Saturday, March 30, 2019

• மதவடி

• மதவடி
நண்பர் ஒருவர் இந்த மதவடியால் செல்லும்போது எமது நினைவு வந்ததாக கூறி கீழே உள்ள படத்தை அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றிகள்.
வடமராட்சியில் உள்ள மதவுக்கு எல்லாம் பொதுவாக ஒரு கதை இருக்கும். ஆனால் இந்த மதவுக்கு மட்டும் ஒரு வித்தியாசமான ஒரு கதை உண்டு.
மன்னாரில் இருந்தும்; மட்டக்களப்பில் இருந்தும் வந்தவர்கள் நெல்லியடி பஸ் நிலையத்தில் வந்து இறங்கி மதவடி என்ற ஒற்றை முகவரியோட வந்து சேர்ந்தனர்.
எந்த இயக்கத்தில் இருந்தாலும் ஒருமுறையாவது இந்த மதவடியில் வந்து குந்தி அரசியல் பேசாதவர்கள் இருக்க முடியாது.
புலிகளின் பொறுப்பாளராக சுக்ளா இருந்தபோது மதவடிகளில் இளைஞர்கள் இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்.
ஆனால் இந்த மதவடியில் மட்டும் இளைஞர்கள் தொடர்ந்து இருந்தனர். இதனால் ஒருநாள் திடீரென்று வந்து இருந்தவர்களை பிடித்துச் சென்றுவிட்டார் அவர்.
இரவு நேரம். இருந்தாலும் இதை அறிந்ததும் உடனே மக்கள் திரண்டு வந்து பிடிபட்ட இளைஞர்களை மீட்டு விட்டனர்.
அப்போது “ இவர்களால் மக்களுக்கு இடைஞ்சல் என முறைப்பாடு வந்துள்ளது” என்று சுக்ளா கூறினார்.
ஆனால் மக்களோ “ இவர்களால் எங்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. இவர்கள் மதவடியில் இருப்பதுதான் எமக்கு பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறினார்கள்.
அதன்பின் சுக்ளா இந்த மதவடியில் இளைஞர்கள் இருப்பதை கண்டுகொள்ளவில்லை.
நான் அறிந்தவரையில் மதவடியில் இருந்த இளைஞர்களுக்காக மக்கள் திரண்டு சென்று மீட்டெடுத்தது பெருமை இந்த மதவடிக்கு மட்டுமே உண்டு.
இந்த மதவில் இருந்த சிலர் இன்று உயிருடன் இல்லை. ஆனால் இந்த மதவு இருக்கும்வரை அவர்கள் நினைவுகள் இருக்கும்
இந்த மதவுக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால் எத்தனை அற்புதமான கதைகளை இது கூறும். ஆம் அத்துனை வரலாறு இதற்கு உண்டு அல்லவா.
இது மதவுதான். ஆனால் இதில் வெள்ளம் பாய நான் ஒருபோதும் காணவில்லை. ஆனால் இதன் ஓட்டைகளில் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் வைத்து எடுத்திருக்கிறோம்.
சிலவேளைகளில் சயிக்கிளை கூட அப்படியே விட்டிட்டு சென்றிருக்கிறோம். அடுத்த நாள் திரும்பிவரும்வரை அப்படியே இருக்கும். களவு என்பதே கிடையாது.
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர்போல வருமா என்று இளையராசா பாடிய பாடல் கேட்கும்போதெல்லாம் இந்த மதவடிக்காக பாடியதுபோல் ஒரு உணர்வு வந்து செல்கிறது.

No comments:

Post a Comment