Saturday, June 30, 2018

• அம்மா! எங்களை மன்னித்துவிடுங்கள்!

• அம்மா!
எங்களை மன்னித்துவிடுங்கள்!
ஒன்றல்ல இரண்டல்ல இருபத்தேழு வருடங்கள் உங்கள் மகனின் விடுதலைக்காக நடந்து நடந்து களைத்து விட்டீர்கள்.
விடுதலை பெற்று வருவான் என்று காத்து காத்து இருந்து விரக்தி அடைந்துவிட்டீர்கள்.
அதனால் எந்த தாயும் சொல்ல முடியாத வார்த்தை “என் மகனை கருணைக் கொலை செய்யுங்கள்” என்று சொல்லியுள்ளீர்கள்.
ஆனால் இந்த வேளையிலும்கூட மகனை கொன்றுவிடுங்கள் என்றுதான் சொல்லியுள்ளீர்களேயொழிய “மகன் தெரியாத்தனமாக ஈழத் தமிழர்களை ஆதரித்து விட்டான்” என்று சொல்லவில்லை.
ஒரு வருடம் இரண்டு வருடம் சிறை என்றவுடனே பெரும்பாலும் பலர் மன்னிப்பு கெட்டு கடிதம் வழங்கும் இந்த காலத்தில் 27 வருடம் கழித்த பின்பும்கூட ஈழத் தமிழர்களை தான் ஆதரித்தது தவறு என்று உங்கள் மகன் பேரறிவாளன் கூறவில்லை.
அதுமட்டுமல்ல தான் விடுதலை செய்யப்பட்டால் தொடர்ந்தும் ஈழத் தமிழர்களை ஆதரிப்பேன் என்றுதான் அவர் தொடர்ந்தும் கூறிவருகிறார்.
நீங்களோ அல்லது உங்கள் மகனோ ஒரு சாதிச் சங்கத்தை ஆதரித்திருந்தால் இந் நேரம் விடுதலை பெற்றிருக்க முடியும்.
நீங்களோ அல்லது உங்கள் மகனோ ஒரு இந்துத்துவ அமைப்பை ஆதரித்திருந்தால்கூட இந் நேரம் விடுதலை பெற்றிருக்க முடியும்.
ஆனால் நீங்களும் உங்கள் மகனும் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை பின்பற்றுவதோடு ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதிரிப்பதால்தானே விடுதலை செய்ய மறுக்கிறார்கள்.
எங்கள் தலைவர் சம்பந்தர் அய்யா ஒவ்வொரு வாரமும் இந்திய தூதருடன் விருந்து உண்ணுகிறார். ஒருதடவைகூட பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் என்று அவரால் கேட்க முடியவில்லை.
அண்மையில்கூட எமது மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அய்யா தமிழகம் வந்திருந்தார். ஒரு சம்பிரதாயத்திற்குகூட பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் என்று அவரால் குரல் கொடுக்க முடியவில்லை.
எமது தலைவர்கள் பதவி பெறுவதிலும் தமக்கு 5 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் வாங்குவதிலும் அக்கறை கொள்கிறார்களேயொழிய ஈழத் தமிழருக்காக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டியது தமது கடமை என்பதை உணர்கிறார்கள் இல்லை.
அம்மா! எங்களை மன்னித்துவிடுங்கள். உங்கள் மகனின் விடுதலைக்கு எதுவும் செய்தாத நன்றி கெட்ட இனமாக ஈழத் தமிழர்கள் இருக்கிறோம்.
தயவு செய்து நீங்கள் மனதை விட்டு விடாதீர்கள் அம்மா!
அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்தால் மகிழ்ச்சி அடைவோம். விடுதலை செய்யாவிட்டால் பெரு மகிழ்ச்சி அடைவோம்.
ஏனெனில் அவர்கள் எழுவர் விடுதலையை மறுப்பதன் மூலம் தமிழ்நாடு விடுதலைக்கு வழி சமைத்து தருகின்றனர்.

No comments:

Post a Comment