Friday, July 31, 2020

தாய்த் தமிழகத்தின் அர்ப்பணிப்பு விபரங்கள் வெளிவருமா?

தாய்த் தமிழகத்தின் அர்ப்பணிப்பு விபரங்கள் வெளிவருமா? தமிழகத்தில் இருந்து வந்து ஈழப் போராட்டத்தில் பங்குபற்றி வீர மரணம் அடைந்தவர்கள் பற்றி நான் எழுதும்போதெல்லாம் பலரும் என்னிடம் கேட்பது இவர்கள் பற்றிய விபரங்களை நூலாக வெளியிடுமாறு. (1) நான் புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லை (2) நான் இவர்களுடன் நேரிடையாக ஒருபோதும் பழகியதில்லை (3) இப்பகூட இவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் என்னிடம் இல்லை. மேற்கண்ட காரணங்களால் நான் பெரிதும் விரும்பினாலும்கூட என்னால் அவர்கள் பற்றிய விபரங்களை நூலாக எழுத முடியவில்லை. நான் மதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்த தமிழ்நாடு மீட்சிப்படையினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் மூலம் தமிழ்நாட்டில் இருந்து ஈழம் சென்று பயிற்சி எடுத்தவர்கள் பற்றிய சில செய்திகள் அறிய முடிந்தது. அவர்களிடம்கூட ஈழம் சென்று வீர மரணம் அடைந்தவர்கள் முழு விபரம் இப்போது இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இவ்வாறு ஈழம் சென்று தாக்குதல்களில் பங்குபற்றிய ஒருவரின் எழுத்தை படிக்கும் வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. அவர் தன் அனுபவங்களை தொகுத்து எழுதிய நூலை என் கருத்தை அறிவதற்காக தந்திருந்தார். அதில் முழு விபரங்கள் இல்லாவிடினும் தமிழகத்தில் இருந்து சென்ற ஒருவரின் முதல் நூல் என்ற பெருமை அதற்கு கிடைக்கும் என அவருக்கு கூறியிருந்தேன். வெகுவிரைவில் அந் நூல் வெளிவரும் என நம்புகிறேன். அந் நூல் இதேபோல் மற்றவர்களையும் நிச்சயம் எழுத தூண்டும். இவ்வாறு பலரும் எழுதும்போது தமிழகத்தில் இருந்து சென்று பங்குபற்றியவர்கள் மற்றும் வீரமரணம் அடைந்தவர்கள் விபரம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும். ஆனால் இந்திய உளவு நிறுவனங்கள் இவ் விபரங்கள் வெளிவரவோ அல்லது அவ் வீர மரணமடைந்தவர்களை மக்கள் நினைவு கூரவோ ஒருபோதும் அனுமதிக்காது. ஏனெனில் இனிவரும் காலங்களில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாவதற்கு இவர்கள் வரலாறு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்ற அச்சம் அவற்றுக்கு உண்டு. ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி தமிழினம் ஒன்று சேர்ந்து போராடப் போவது உறுதி. குறிப்பு – கீழே தரப்பட்ட விபரங்கள் எந்தளவு தூரம் சரியானவை என்பது குறித்து என்னால் உறுதி செய்ய முடியவில்லை. Image may contain: 4 people, including Makesan Makesh

No comments:

Post a Comment