Saturday, March 30, 2019

•கந்தன் கருணை

•கந்தன் கருணை
இந்த வீட்டின் பெயர் “கந்தன் கருணை”
ஆனால் இந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தவர்கள் மீது கந்தனும் கருணை காட்ட வில்லை
இந்த வீட்டில்தான் சுமார் 70 பேர் 30.03.1987 யன்று சகோதரப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
கொன்றவர்களும் தமிழ் மக்களுக்காக போராட புறப்பட்டவர்கள். கொல்லப்பட்டவர்களும் தமிழ் மக்களுக்காக போராட புறப்பட்டவர்களே.
இது மட்டுமன்றி இதற்கு முன்னரும் பின்னரும் பல சகோதரப் படுகொலைகள் நிகழ்ந்துவிட்டன.
இந்த சகோதரப் படுகொலைகள் இலங்கை இந்திய அரசுகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டன.
எனவே அடுத்து வரும் போராட்டத்தில் நாம் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமெனில் இதுபற்றி நாம் இப்போது உரையாட வேண்டும்.
இங்கு யார் சரி? யார் பிழை? என்பது முக்கியம் இல்லை. மாறாக இந்த படுகொலைக்கு காரணம் என்ன? இதை எப்படி இனி வரும் காலத்தில் தவிர்ப்பது என்பதே முக்கியம் ஆகும்.
சிங்கள மக்கள் மத்தியிலும் இரண்டு தடவை ஆயுதப் போராட்டம் நடந்துள்ளது. ஆனால் அவர்கள் மத்தியில் இந்தளவு சகோதரப் படுகொலைகள் நடந்ததாக அறியவில்லை.
இந்தியாவில் மாவோயிஸ்டுகள் பல பிரிவுகள் ஆயுதப் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கும் இந்தளவு சகோதரப் படுகொலைகள் நடந்ததாக அறியவில்லை.
தமிழ்நாடு விடுதலைப்படை தளபதி தோழர் தமிழரசன் எம் மத்தியில் நடந்த சகோதரப் படுகொலைகளை அறிந்து மிகவும் வருத்தப்பட்டார்.
அவர் எமக்கு இது குறித்து ஆக்கபூர்வமான பல வழிகாட்டல்களை தந்து உதவினார். ஆனால் ஆச்சரியமும் வேதனையும் என்னவென்றால் அவர் மறைவிற்கு பின் அவரது அமைப்பிலும் சகோதரப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.
எனவே ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தமிழ் இனத்தில் ஏன் இந்த சகோதரப் படுகொலை நடக்கிறது என்பது பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவோர் தமக்கிடையேயான கருத்து முரண்பாட்டை ஏன் கருவிகள் மூலம் தீர்க்க முற்படுகின்றனர் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
இது இனிவரும் அடுத்த போராட்டத்திற்கு மிகவும் அவசியமாகும்.

No comments:

Post a Comment