Saturday, June 30, 2018

ஜனாதிபதி அங்கிளுக்கு!

ஜனாதிபதி அங்கிளுக்கு!
வருடப்பிறப்பிற்கு முன்னர் அப்பாவை விடுதலை செய்வதாக வாக்குறுதி தந்தீர்கள்
வருடப் பிறப்பும் வந்து போய்விட்டது. ஆனால் நீங்கள் கூறியது போன்று அப்பா மட்டும் இன்னும் வரவில்லை.
ஒவ்வொரு நாளும் விடியும்போது சூரியன் வருகிறதா என்று நாங்கள் வானத்தை பார்ப்பதில்லை.
அப்பா வருகிறாரா என்று வீட்டு படலையைத்தான் பார்த்து பார்த்து ஏமாறுகின்றோம்.
நீங்கள் ரொம்ப எளிமையான ஜனாதிபதி என்கிறார்கள். உங்களை கொல்ல வந்தவரையே மன்னித்தவர் என்கிறார்கள்.
நீங்கள் குழந்தைகள் மீது மிகவும் பிரியம் கொண்டவர் என்கிறார்கள்.
“குழந்தைகளை பாதுகாப்போம்” திட்டத்திற்காக நீங்கள் கிளிநொச்சி வருவதாக கூறினார்கள்.
எங்கள் அப்பாவை விடுதலை செய்யக்கோரி மீண்டும் மனுவுடன் உங்களை காண அவுலுடன் வந்தோம்.
வெத்திலையுடன் வந்தபோதும், நீண்ட நேரம் காத்து இருந்தபோதும் உங்களை சந்திக்க முடியவில்லை.
அம்மா உயிருடன் இல்லை. அப்பாவின் அரவணைப்பும் இல்லை. ஆனாலும் உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்போம் திட்டத்தில் நாங்கள் இல்லை.
என்ன செய்வது? சிங்கள குழந்தைகள் என்றால்தான் நீங்கள் இரக்கப்படுவீர்கள் என்பதை யாரும் எங்களுக்கு கூறியிருக்கவில்லையே.
யாரோ செய்த தவறுக்கு நாங்கள் தண்டனை அனுபவிக்கின்றோம். எங்களுக்கு உதவ யாரும் இல்லையே.
தமிழ் இனத்தில் பிறந்ததைத் தவிர வேறு எந்த தவறும் நாங்கள் செய்திருப்பதாக தெரியவில்லை.
எங்களுக்குரிய நியாயத்தை எங்களுக்கு தெரிந்த மொழியில் நாங்கள் கேட்க ஆரம்பித்தால்,
உடனே ஜ.நா ஓடிவந்து “குழந்தைப் போராளிகள்” என்று ஒப்பாரி வைக்கும்
“பயங்கரவாதிகள்” என்று கூறி உலக நாடுகளிடம் கடன் வாங்கி நீங்கள் யுத்தம் செய்வீர்கள்.
ஆனால் நீங்கள்தான் பயங்கரவாதிகளை உருவாக்குகிறீர்கள் என்ற உண்மையை மட்டும் யாரும் அறியா வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள்.
வரலாறு எப்போதும் நீங்கள் விரும்பியபடி மட்டும் செல்லும் என்று எண்ணாதீர்கள்.
அது எமக்காகவும் மாறும். மாற்றவும் முடியும்.
இப்படிக்கு
உங்களை நம்பி ஏமாந்த
ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்.

No comments:

Post a Comment