Friday, July 31, 2020

அடிமையாகி கிடந்துவிட மாட்டோம்

•அடக்குமுறையினால் அழித்தாலும் அடிமையாகி கிடந்துவிட மாட்டோம் முன்பைவிட வலிமையாக ஆர்ப்பரித்து எழுவோம்! ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் வரும்போது தமிழருக்கு நினைவில் வருவது 1983ம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலைகளே. அதுவும் வெலிக்கடை சிறையில் நடைபெற்ற குட்டிமணி, தங்கத்துரை உட்பட 52 பேரின் படுகொலைகள் மறக்க முடியாதவை. மனித இனம் உன்னதமான ஒரு வாழ்க்கையை, பரிபூரண விடுதலையை நோக்கி முன்னேறும் இக் காலகட்டத்தில் மிருகத்தனமான மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற நிகழ்வு அது. இக் கொடூரமான வெறிகொண்ட தாக்குதலில் பலியான கொள்கை மறவர்களில் ஒருவர் தோழர் அழகன் என்று அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை சந்திரகுமார். தோழர் அழகன் பருத்தித்துறையில் புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். காட்லிக்கல்லூரியில் கல்வி கற்றவர். 1979ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் தன்னை முழு நேரமாக இணைத்துக்கொண்டவர். புலிகள் இயக்கம் உடைந்து புதிய பாதை ( புளட்) என்ற அணி உருவாகிய போது தோழர் அழகன் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அவ்வணியும் பழைய பாதையில் போவதைக் கண்டு அதிலிருந்து விலகி "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்னும் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக விளங்கினார். தோழர் அழகன் மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். அவர் இந்திய புரட்சிகர சக்திகளுடன் ஜக்கியத்திற்கு உழைத்தார். அதன் நிமித்தம் இந்தியா சென்று திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். 1983ம் ஆண்டு யூலை மாதம்25ம் தேதியன்று வெலிக்கடை சிறையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் கொல்லப்பட்டபோது தோழர் அழகன் அவர்களும் கொல்லப்பட்டார். தோழர் அழகன் கொல்லப்பட்டு இன்றுடன் 37 வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் அவர் விரும்பிய இலட்சியம் இன்னும் வெல்லப்படவில்லை. தமிழ் மக்கள் இன்னும் விடுதலை பெறவில்லை. வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலிகளை செலுத்துவோம். தோழர் அழகன் அவர்கள் நினைவாக புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க உறுதி கொள்வோம். குறிப்பு- வெலிக்கடை சிறையில் மட்டுமல்ல களுத்துறை மற்றும் பிந்தனுவ சிறைகளிலும் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை ஒருவர்கூட இக் கொலைகளுக்காக தண்டிக்கப்படவில்லை. Image may contain: one or more people, text that says "அடக்கு முறையினுல் அழித்தாலும் நக்கிரமிப்பை முறியடிப்போர்"

No comments:

Post a Comment