Saturday, July 30, 2016

•அவதூறுகள் மூலம் தோழர் சண்முகதாசன் பங்களிப்பை மறுத்துவிட முடியாது!

•அவதூறுகள் மூலம் தோழர் சண்முகதாசன் பங்களிப்பை மறுத்துவிட முடியாது!
கடந்த சனிக்கிழமையன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் ஜெயபாலன் எழுதிய வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை நூல் வெளியீடு நடைபெற்றது.
அதையடுத்து பௌசர் தலைமையில் “தேசியவாதமும் சமகால அரசியலும்” என்னும் தலைப்பில் கனடாவில் இருந்து வந்திருந்த ஜான் மாஸ்டர் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையின்போது கிராமங்களில் இருந்து நகரங்களைக் கைப்பற்றுதல் என்று மாவோ வின் திட்டத்தை அப்படியே சண்முகதாசன் காப்பி அடித்ததாகவும் அதற்கு காரணம் சண்முகதாசன் சொந்தமாக சிந்திக்கும் திறனற்ற ஒரு தலைவராக இருந்ததே காரணம் என்று கூறினார்.
அதையடுத்து பார்வையாளர்களின் கருத்து பகிர்வின்போது பேசிய சோசலிசக் கட்சியை சேர்ந்த சேனன் என்பவர் சண்முகதாசனுக்கு டிராக்சியின் முழு உலகப் புரட்சி பற்றி எதுவுமே தெரியாது என்றும் சண்முகதாசன் ஒரு கம்யுனிஸ்டே அல்லவென்று பேசினார்.
தோழர் ஸ்டாலின் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் முதலாளித்துவவாதிகள் ஸ்டாலின் மீது அவதூறு பொழிவதற்கு ஓரே காரணம் ஸ்டாலின் போல் முதலாளித்துவவாதிகளுக்கு மரண அடி கொடுத்தவர்கள் வேறு யாரும் இல்லை என்பதே.
அதேபோல் தோழர் சண்முகதாசன் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டபோதும் இன்றும் இலங்கையில் திரிபுவாதிகளும் டிரொக்சியவாதிகளும் தோழர் சண்முகதாசன் மீது அவதூறு பொழிவதற்கு காரணம் அவரைப் போல் வேறு யாரும் இவர்களை அம்பலப்படுத்தி மரண அடி கொடுத்ததில்லை.
ஜான் மாஸ்டர் என்பவர் முதலில் புளட் அமைப்பில் இருந்தார். பின்பு தீப்பொறியில் இருந்தார். அதன் பின்பு தமிழீழ கட்சி; அமைத்தார். அதன் பின்பு மே 18 என்றார்கள். இடையிடையே காணாமல் போவார். அப்புறம் உயிர்த்தெழுந்து வருவார். இப்போது என்ன கட்சியில் என்ன கொள்கையில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. இவர்மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அது குறித்து ஒரு சுயவிமர்சனம் எதுவும் செய்யாமல் சண்முகதாசன் மீது அவர் அவதூறு பொழிவது எதற்காக?
தோழர் சண்முகதாசன் ஒரு சர்வதேச தலைவர். அவர் தன் வாழ் நாளின் இறுதிக் கணம்வரை மாசேதுங் சிந்தனைகளுக்காக அயராது குரல் கொடுத்தவர்.
தோழர் சண்முகதாசன் மீது அவதூறு பொழிவதன் மூலம்,
அவர் முன்வைத்த மாசேதுங் சிந்தனைகளை நிராகரிக்க முயலுகின்றார்கள்.
அவர் காட்டிய மக்கள் யுத்த பாதையை நிராகரிக்க முயலுகின்றார்கள்
அவர் முன்னெடுத்த புதியஜனநாயக புரட்சியை நிராகரிக்க முயலுகின்றார்கள்.
அவர் தோற்கடித்த டிரொக்சியத்திற்கு உயிர் கொடுக்க முனைகிறார்கள்.
அவர் அம்பலப்படுத்திய திரிபுவாதிகளை நியாயப்படுத்த முனைகிறார்கள்.
ஆனால் எனனதான் தலைகீழாக நின்றாலும் புரட்சியாளர்கள் மனங்களில் இருந்து தோழர் சண்முகதாசனை இவர்களால் நீக்கிவிடமுடியாது.
தோழர் சண்முகதாசன் மீது அவதூறு பொழிவதன் மூலம் இவர்கள் தங்களையே மேலும் மேலும் அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment