Saturday, July 16, 2016

தோழர் லிங்கம் வைத்தியலிங்கம் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
இலங்கையில் இருக்கும் தோழர் லிங்கம் வைத்தியலிங்கம் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
இலங்கைமீதான இந்திய ஆக்கிரமிப்பு!
இந்தியாவென்றால் பலகோடி மக்களைக்கொண்ட காந்தி பிறந்த முன்னுதாரணம்மிக்க சிறந்ததோர் "ஜனநாயக நாடு" என்பதே அந்நாட்டிற்குரிய பொத்தாம் பொதுவான அடையாள அங்கீகாரமாகும்!
"இந்திய சமூகமானது ஏகபோக ஆதிக்கமும் சாதி-மத-இனக்குழு நிறுவனங்களும் இணைந்திருக்கும் ஓர் விசித்திரக் கலவையாகும்" என்பார் நம்பூதிரிபாட் அவர்கள.
இக் கலவைக்குள் இந்தியத் தேசிய இனங்களின் சிறைக்கூடமும், நவீன பிராமணிய இந்துவத்துவ மேலாதிக்கத்தை நிறைவேற்றும் செயற்திட்டங்களை மறைப்பதற்கான போலித்தனங்ஙளும் உண்டு .
இப்பேற்பட்ட இந்தியா இலங்கயில் எப்படி (அரசியல்-பொருளாதார-பண்பாட்டுத்தளத்தில்) செயற்பட்டது, செயற்படுகிறது என்பதை வரலாற்று ரீதியாக நிறுவுகின்றார் பாலன் தோழர்.
சுதந்திரத்திற்குப் பின்னான பஞ்சசீலக் கொள்கையின் பெறுமானத்தை சிக்கிம்-பூட்டான் ஆக்கிரமிப்பிற்கு ஊடாக இழந்து, ஏகபோக ஆதிக்கத்தின் பிதாமகனாவதையும் நிறுவுகின்றார்.
பாண்டூங் மாநாட்டில் அன்றைய இலங்கைப் பிரதமர் கொத்தலாவல ஆற்றிய உரையை, ஏன் எங்களிடம் கேளாமல் தயாரித்து உரையாற்றினீர்கள் என்ற நேருவின் அதட்டல் மிக்க கேள்வியுடன் இலங்கை மீதான மேலாதிக்கம் அன்றே குவிமையம் கொள்ள ஆரம்பித்து விட்டது என்பதை வரலாற்றுக் கண்கொண்டு உரையாடுகின்றார்.
மேலும் இவ்வுரையாடல் பதிவானது கடந்த அரை நூற்றாண்டு முதல் சமகாலம் வரையான இந்திய ஆக்கிரமிப்பு பார்வையுடன் கூடிய நவகாலனிய பொருளியல் திணிப்புகளை வகைப்படுத்துகிறது.
அவற்றை சம்பூர் அனல்மின் நிலையம் அதனூடாக வெளியேறிய மக்களின் அவலங்கள் இந்தியாவிற்கெதிரான போர்க்குணம் மிக்க நடவடிக்கைகளை அம்மக்களின் போராட்ட உணர்வுகளுடன் ஒன்றிணைந்து பதிவிடுகின்றார்.
அத்துடன் மேலாதிக்க நாட்டத்துடன்; கூடிய காலனியாதிக்க முதலீடுகளை “எட்கா” ஒப்பந்தம் முதல் இந்திய மருத்துவமனைகள், தனியார் பல்கலைக்கழகங்கள், மின்சார ஒப்பந்தங்கள் வரை குவிமையம் பெறுவதை தன் பதிவின் பிரதான பேசுபொருளாக்குகின்றார்.
இலங்கையின் இந்தியாவின் இம் முதலீடுகள் 75சதவீதமாகும் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் காலனியாதிக்கம் கொண்ட இப் பதிவுடன் தமிழக அரசியல்வாதிகளான (ஜெயலலிதா, கருணாநிதி-சீமான்-நெடுமாறன்-வை.கோ, வகையறாக்களின்) போலியும் கோமாளித்தனத்துடன் கூடிய நடிப்பரசியலையும் தோழர் பாலன் அம்பலப்படுத்தியிருக்கலாம்..
தவிரவும் நூலின் பதிவும் அதனுடன் கூடிய அரசியல் பார்வையும் மார்க்சிஸக் கண்ணோட்டத்துடன் செய்துள்ள அதேவேளையில் முள்ளிவாய்க்கால் "விடுதலைப் புலிகள்" ஆகியபற்றிய பார்வையில் மானசீகத்தன்மை கொண்ட போக்கு இழையோடுவதைப் பாhக்க முடிகிறது.
"ராஜீவ்காந்தி கொல்லப்படாவிட்டாலும் பிரபாகரன் கொல்லப்பட்டிருப்பார்" என்ற உங்களின் எதிர் பார்வையை சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன் கூடிய மக்களைப் புறந்தள்ளிய வெகுஜனப் போராட்ட மார்க்கமற்ற அரசியல் போக்கு புலிகளை இல்லாதாக்கும் என்பதானது சண்முகதாசன் போன்ற பல மார்க்சியர்களின் அரசியல் எதிர்வு கூறல்களாகும்.
இதை நீங்களும் உங்கள் பதிவில் சுட்டியள்ளீர்கள்.
"மார்க்சிசத்தை உள்வாங்காத தேசியமும் தேசியத்தை உள்வாங்காத மாரக்சிசமும் தன் குறித்த இலக்கை அடையமாட்டா!” இது தேசியம் பற்றிய மார்க்சியர்களின் எதிர்வுகூறல்.
யுத்தத்தை நடாத்தியதும்; முடித்து வைத்தும் இந்தியாதானென யுத்தம் முடிந்தபோது மகிந்த சொன்ன வார்த்தைகள் இது.
இதில் என் ஆதங்கம் என்னவெனில் யுத்தத்தின்போது புலிகள் மக்களை கேடயமாக்காமல் படைகளுடன் போராடியிருந்தால் அழிவின் பெரும்பகுதியை இல்லாதாக்கியிருக்கலாம். மக்களைப்பற்றிய கவனம் எதிரியை விட விடுதலைக்கு போராடுபவர்களிடம் கூடுதலாக இருக்கவேண்டும்.
பிரபாகரனின் சரணடைவில் கலைஞர,; கனிமொழி; அன்றையதினம் தொடர்பில் இருந்த தமிழ்த்தேசியத்தின் அத்தனை தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் என்ன நடந்ததென்பது பட்டவர்த்தனம். பெருந்தலைவர்கள் பலருக்கு தொலைபேசி சென்றபோது எடுக்காமல் தொடர்பை துண்டித்ததும் உண்டு.
சில தலைவர்களின் மனைவியர்கள் பிள்ளைகள் "ஐயா வீட்டில் இல்லையென சொன்னதும் உண்டு" அப்போது ஐயாக்கள் வீட்டில் இருந்ததுமுண்டு.
முடிவாக இந்திய மேலாதிக்கம் காலனியாதிக்கம் கொண்டு செயற்படும் வினையாற்றல்கள் ஏகப்பெரும்பான்மையான் மக்களை சென்றடையவில்லை. சென்றடைவதன் வாயிலான புரிதல்களுக்கு ஊடாகவே பாலன் தோழர் கணிப்பிடும் எதிர்காலத்தை எட்டமுடியும்!
சமகால தேசிய-சர்வதேசத்தின் தேச-கால-வர்த்தமானத்தில் எவ்வித புரட்சிகரங்களுக்குமான
சூழல்கள் இருப்பதாக நான் நம்பவில்லை.
தவிரவும் தமிழ்மக்கள் தற்போது போராடும் வல்லமையைற்ற நிலையிலும் உள்ளனர். இதுவும் தற்காலிக நிலைதான்;.
இத்தோடு தமிழ்மக்கள் தம் விடுதலைக்காக உலகில் அங்கீகாரம் கேட்டு செல்லாத இடங்களே இல்லை.
இந்தியா-அமெரிக்க-ஜரோப்பா உள்ளிட்ட சர்வதேச சமூகங்கள் எல்லாம் எம் உரிமைப்போரை தம்நலன்களுக்காக பாவித்ததே எதார்த்தம்.
இந்நிலையில் நாம் இதுவரையில் போகாத இடம் ஏகப்பெரும்பான்மையான (தமிழ்மக்கள் பிரச்சினைகளை முழுமையாக அறியாத) சாதாரண சிங்கள மக்களிடமே!
முதலில் இதைச் செய்வதன் மூலமே ஏனையவைகள் பற்றி சிந்திக்கலாம்.

No comments:

Post a Comment