Friday, July 31, 2020

தமிழர் நல பேரியக்கத்தின் தலைவரும் இயக்குனருமான மு.களஞ்சியம்

தமிழர் நல பேரியக்கத்தின் தலைவரும் இயக்குனருமான மு.களஞ்சியம் அவர்கள் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அவருக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும். அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு, ’’ ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்’’ தோழர் பாலன் அவர்கள் எழுதிய இந்த நூலை அதன் வெளியீட்டு நிகழ்வில் பேசுவதற்காகப் படித்துக் குறிப்பெடுத்திருந்தேன். அந்த நிகழ்வில் நான் பேசுவதற்காக மேடையில் அமர்ந்திருந்த போது,என் உயிருக்கு நெருக்கமான தோழர் மதுக்கூர் மைதீன் அவர்கள் கூலிப்படைக் கயவர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ந்து போனேன். அன்று என்னால் பேசவே முடியவில்லை. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அப்படியே மதுக்கூருக்கு ஓடி விட்டேன். அதன் பிறகு இந்த நூல் குறித்து முகநூலில் பதிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் அதையும் செய்ய முடியாமல் போனது. பொதுவாக எனக்குத் தோழர் தமிழரசன் அவர்கள் குறித்துப் பேசுவது,அவர் குறித்த நூல்களை வாசிப்பதெல்லாம் தனித்த விருப்பமான செயல்பாடாகும். ஆகவே மீண்டும் மீண்டும் அந்த செயல்களில் ஈடுபடுவேன் ஆகவே இரவு மீண்டும் ’’ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் ’’ நூலை வாசித்தேன். தோழர் தமிழரசன் அவர்கள் குறித்து நிறைய நூல்கள் நம்மிடம் இல்லை. அவர் குறித்த செய்திகளும் திரும்பத் திரும்ப பேசியதையே பேசும் செய்திகளாகவே இருக்கிறது. இன்னிலையில் இந்த நூல் தோழர் தமிழரசன் அவர்கள் குறித்த புதிய செய்திகளைப் பதிவு செய்திருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. " நான் தோழர் தமிழரசன் அவர்களோடு இருந்தேன்.அவரை எனக்குத் தெரியும்" என்று சில நிகழ்வுகளில் சொன்னதோடு சரி. அவரோடு எனக்குள்ள அனுபவங்களை இதுவரை நான் எழுத்தில் பதிவு செய்ததில்லை. ஆனால் தோழர் பாலன் அவர்கள் தோழர் தமிழரசன் அவர்களோடு தனக்கேற்பட்ட அனுபவங்களை ஒரு வரலாற்றுக் கடமையாக நினைத்துப் பதிவு செய்துள்ளார் அது போற்றுதலுக்குறியது. இந்த நூலை வாசிக்க நூலுக்குள் நுழைகிறவர்களை மிகத் தெளிவாக கரம் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறார் தோழர் பாலன். அதாவது, ஒரு திரைப்படத்தின் இயக்குநர் தனது படத்தைப் பார்க்கும் பார்வையாளனுக்குக் குழப்பம் வந்து விடாமல் இருக்க கதாபாத்திரங்களை முன்கூட்டியே அறிமுகம் செய்வார் அதே போல நூலின் தொடக்கத்திலேயே தோழர் தமிழரசன் குறித்தும் தோழர் நெப்போலியன் குறித்தும் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை குறித்தும் ஒரு தெளிவைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறார் ஆகவே படிப்பவர்களுக்கு ஒரு குழப்பமும் இல்லாமல் படிக்க முடிகிறது. தோழர் பாலன் அவர்களின் முன்னுரை ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் அதிர்ச்சியூட்டும் முதல் காட்சியைப் போலத் தோழர் தமிழரசன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியிலிருந்து தொடங்குகிறது. இது நூலை படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக நான் கருதுகிறேன். பொதுவாக ஈழப்போராளிகளுக்குத் தோழர் தமிழரசன் அவர்கள் குறித்துத் தெரிவதில்லை. அவர் எந்த அளவுக்கு ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டார் என்பதும் யாருக்கும் தெரியவைல்லை. இது வருந்தத் தக்க விடயமாகும் அந்தக் குறையை தோழர் பாலன் இந்த நூலை எழுதியதன் மூலம் நிவர்த்தி செய்துள்ளார். ஆகவே, தமிழகப் புரட்சியாளர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகின்ற தோழர் தமிழரசன் அவர்களைப் பற்றி, அவரோடு பயணித்த ஒரு ஈழப்போராளியே உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்வது சால சிறந்ததாகும். தோழர் தமிழரசன் பயங்கர வாதியா? அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டமா? என்கிற கேள்விகளை முன் வைத்துப் பதிலளிக்கிறார் தோழர் பாலன் அவர்கள். தோழர் தமிழரசன் ஒரு போராளி. மார்க்சிய லெனிச மாவோயிசத்தின் வழியில் தேசிய இன விடுதலைக் குறித்துச் சிந்தித்த புரட்சியாளர். ஆகவே தான் ’’தமிழ்நாட்டு விடுதலை’’ என்கிற இலக்கை அடைய ஆயுதப் போராட்ட வழியை முன்னெடுத்தார். இந்திய அரசு தமிழீழ விடுதலைக்கும் தமிழக விடுதலைக்கும் எதிரான ஆற்றல் என்பதைத் தோழர் தமிழரசன் சரியாக புரிந்து வைத்திருந்தார் என்று பல்வேறு சான்றுகளோடு தோழர் பாலன் விளக்கிச் சொல்லுகிறார். தோழர் தமிழரசன் அவர்கள் பாராளுமன்ற பாதையைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் மக்கள் யுத்தப் பாதையை தேர்ந்தெடுத்தார்? என்பதை மிகத் தெளிவாக நூலில் விளக்குகிறார். இன்றைக்கு விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டப் பாதை தோற்றுப் போய்விட்டது என்று கருதுகிறவர்கள் ஆயுதப் போராட்டம் பயனற்றது என்று புத்தி சொல்லுகிறார்கள்.ஆனால் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் புரட்சி வென்றிருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் ஆயுதப் போராட்டம் தான் என்பதை எடுத்துக் காட்டுகிறார். இது குறித்து தோழர் பாலன் அவர்கள் மிகச் சரியாக விளக்கி இருக்கிறார்.அதிலும் குறிப்பாகச் சமகால ஈழ, தமிழக சிக்கல்களை அடுத்து அடுத்து அவர் பட்டியலிடும் விதம் சிறப்பாக உள்ளது. வரலாற்றுப் பூர்வமாக ஈழத்தின் இளையோர் ஏன் ஆயுதம் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதையும் சரியாக விவரிப்பதின் மூலம் மிக எளிதாக உண்மைக்கு மிக அருகே வாசிப்பவர்களை அழைத்துச் செல்கிறார். Image may contain: 1 person, standing and beard

No comments:

Post a Comment