Thursday, November 29, 2018

•சில கேள்விகளும் பதில்களும்!

•சில கேள்விகளும் பதில்களும்!
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி “போராடிய போராளிகள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது லண்டனில் மாபெரும் செலவில் விழா தேவையா?” என்பதே.
நல்ல கேள்வி. கேட்க வேண்டிய கேள்விதான். ஆனால் இதற்குரிய பதிலை காண்பதற்கு முன்னர் “ நாம் ஏன் மாவீரர்களை நினைவு கூர வேண்டும்?” என்ற கேள்விக்கு பதில் காண்போம்.
மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
அப்படியென்றால் மரணித்த மாவீரர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்?
முதலாவதாக, ஆவர்கள் எமக்காக மரணித்தவர்கள்
இரண்டாவதாக, அவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
மூன்றாவதாக அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
முக்கியமாக எமது இளம் சிறார்கள் இதை உணர்வதற்கு மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
ஏனெனில் எமது அடுத்த சந்ததியினரான இளம் சிறார்கள் தேடப்போவது தமது இறந்த உறவுகளின் கல்லறைகளில் உள்ள பெயர்களை அல்ல. மாறாக தங்கள் உறவுகளின் வேர்களை.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இலங்கை அரசு வேண்டுமானால் மாவீரர்களின்; கல்லறைகளை உடைக்கலாம். ஆனால் இந்த இளம் சிறார்களின் நெஞ்சுறுதியை ஒருபோதும் உடைக்க முடியாது.
இவர்கள் மிக விரைவில் தங்களுக்குரிய நியாயத்தை கேட்பார்கள். அதுவும் தங்களுக்கே உரிய மொழியில் கேட்கப் போகிறார்கள்.
சரி. இனி முதல் கேள்விக்கான பதிலை பாhப்போம்.
•கேள்வி- போராடியவர்கள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது மாவீரர்களுக்கு லண்டனில் மாபெரும் செலவில் விழா தேவையா?
பதில்- உண்மையில் நல்ல கேள்வி. ஆனால் இதே லண்டனில் ஈஸ்ட்காமில் 4 கோயில்கள் அருகருகே பல மில்லியன் ரூபாவில் கட்டும்போது இது தேவையா என்று கேள்வி கேட்காதவர்கள் ஒக்ஸ்போட் நகரில் மாவீரர்களுக்கு பணிமனை கட்டும்போது ஏன் கேட்கின்றனர்?
இதே லண்டனில் O2அரினா மண்டபத்தில் ARரகுமான் கச்சேரி நடக்கும்போது கேள்வி கேட்காதவர்கள் எக்சல் மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ஏன் கேட்கிறார்கள்?
வெம்பிளி அரினாவில் மானாட மயிலாட நடந்தபோது கேள்வி எழுப்பாதவர்கள் அதே வெம்பிளி அரினாவில் மாவீரர் நினைவு கூரும்போது ஏன் கேட்கிறார்கள்?
ஈலிங் அம்மன் ரோட்டில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்த போது ஏன் இந்த வீண் செலவு என்று கேட்காதவர்கள் மாவீரருக்கு பூ வும் விளக்கும் வைக்கும்போது ஏன் கேட்கின்றனர்?
நாய்க்கு ஜயர் பிடித்து செத்த வீடு நடத்தும்போதும் கெலிகப்டர் பிடித்து சாமத்திய சடங்கு நடத்தும்போதும் கேள்வி எழுப்பாமல் மௌனமாக இருந்தவர்கள் மாவீரர் நினைவு கூரும்போது மட்டும் ஏன் கேள்வி கேட்கின்றனர்?
கேள்வி- வெயிட் வெயிட், இத்தனையும் கேட்டவர்கள்தான் காயம்பட்ட போராளிகளுக்காக கேள்வி கேட்க முடியும் என்கிறீர்களா?
பதில்- இல்லை. ஆனால் இவர்கள் உண்மையில் காயம்பட்ட போராளிகள் மீது அக்கறை இருந்திருந்தால் இத்தனையும் கேட்டிருப்பார்கள். மாறாக மாவீரர் அஞ்சலி நிகழ்வின்போது மட்டும் இப்படி கேட்க மாட்டார்கள்.
கேள்வி – கேள்வி கேட்டவர்களின் நோக்கம் தவறாக இருக்கலாம். ஆனால் கேள்வி தவறு இல்லையே?
பதில்- இத்தனை குறுகிய காலத்திற்குள் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்கிறது எனில் அதற்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உணர்வும் பங்களிப்புமே
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபுறம் போராட்டத்தை முன் நகர்த்துகின்றனர் மறுபுறத்தில் தாயகத்தில் உள்ள தம் உறவுகளை தாங்கிப் பிடிக்கின்றனர்.
அவர்கள் உலக தமிழ் இனத்திற்கு சொல்லும் செய்தி இதுதான்,
"ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்
நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்து செல்.
ஆனால் ஒருபோதும் உன் இயக்கத்தை நிறுத்திவிடாதே!"
•கேள்வி - மாவீரர் நினைவு விழாவில் சீமான், திருமுருகன்காந்தி, கௌதமன் போன்ற தமிழக தலைவர்கள் எதற்கு என்று சிலர் கேட்கிறார்களே?
பூனை கறுப்பா வெள்ளையா என்பது பிரச்சனை அல்ல. அது எலி பிடிக்கிறதா என்பதே முக்கியம்.
அதுபோன்று எமக்கு ஆதரவு தருபவர்கள் சீமானா திருமுருகன்காந்தியா என்பது பிரச்சனை அல்ல. அவர்கள் எமக்கு ஆதரவு தருகிறார்களா என்பதே முக்கியம்.
நாம் வெற்றி பெறுவதற்கு எமக்கு எதிரானவர்களையும் வென்றெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இந்நிலையில் எமக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை வேண்டாம் என்று கூறுவதற்கு ஒன்றில் நாம் முட்டாள்களாக இருக்க வேண்டும் இல்லையேல் எதிரிக்கு துணை போகிறவர்களாக இருக்க வேண்டும்.
தமிழ் இனம் இனி ஒருபோதும் முட்டாள்தனமாகவும் இருக்காது. எதிரிக்கு துணை செய்யும் கருத்துகளுக்கும் இடமளிக்காது.
•கேள்வி - இறுதியாக ஒரு கேள்வி. புலம்பெயர் நாடுகளில் இருந்து குரல் கொடுப்பவர்களை தாயகத்தில் வந்து போராடும்படி சிலர் நக்கலாக பேஸ்புக்கில் அழைக்கிறார்களே?
பதில் - முன்பு தென்ஆபிரிக்கா நிறவெறிக்கு எதிராக உலகம் பூராவும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களை தென்னாபிரிக்காவில் வந்து போராடும்படி எந்த ஆப்பிரிக்கத்தவரும் கேட்டதில்லை.
இப்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்கின்றனர். ஆனால் அவ்வாறு குரல் கொடுப்பவர்களை பாலஸ்தீனத்தில் வந்து குரல் கொடுக்கும்படி எந்த பாலஸ்தீனத்தவரும் கூறுவதில்லை.
காஸ்மீரில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக லண்டனில் உள்ள காஸ்மீரிகள் குரல் கொடுக்கின்றனர். ஆனால் அவர்களை காஸ்மீரில் வந்து குரல் கொடுக்கும்படி எந்த காஸ்மீரிகளும் கேட்டதில்லை.
சீக்கியர்கள் காலிஸ்தானுக்காக லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து குரல் கொடுக்கின்றனர். ஆனால் அவர்களை பஞ்சாபில் வந்து குரல் கொடுக்கும்படி எந்த சீக்கியரும் கேட்பதில்லை.
ஆனால் தமிழ் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர் குரல் கொடுத்தால் அவர்களை இலங்கையில் வந்து குரல் கொடுக்கும்படி சில தமிழர்கள் கிண்டலாக கேட்கிறார்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போர் இலங்கை வந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ச கூறியதையே இவர்களும் கூறுகிறார்கள்.
இலங்கையில் படுகொலைகள் மூலம் தமிழர்களின் குரல் வளையை நசுக்கிய கோத்தபாயா கும்பலுக்கு புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் குரல் எழுப்புவது சகித்தக்கொள்ள முடியாததுதான்.
இன்று புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதால்தானே ஜ.நா வும் ஏகாதிபத்திய நாடுகளும் பெயரளவுக்கேனும் தமிழர் விடயத்தில் அக்கறை காட்டுகின்றன.
வரலாற்றில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்று தமிழ் மக்களை சந்தித்தார் என்றால் அதற்கு பிரித்தானியாவில் உள்ள இரண்டு லட்சம் தமிழர்கள் காரணமின்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
கனடா அரசு தொடர்ந்து இனப்படுகொலை விசாரணையை வலியுறுத்துகிறது எனில் அங்கு இருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் அன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
ஜ.நா வில் 6 மாத்திற்கு ஒரு முறை இலங்கை இனப்படுகொலை குறித்து ஏதாவது பேசப்படுகின்றது எனில் அதற்கு ஜரோப்பாவில் வாழும் தமிழர்கள் அன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களால் இயன்ற போராட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் வாழும் தமிழர்களுடனும் ஒன்றிணைகிறார்கள்.
வராலாற்றில் என்றுமில்லாதவாறு உலகில் வாழும் தமிழ மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு என்று புரட்சிக் கவிஞர் பாரதிசாதன் அன்று கண்ட கனவை புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று நனவாக்கின்றனர்.
ஆதனால்தான் உருவாகும் தமிழ் மக்களின் இந்த ஜக்கியத்தை குழப்புவதற்கு இலங்கை இந்திய அரசுகள் முயற்சி செய்கின்றன.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் வந்து போராட வேண்டும் என எழுதுவோர் இலங்கை இந்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு துணை போகின்றனர்.
இன்று சுமார் 7 லட்சம் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் இனத்திற்கு குரல் கொடுப்பதாயின் இலங்கைக்கு வர வேண்டும் எனக் கோருவது முட்டாள்தனமானது மட்டுமன்றி அவர்களது ஜனநாயக உரிமையை மறுப்பதாகும்.
இலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருப்பது எமது பலவீனம் எனில் உலக அளவில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருப்பது எமது பலமாகும்.
இலங்கையில் சிங்கள மக்கள் இருக்கலாம். ஆனால் உலகம் பூராவும் தமிழ் மக்கள் பரந்து வாழ்கிறார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் அடுத்த தலைமுறை பல மொழிகள் கற்கிறார்கள். உயர் கல்வி கற்கிறார்கள். உயர் பதவிகளும் பெறுகிறார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உரிய அரசியல் பிரயோகத்தை மேற்கொண்டு தங்களை பல வழிகளிலும் பலப்படுத்தி வருகிறார்கள்.
உலகில் உள்ள போராடும் மக்களுடன் , அமைப்புகளுடன் ஜக்கியப்பட்டு தமது போராட்டத்தை புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொள்ளும்போது உலக அரங்கில் இலங்கை அரசு தனிமைப்படுத்தப்பட்டு தோல்வியை தழுவும்.
ஆம். தமிழ் மக்களின் எதிர்கால போராட்ட வரலாற்றில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய பங்களிப்பை செலுத்தப் போகிறார்கள்.
இதனால்தான் அதனை விரும்பாதவர்கள் இலங்கை வந்து போராடும்படி புலம்பெயர்ந்த தமிழர்களை கிண்டல் பண்ணி அழைக்கிறார்கள்.
நாம் தொடர்ந்து போராடுவதன் மூலம் அவர்களுக்குரிய பதிலை வழங்குவோம்!
இறுதியாக, இந்த கிண்டல் பேர்வழிகளின் கவனத்திற்கு ஒரு விடயம்
கோத்தபாயாவினால் பேட்டி கொடுக்க வைக்கப்பட்ட டொக்டர் வரதராசன் கடந்த வருடம் ஜ.நா வில் தமிழ் மக்களுக்கு சார்பாக சாட்சியம் அளித்தார்.
கோத்தபாயாவினால் சாட்சியாக முன்னிறுத்திய தமிழ்செல்வன் மனைவி இந்த வருடம் ஜ.நா வில் தமிழ் மக்கள் சார்பாக சாட்சியம் வழங்கினார்.
இதேபோன்று அடுத்த வருடம் யார்; சாட்சியம் அளிக்கப் போகிறார்கள் என்று இலங்கை அரசு அச்சம் கொள்கிறது.
இவையாவற்றையும் சாதிப்பது புலம்பெயர் தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டமே.

No comments:

Post a Comment