Saturday, July 16, 2016

வாசன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
லண்டனில் இருக்கும் நண்பர் வாசன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
தோழர் பாலனின் நூல் குறித்த ஒரு பார்வையும்
சில குறிப்புக்களும்
ஒரு கற்பனையானதும் பொய்மைகள் நிறைந்ததுமான ஒரு மாயையான கருத்துருவாக்கத்தின் மேல் உருவாக்கப்பட்ட இந்திய தேசம், இந்துத்துவம் என்னும் தோற்றபாடுகள் ஆவன இன்று நிஜ வடிவமாக உருப்பெற்று தென்கிழக்காசிய பிராந்தியங்கள் அனைத்துக்குமே ஒரு சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றன.
இவ்வாறு பொய்மைகளின் மேல் கட்டப்பட்டு பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடமாக திகழும் இந்திய தேசியக் கட்டமைப்பானது தன்னை செயலுறுத்த பல்வேறு வகைகளிலும் போராடி வருகின்றது.
இச்செயற்பாட்டின் நீட்சியாக விளங்குவதே அதனது அகண்ட பாரதக் கொள்கையாகும். இக்கொள்கையின் அடிப்படையில் அது தன்னை சூழ்ந்துள்ள பல்வேறு தேசங்களின் மேலும் தனது வல்லாதிக்கத்தினையும் எதேச்சாதிகாரத்தினையும் பிரயோகித்து வருகின்றது.
இதனடிப்படையில் இது தனக்கு மிகவும் அண்மித்த இலங்கைத்தீவின் மீதும் பல தசாப்தகாலமாக பல்வேறு வகையிலும் இராணுவ, பொருளாதார, காலாச்சார, பண்பாட்டு ரீதியிலான தலையிடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இத்தகைய தலையீடுகளையும் ஆக்கிரமிப்புக்களையும் அம்பலப்படுத்தும் வகையில் தோழர் பாலன் அவர்கள் தனது ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ என்னும் 58 பக்கங்கள் மட்டுமே அடங்கிய இச்சிறிய நூலினை எழுதி வெளியிட்டுள்ளார்.
தோழர் பாலன் அவர்கள் ஈழவிடுதலை அரசியலில் பல தசாப்தகாலமாக இயங்கிவரும் ஒரு செயற்பாட்டாளர். ஏற்கனவே ‘சிறப்புமுகாம் எனும் சித்திரவதை முகாம்’ நூலினை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ள இவரை தமிழகத்திலும் புகலிடத்திலும் தாயகத்திலும் சமூக, கலை, இலக்கிய, அரசியல் தளங்களில் இயங்குபவர்களில் அறியாதவார்கள் அனேகமாக இருக்கமாட்டார்கள்.
தனது ஆரம்ப கால அரசியலை தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவையுடன் இணைத்துக் கொண்ட இவர் அதன் தலைமைச்செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.
அன்றைய அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் இந்திய மத்திய அரசினதும் இந்திய உளவுப்படைகளினதும் வழிகாட்டலில் இயங்கிக்கொண்டிருந்த வேளை தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை மட்டுமே தமிழக புரட்சிகர சக்திகளுடன் தமது உறவுகளை வளர்த்துக்கொண்டு, தமிழரசன் தலைமயிலான தமிழ்நாடு விடுதலைப்படையுடன் இணைந்து இயங்கியது.
தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவையானது தமிழகத்திலும் தமது செயற்பாடுகளை விஸ்தரித்தபோது இவர் கொடைக்கானல் டீ.வி. டவர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்றார்.
சுமார் எட்டு வருட காலம் தமிழகத்தின் பல்வேறு சிறைகளிலும் சிறப்புமுகாம்களிலும் பல்வேறு இன்னல்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்த இவர் தனது விடுதைலையின் பின்னரும் தனது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
என்றுமே நடைமுறை சார்ந்த மக்கள் பிரச்சினைகளின் மேல் மட்டுமே கவனத்தை செலுத்தும் இவர் இன்று ஈழ மக்களின் தலையாய பிரச்சினையாக உள்ள இந்திய ஆக்கிரமிப்பு குறித்து நூலினை எழுதியுள்ளது வியப்பிற்குரிய விடயமல்ல.
காலத்தின் தேவையையும் அவசியத்தினையும் கருதி வெளிவந்துள்ள இந்நூலானது பல தசாப்த காலமாக இந்தியா எனும் வல்லரசானது சின்னஞ்சிறு தீவாகிய இலங்கையினை எவ்வாறு அடிமைத் தேசமாக வைத்திருக்க முயல்கின்றது என்பதை விபரமாக எடுத்து சொல்கின்றது.
தனது அயலில் உள்ள சிக்கிம், பூட்டான் போன்ற நாடுகள் மீது இந்தியா எவ்வாறு தனது ஆக்கிரமிப்பினை மேற்கொண்டது என்பதை விளக்கி இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கையின் போலித்தனத்தை தோலுரித்துக் காட்டும் இந்நூலானது, 1954 இல் பாண்டுங் மாநாட்டில் இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவையை ஜவகர்லால் நேரு மிரட்டியதிலிருந்து இன்று ஈழமக்களின் விடுதலைப் போராட்டமானது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் முடிவடைந்த பின்னர் அதன் வெற்றியை அறுவடை செய்யும் முக்கிய சக்தியாக இந்தியாவை விளங்குவது வரையான முக்கிய நிகழ்வுகளை இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு, இலங்கையில் இந்தியாவின் பொருளாதார ரீதியிலான தலையீடு, இலங்கையில் இந்தியாவின் இராணுவத் தலையீடு என்ற வெவ்வேறான தலைப்புக்களில் ஆதாரங்களுடனும் புள்ளி விபரங்களுடனும் விபரித்து செல்கின்றது.
இதில் இந்தியாவின் பொருளாதார ரீதியிலான தலையீட்டில்
• பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு
• சம்பூர் அனல் மின் நிலையம்
• கொடாவாய, கிரிகந்த கனிம வள சுரண்டல்
• மோசடியான மின்சார ஒப்பந்தம்
• காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையும் துறைமுகமும்
• திக்கம் வடிசாலை
• மீனவர் பிரச்சினை
• எட்கா (ETCA) ஒப்பந்தம்
என்பன பற்றி மிக விளக்கமாக எடுத்துரைக்கும் ஆசிரியர் இப்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம் இந்தியாவின் தனியார் மருத்துவமனை, தனியார் பல்கலைக் கழகங்களை இங்கு அனுமதிப்பதின் மூலம் இப்போதுள்ள இலவச வைத்திய சிகிச்சைக்கும் இலவசக் கல்விக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதை எடுத்து சொல்கிறார்.
மேலும் இன்று எம்முன் தலையாய பிரச்சினயாகவுள்ள சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தினை விபரமாக சொல்வதுடன் அதற்கெதிரான மக்களது கடும் எதிர்ப்பினையியும் போராட்டங்களையும் பற்றி விபரமாக எழுதி செல்கிறார்.
மேலும் இராணுவ ரீதியிலான தலையீட்டில் 1971 இல் ஜேவிபி கிளர்ச்சியை அடக்க இலங்கை அரசுடன் சேர்ந்து சிங்கள இளைஞர்களை கொன்று குவித்தமை, 1987 இல் ஏற்படுத்தப் பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உள் நுழைந்து 8000 இற்கும் மேற்பட்ட மக்களை பலியிட்டு 600 இற்கும் மேற்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தமை, விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இலங்கை அரசுடன் சேர்ந்து செயற்பட்டமை என்பவற்றை விளக்கி சொல்கிறார்.
அத்துடன் இந்தியாவின் இத்தகைய தலையீடுகளுக்கும் சுரண்டல்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முக்கியமாக இரா.சம்பந்தன், மாவை சேனாதி ராஜா போன்றோர் தமது சொந்த நலன்களிற்காகவும் சுய லாபங்களிற்காகவும் எவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை விளக்கும் இவர், எதிர்காலத்தில் எவ்வாறு சிங்கள தமிழ் மக்கள் இதற்கெதிராக இணைந்து போராட வேண்டும் என்பதினையும் தனது போராட்ட அனுபவங்களின் மூலம் பெற்ற பட்டறிவின் மூலம் விபரித்து சொல்கிறார்.
அநேகமான நடைமுறைசார்ந்த பிரச்சினைகளையும் மக்கள் பிரசினைகளையும் ஆவணப்படுத்தும் நூல்கள் எதிர்கொள்ளும் போதாத் தன்மைகளையும் குறைபாடுகளையும் இந்நூலும் எதிர்கொள்கின்றது.
இதில் முக்கியமாக பண்பாட்டு கலாச்சாரத் தளங்களில் இந்தியா எவ்வாறு ஈழத் தமிழர் விடயங்களில் தலையிடுகின்றது என்பது பற்றி இந்நூலானது சிறிதளவேனும் கவனத்திற் கொள்ளவில்லை. இது பற்றி ஏற்கனவே இந்நூல் பற்றி எழுதிய பல அறிஞர்களும் ஆய்வாளர்களும் குறிப்பிட்டபடியால் கூறியது கூறல் குற்றம் என்ற இலக்கண விதிக்கமைய இது பற்றி இவ்விடத்தில் நாம் எதுவும் கூறாது விலகி செல்கிறோம்.
மேலும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்களாக இச்சின்னஞ்சிறு தீவிலுள்ள சிங்கள மக்கள் இந்தியாவில் இருந்து வந்த பல்வேறு ஆக்கிரமிப்புக்களுக்கும் படைஎடுப்புக்களுக்கும் எதிராக போராடி வந்துள்ளதையும் இன்னமும் அத்தகைய வீரம் செறிந்த உணர்வுள்ளவர்களாக ஒவ்வொரு சிங்கள குடிமகனும் விளங்குவதை இத்தருணத்தில் நாம் நினைவு கொள்ளுதல் வேண்டும்.
மேலும் ஜேவிபியின் அரசியல் சாசனத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதனை ஒரு அலகாகவும் இதற்கு தமிழர்கள் ஒரு ஆதரவு சக்தியாக விளங்குவதையும் அவர்கள் நிறுவி வைத்துள்ளனர். இத்தகைய தருணத்தில் தமிழர்களை ஒரு ஐந்தாம்படையாக கருதும் சிங்கள புரட்சிகர சக்திகளுடன் தமிழர்கள் எவ்வாறு இணைந்து போராட முடியுமென்பது எம்முன் ஒரு கேள்வியாகவே தொக்கி நிற்கின்றது.
அத்துடன் பௌத்த சிங்கள கலாச்சாரமும் ஈழத்தமிழர் கலாச்சாரமும் ஒன்றிட்கொன்று முரணான சக்திகளாகவே அணைத்து சாதாரண மக்களினதும் அறிவியல் தளங்களில் இயங்குபவர்களின் பொதுப் புத்தியாக இருந்து வருகின்றது.
இவையனைத்திற்கும் மாறாக இவ்விரு கலாச்சாரங்களிற்கும் இடையேயான பொதுத் தன்மைகளை ஆராய்வதும் இவ்விரு இனங்களிட்கு இடையேயான கலை பண்பாட்டு கலாச்சாரத் தளங்களில் ஒரு இணைவினை ஏற்படுத்துவதுமே அனைத்துத் தளங்களிலும் இந்தியாவிற்கெதிரான போராட்டத்தினை கூர்மைப் படுத்துவதற்குரிய ஒரு உபாயமாகும்.
மேலும் தமிழகத்திலிருந்தே அறிவினையும் பண்பாட்டினையும் கலை, பண்பாட்டு, பொழுது போக்கு அம்சங்களையும் இரவல் வாங்கும் ஈழத்தமிழினம் இதிலிருந்து விலகி தமக்கேயான ஒரு தனித்துவமான பாதையை அமைக்க வேண்டும் என்பதும் தெற்கில் உள்ள தமது சகோதர இனத்துடன் உறவுகளை மேற்கொள்ள வேண்டியது ஒரு அவசியமானது என்பதும் இன்றுள்ள முக்கிய தேவையாகும்.
இவை பற்றியெல்லாம் இந்நூல் எதனையுமே ஆய்வுக்குட்படுத்தவில்லை என்பதும், இது இன்றைய சூழ்நிலையில் இந்தியாவிற்கெதிரான போராட்டத்தில் எம்முன் உள்ள முக்கிய ஆய்விற்குரிய விடயம் என்பதும் எமது கருத்தாகும்.
இவை எல்லாவற்றிட்கும் அப்பால் யாருமே பேசாத ஒரு பொருளை, பேச முனையாத ஒரு பொருளை தோழர் பாலன் அவர்கள் பேச முற்பட்டுள்ளார்.
தம்முன் இன்றுள்ள தலையாய பிரச்சினை எதுவென்று தெரியாது பல்வேறு திசைகளிலும் தத்தளிக்கும் ஈழத்தமிழர்க்கு அவர்கள் முன் உள்ள மிக்கிய பிரச்சினை எதுவென்பதை தெளிவாக புரிய வைத்துள்ளார்.
இந்தியாவின் ஆக்கிரமிப்பும் சுரண்டலும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள இவ்வேளையில் இவையனைத்திற்கும் எதிரான போராட்டத்தில் பல்வேறு தளங்களிலும் அனைத்து தரப்பு மக்களும் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர்.
எட்கா(ETCA) ஒப்பந்தத்திற்கு எதிராக சிங்கள மக்கள் களத்தில் இறங்கியுள்ளனர். சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் இன்று என்றுமில்லாதவாறு உத்வேகம் பெற்றுள்ள வேளை இது குறித்த ஆவணப் படங்களும் நூல்களும் அதிகமாக வெளிவந்த வண்ணமுள்ளன.
தாம் தெரிந்தெடுத்த தமது போலித் தலைமைகளை இன்று நிராகரிக்கும் நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். இந்திய மீனவர்களுக்கெதிரான போராட்டமும் இன்று பல்வேறு மாவட்டங்களிலும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன.
இவையனைத்திற்கும் தொடக்கப் புள்ளியாக இந்நூல் அமைவதையும் பல்வேறு வகைகளிளும் சிதறுண்டு கிடக்கும் இப்போராட்டங்களை ஒன்றினைப்பதிற்கு இந்நூல் பெரிதும் உதவும் என்பதும் எமது நோக்காகும்.
மேலும் தளங்களில் போராடும் அனைத்து சக்திகளும் இந்நூலினை கையேடாக பயன்படுத்துவதன் அவசியத்தினையும் வலியுறித்தி நிற்கின்றோம்.
மேலும் இந்திய ஆக்கிரமிப்புக்களுக்கு எதிரான மேற்குறித்த மக்களின் போராட்டங்கள் அதிகரித்துள்ள இதேவேளை, அதற்கு சமாந்தரமாக இவ்விடயங்கள் குறித்தெல்லாம் தோழர் பாலன் அவர்கள் தொடர்ந்தும் எழுதவேண்டும் என்பதும் எமது விண்ணப்பமும் வேண்டுகோளுமாகும்.

No comments:

Post a Comment