Saturday, July 16, 2016

தர்சிகா தாமோதரன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கொழும்பில் வசிக்கும் நண்பர் தர்சிகா தாமோதரன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு :
நமது வலிகளுக்கு மருந்திடாத போலி அக்கறை
தோழர் பாலன் எழுதிய " இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு " எனும் சிறு நூல் வெளிவந்திருக்கிறது.
நமது சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் பாத்திரமாக இந்தியா எவ்வாறு ஆற்றல் பெற்றிருக்கிறதென்பதையும் அதன் குரூரமான ராஜதந்திரங்களையும் எவ்விதத் தயக்கமின்றிப் பேசும் நூல் இது.
இந்தியா என்றால் என்ன எனும் கேள்வியை நமது பெருசுகளும் பெடியன்களும் பெட்டைகளும் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள்?
இந்தியா என்பது நமது அண்டை நாடு. நம் மீது அக்கறை உள்ள நாடு. நமக்காகக் குரல் கொடுக்கும் நாடு.
நேருவின் பஞ்ச சீலக் கொள்கைகளின் வழியே நம்மை அனுசரிக்கும் நாடு. நமது இயக்கங்களுக்கு உதவிய அன்னை இந்திராவின் நாடு.
நமக்கு வாரித் தந்த எம்ஜிஆரின் நாடு. நம்மை மகிழ்விக்கும் ரஜினியின் நாடு. . . .
பாவம் நாம் எவ்வளவு அப்பாவிகளாகவும் அறிவு குன்றியவர்களாகவும் இருக்கிறோம் என்பதை புள்ளி விபரங்களோடும் தகவல்களோடும் தரவுகளோடும் பேசுகிறது இந்நூல்.
பெரிய நிலப்பரப்போடும் அதிக மக்கள் தொகையோடும் இருப்பதனை ஒரு ஆதிக்க நியாயமாக எடுத்துக் கொண்டு இந்தியா இந்த துணைக் கண்டத்தை எவ்வாறு கபளீகரம் செய்ய முனைகிறதென்பதை விபரிக்கிறது இந்நூல்.
1947 ல் இடம்பெற்ற ஆசிய நாடுகள் மாநாட்டில் பிராந்திய நாடுகளைக் குற்றம் சாட்டி நேரு பேசியதாகக் கூறும் தகவலோடு இந்நூலின் சூடான பக்கம் ஆரம்பமாகிறது.
1954 ல் அப்போதைய இலங்கைத் தலைவரான ஜோன் கொத்தலாவல பாண்டுங் மாநாட்டில் பேசிவிட்டு அமரும் போது நேரு அவரிடம் மேடையிலேயே நேரடியாக விசனம் வெளிப்படுத்தியதை இந்தியாவின் மோசமான இலங்கை மீதான அணுகுமுறை அப்போதே ஆரம்பித்து விட்டதாகக் கூறுகிறது இந்நூல்.
இலங்கையில் இந்தியாவின் பொருளாதார ரீதியிலான தலையீடுகள் இலங்கை மக்களுக்கு நன்மை பயப்பதாக அல்லாமல் இங்குள்ள மக்கள் மீது பல வகையான அத்துமீறல்களையும் அழிவுகளையும் சுற்றுச் சூழல் சீரழிவுகளையும் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது இந்நூல்.
இலங்கையில் தொடங்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு இந்திய அபிவிருத்தித் திட்டத்திற்குப் பின்னாலும் அதன் நலன் பேணும் நிகழ்ச்சி நிரல் மட்டுமே ஒழிந்திருப்பதாக இந்நூல் கூறுவதாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
எண்பதுகளுக்கு முன்பு வரை இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறைகளையும் அதற்குப் பிந்திய இந்திய நிலைப்பாடுகளையும் ஒரே விதமான கண்ணோட்டத்தில் நோக்குவது சற்றுக் கூர்மையற்றதாகவே அமையக் கூடும். அந்த வகையில் இந்த நூல் ஒரு தளம்பல் நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
1977 வரை இருந்த இலங்கை அரசாங்கமானது இந்தியாவோடு நெருக்கமான உறவுகளைப் பேணியே வந்திருந்தது. இலங்கையின் மக்கள் குழுமங்களுக்கும் இந்திய சமூகங்களுக்கும் இடையில் பல்வேறு விதமான உறவுகளும் தொடர்புகளும் வரலாறு முழுவதும் இருந்திருக்கிறது. இந்தத் தொடர்புகளின் பின்னணியில் இந்திய நிலைப்பாடுகளை ஆராய்வதிலிருந்து இச் சிறு நூல் தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டும்.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான சமயத்தில் இருந்து எண்பது வரையான காலப்பகுதிக்குள் இங்கு ஏற்பட்ட பல்வேறு விதமான நெருக்கடிகளிலும் இந்திய அணுகுமுறையானது கூடியளவு சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் அழுத்தங்களோடுதான் இருந்ததென்று கூற முடியாது. அன்றைய சினேகத்தை பிந்திய அனுபவங்களின் வெறுப்போடு பார்க்க முனைகிறது இந்நூல்.
ஆரம்பகால இலங்கைத் தமிழ் மிதவாத தலைவர்கள் இந்தியாவை எவ்விதம் அணுக முனைந்தனர் என்ற தெளிவில்லாமல் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் வகிபாகத்தை மேலோட்டமான பார்வைக்குள் கொண்டு வந்து விட முடியாது.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் 1978 ல் மாற்றமடையத் தொடங்கியதும் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் அமுலுக்கு வந்த பிறகும் இரு நாடுகளுக்குமான உறவுகள் மோசமடையத் தொடங்கியதை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டு இந்திய அணுகுமுறையை ஆராய இந்நூல் விரும்பவில்லை என்று தோன்றுகிறது.
இந்தியா போன்ற பல்வகை கலாசார மக்களையும் பெரும் பிரதேசங்களையும் கொண்ட நாட்டிற்கு இருக்கக் கூடிய பூகோள அரசியல் சவால்களைப் புறந்தள்ளி விடும் ஒருதலைப்பட்ச நியாயங்களை மட்டுமே வாய்ப்பாக பயன்படுத்த முனைகிறது இந்நூல்.
1978ல் புதிய அரசியல் போக்குகளை உருவாக்கிய ஜே ஆர் அரசாங்கம் மேலைத்தேயத்தின் முகாமுக்குள் தஞ்சமடைந்ததையும் பனிப்போர்கால வல்லரசு விளையாட்டுகளையும் மறந்து விட்டு இந்தியப் பகைமையைக் கட்டமைக்க முயல்கிறது இந்நூல்.
இலங்கையில் நிலவிய இன முரண்பாடுகளை தனது பூகோள நலன் சார்ந்த வகையில் கையாளும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. அதனை ஆரம்பத்தில் புரிந்து கொள்ளாத இலங்கை தமிழ், சிங்கள அரசியல்வாதிகளின் கையாலாகாத் தனத்தை புரிதலுக்கு உட்படுத்தாமல் இந்திய ஆக்கிரமிப்பை புலம்பலுடன் எதிர்கொள்கிறது இந்நூல்.
மேற்கிடமிருந்து இலங்கையைப் பிரித்து தனது காலடியில் போடுவதன் மூலம் எல்லா நலன்களையும் தகவமைத்துக் கொள்ளலாம் என எண்ணிய இந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களுக்குப் பலியான சிங்களத் தலைவர்களினதும் தமிழ் போராட்டத் தலைமைகளினதும் அறிவற்ற போராட்டத் திட்டமிடல்களை விமர்சனத்திற்குட்படுத்தாது எழுந்தமானமாக இந்திய ஆக்கிரமிப்பை நொந்து விட முடியாது.
எண்பதின் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு நண்பனாகவும் சிங்களவர்களுக்கு எதிரியாகவும் தெரிந்த இந்தியா பின்னாளில் சிங்களவரின் நண்பனாகவும் தமிழர்களின் விருப்பமற்றவனாகவும் தெரிந்த பார்வை மாற்றங்களுக்கான பின்புலங்களைச் சீர்தூக்கிப் பாராமல் பயணிக்கிறது இந்நூல்.
ஆரம்பகாலத்தில் இந்திய மக்களின் வரிப்பணத்தில் உதவிகளையும் ஆயுதங்களையும் கோடி கோடியாகப் பணத்தையும் பெறும்போது எவ்வித உறுத்தலுமின்றிப் பெற்ற தமிழ் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும்தான் இந்திய ஆக்கிரமிப்புக்கான கதவுகளைத் திறந்தவர்கள் எனும் சுய விமர்சனத்தை முன்வைக்காமல் நகர முயல்கிறது இந்நூல்.
தான் போட்ட முதலீட்டுக்கான இலாபத்தை வசூலிக்கச் சரியான தருணம் வாய்த்தபோது 1987 ல் சமாதான உடன்படிக்கை என்ற பெயரில் சந்தையை ஸ்திரப்படுத்திக் கொள்ள நுழைந்த இந்தியா சில சலுகைகளை வழங்க முனைந்தது.
சமயோசிதமும் ராஜதந்திரமும் அற்றவர்களாக சர்வதேச அரசியலைப் புரிந்து வைத்திருந்த போராட்டத் தலைமை பிழையான அணுகுமுறையை வெறுப்பரசியலாக அணுக முனைந்ததினால் அன்றிலிருந்து வீழ்ச்சிகள் ஆரம்பமாகின.
தமிழ் மக்களைப் பகடையாக வைத்து ஆடிய ஆட்டத்திற்கு இந்தியா தந்த சன்மானத்தை வாங்க மறுத்து வேறு சந்தைச் சக்திகளுக்கு தரகு வேலையை ஆரம்பித்தோம். அதனால் இழப்புகள் பல மடங்காகின.
இந்த விதமான திரைமறைவுகளை வெளிப்படுத்தாமல்இந்நூல் ஆக்கிரமிப்பு எனும் தரவுகளை மட்டுமே தருவதானது பல தசாப்தங்களாக நிலவும் நெருக்கடிகளின் பல பரிமாணங்களையும் சிதைப்பதாக அமைந்து விடுகிறது.
இலங்கை வந்த இந்தியப்படைகளை இலங்கை மக்கள் விரட்டியதாக இந்நூல் பிழையான தகவலையும் முன்வைக்கிறது.வி. பி. சிங் ஆட்சி ஏற்பட்டதும் அங்கு மண்டல் கமிசன் பிரச்சினைகள் தீப்பற்றத் தொடங்கியது. இங்கு இந்தியப் படையை விரும்பாத பிரேமதாசவும் ஆட்சிக்கு வந்திருந்தார். இந்தச் சூழல்களே இந்தியப் படை வெளியேற்றத்திற்குக் காரணம். புலிகள் இலங்கை அரச படைகளுடன் சேர்ந்து இந்தியப் படைகளுக்கெதிராக சண்டையிட்டதை இந்நூல் மறந்து விடுகிறது. அப்படியானால் ஏன் சிங்கள அரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் ஆரம்பத்திலேயே இந்திய ஆக்கிரமிப்பைத் தடுத்திருக்க முடிந்திருக்குமே எனும் நியாயத்தையும் மறைத்து விடுகிறது.
இன்றைய உலகில் அரசுகள் என்பவை மக்கள் நலன் சார்ந்தவை அல்ல. அதிலும் குறிப்பாக கீழைத்தேய நாடுகள் குறிப்பிடப் பட வேண்டியவை. இந்நாடுகள் யாவும் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் தரகர்களாகவே செயல்படுகின்றன. எதுவித கட்டுப்பாடுகளுமற்ற முதலீட்டுச் சூழலை அந்தச் சக்திகளுக்கு உருவாக்கிக் கொடுப்பதே இன்று அரசுகளின் வேலையாக இருக்கிறது.
அந்த வகையில் இந்திய முதலாளித்துவ சக்திகள் இலங்கையைக் கையாள நினைத்ததின் விளைவே இனப்போராட்டம். இதனை ஆரம்பத்தில் புரிந்திருந்தால் குறைந்த சேதாரங்களோடு நமக்குச் சில எலும்புத் துண்டுகள் கிடைத்திருக்கும். மறுத்ததின் விளைவு இன்று எலும்புமில்லை துரும்புமில்லை.
இந்திய முதலாளித்துவ ஏகாதிபத்தியமானது உலகப் பாத்திரத்தை எடுத்து வரும் இக்காலத்தில் அரசியல் , பொருளாதாரம் , கலை, பண்பாடு எல்லாவற்றையும் அது உறிஞ்சிக் குடித்து விடும் தீவிரத்திலுள்ளது.
அதனை எதிர்ப்பதற்கான வழி இந்நூல் கூறுவது போன்ற வேறொரு மக்கள் போராட்டமல்ல. உள்நாட்டடில் சகோதர வாஞ்சையுடன் சக இன மக்களோடு ஐக்கியமாக வாழத் தெரியாத இலங்கை மக்களுக்கு போராட்டங்கள் பயன் தராதவை.
முடிந்த வரை மாற்றி யோசிப்பதும் இன்றைய உலகம் அதிகாரத்துடன் வலியுறுத்தும் அறங்களை நையாண்டியாகக் கடப்பதுமே தற்காலிக ஆறுதலைத் தரக் கூடியவை.

No comments:

Post a Comment