Saturday, March 30, 2019

• நாம் மீண்டும் எழுந்து நிற்க முடியாதா?

• நாம் மீண்டும் எழுந்து நிற்க முடியாதா?
நாம் மீண்டும் எழுந்து நிற்க முடியாது என்கிறார்கள்
நாம் தோற்றுப் போய்விட்ட இனம் என்கிறார்கள்
நாம் உரிமையை கோர முடியாது என்கிறார்கள்
அவர்களாக ஏதாவது தந்தால் அதை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள்
உரிமை என்ன பிச்சையா இரந்து கேட்பதற்கு, அது போராடி யல்லவா பெறுவது.
எமது முன்னோர் போர்த்துக்கேயரை விரட்டினார்கள். ஏனெனில் அப்போது யாரும் நாம் மீண்டும் எழுந்து நிற்க முடியாது என்று கூறவில்லை.
எமது முன்னோர்கள் ஒல்லாந்தரை விரட்டினார்கள். ஏனெனில் அப்போது யாரும் நாம் தோற்றுப் போய்விட்ட இனம் என்று கூறியதில்லை.
எமது முன்னோர்கள் ஆங்கிலேயரை விரட்டினார்கள். ஏனெனில் அப்போது யாரும் ஆங்கிலேயர்கள் தாங்களாக ஏதும் தந்தால் வாங்குவோம் என்று கூறியதில்லை.
இவ்வாறு விழுந்தபோதெல்லாம் மீண்டும் எழுந்து நின்று போராடிய எம் இனத்தை பார்த்து கூறுகிறார்கள் இனி எழுந்து நிற்க முடியாது என்று.
நாம் இதுவரை வெல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதன் அர்த்தம் நாம் தோற்றுப் போய்விட்டோம் என்பது அல்ல.
வீழ்வது அவமானம் அல்ல. மாறாக மீண்டும் எழாமல் அப்படியே வீழ்ந்து கிடப்பதுதான் அவமானம்.
பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில்தானே உருவாகியது.
உலகைக் குலுக்கிய இயக்கமெல்லாம் ஏதோவொரு புள்ளியில்தானே தோன்றியிருக்கும்
கடும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் இவர்கள் தொடர்ந்து செய்யும் போராட்டம் மீண்டும் தமிழ் இனம் நிமிர்ந்து நிற்க வழி செய்யும்.
செல்லும் வழியெல்லாம் இவர்கள் செய்யும் பிரச்சாரம் மக்கள் மனங்களை வென்று செல்லும்.
போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை. தமிழர் போராட்டம்
வெற்றியடையும்வரை ஓயப்போவதில்லை.

No comments:

Post a Comment