை தீர்த்தார்கள் என்ற கேள்வி எழாமல் இருக்கவில்லை.
பாலனின் நினைவுகூரலில் தமிழரசனின் கோட்பாடும் பண்பும் எப்படி இயல்பாக இணைந்திருந்தன என அறிகிறோம். அவர் மக்கள் விடுதலை போராளி எப்படி இருக்கவேண்டும் என்பதற்த்கு நல்ல உதாரணமாக இருந்திருக்கிறார்.
பாலனின் தமிழக கிராமங்கள், புரட்சியாளர்கள், இந்திய அரசியல், சிறீலங்காவின் நிதி விவகார புள்ளி விபரங்கள் பற்றிய ஆளுமை மிகவும் பாராட்டப்படவேண்டியவை. நிலத்தாலும் காலத்தாலும் தொலைவில் இருந்தாலும், எழுத்து முழு நேர வேலை இல்லாதிடினும் வேண்டிய ஆராய்ட்சியை சளைப்பின்றி செய்திருக்கிறார். அவர் தொடர்ந்தும் தனது உறவுகளை பேணிக் கொண்டிருத்தலும் இப் புத்தகத்தில் தெரிகிறது.
சில திருத்தங்கள்:
தமிழரசனின் புரட்சிகர வாழ்வு அவரின் மாக்சிச கோட்பாட்டின் பின்னணியில் ஒரு ஈழப்போராளியின் நேரடி அனுபவத்தில் எழுதப்;பட்டிருக்கிறது. அவரது தவறுகளும் அவை தந்த பாடங்களும் என்ன என்பது எழுதப்பட்டிருக்க வேண்டும்.
ஈழப்போரை ஏன் ஆதரிக்கவேண்டும் என்பது பற்றிய தமிழரனின் சிந்தனை முன்னதாக சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
இந்தியாவின் வியாபார விரிவாக்கம் பற்றிய பாகங்கள் பல நல்ல உதாரணங்களையும் புள்ளிவிபரங்களையும் கொண்டிருந்தபோதும் தமிழரசன் பற்றிய புத்தகத்துக்கு இவை மிக நீண்டு போயின. இவை அவசியமான உதாரணங்கள். தமிழரசினின் இந்திய ஏகாதிபத்தியம் பற்றிய நிலைபாட்டை தெளிவாக உதாரணம் காட்டுபவை. இடையில் நீண்ட பாகங்களாக இருப்பதனால் வாசிப்பின் ஓட்டத்தை குறைக்கின்றன. விரிவான இந்த அத்தியாயம் வேறு புத்தகமாக இருக்கலாம்.
இது நினைவு கூரலுக்கும் சரிதிரத்திற்த்கும் இடையிலான புத்தகம். அதனால் சம்பவங்களின் திகதிகளும் செய்திகளின் ஆதாரங்களும் காட்டப்பட்டிருக்க வேண்டும். இவை சில இடங்களில் உள்ளன ஆனால் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும்.
புள்ளி விபரங்கள் எங்கு இருந்து எடுக்கப்பட்டன என்பதும் அவற்றின் தேதிகளும் அவசியம். ஏனெனில் இவை மாறும்.
பிறர் ஏழுதிய பாகங்கள் எங்கே முடிகின்றதென தெளிவாக்கவேண்டும். அவர்கள் தன்பொருளில் எழுத , பின் தொடர்ந்து ஆசிரியரும் தன் பொருளில் எழுத யார் என்பது குழப்பம் ஆகிறது.
இப்புத்தகத்தை பற்றி இங்கு நான் எழுதியதற்கும் மேலாக எழுதலாம். ஆனால் நேரம் கருதி சில அம்சங்களை மாத்திரம் தொட்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment