Tuesday, January 30, 2024

நான் மதுரை சிறையில்

நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை ஒருமுறை கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு வரும்போது படிப்பதற்காக எனது தோழர் முகிலன் தந்த ஜிPனியர் விகடன் சஞ்சிகையை கொண்டு வந்தேன். ஆனால் சிறை வாசலில் சோதனை செய்த அதிகாரி இச் சஞ்சிகை சிறையினுள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று பறித்துவிட்டார். இதனால் அடுத்தநாள் இது குறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் பாலன் அழகிரி அவர்களிடம் முறையிட சென்றேன். அப்போது அங்கு கே.கே.எஸ்..எஸ்.ஆர் உதவி கண்காணிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் தன்னை தாக்க வந்துவிட்டதாக நினைத்து பதட்டமடைந்தார். உடனே உதவி காவல் கண்காணிப்பாளர் நான் யார் என்பதை கூறி பயப்பட தேவையில்லை என்று அவரை அசுவாசப்படுத்தினார். நான் ஜீனியர் விகடன் சஞ்சிகையை அனுமதிக்க மறுப்பது பற்றி உதவி காவல் கண்காளிப்பாளரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஜெயில் மனுவலில் இச் சஞ்சிகை பெயர் இல்லை என்றார். நான் நம்ப மறுத்து ஜெயில் மனுவலைக் காட்டுங்கள் என்று கேட்டேன். முதலில் மறுத்தவர் பின் ஏதோ யோசித்துவிட்டு ஜெயில் மனுவலை என்னிடம் தந்தார். அதில் சிறையில் அனுமதிக்கும் சஞ்சிகைளில் ஆனந்தவிகடன் குமுதம் இரண்டு பெயர் மட்டுமே இருந்தது. இதனைப் படித்த நான் ஆனந்த விகடன் இதழை வெளியிடும் நிறுவனம்தானே ஜீனியர் விகடனையும் வெளியிடுகிறது. அதை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் இந்த ஜெயில் மனுவல் அச்சிட்ட காலத்தில் ஜீனியர் விகடன் வெளி வரவில்லை. அது காரணமாக இருக்கலாம். எதற்கும் நீ ஐ.ஜிக்கு ஒரு மனு அனுப்பு. உன் மூலம் ஒரு வழி பிறக்கட்டும் என்றார். அவர் கூறியபடி நானும் சிறைத்துறை ஐஜிக்கு மனு அனுப்பினேன். ஆனால் நான் சிiறையை விட்டு வெளியேறும்வரை பதில் வரவில்லை. இப்போது சிறையில் ஜீனியர் விகடன் அனுமதிக்கப்படுகிறதா என்பதை யாராவது அறிந்தவர்கள் கூறவும். அப்போது நான் ஜெயில் மனுவலை பார்த்த விடயத்தை அறிந்த புரட்சி மணி என்ற ஆயுள்சிறைவாசி “நான் அறிந்தவரையில் அதனைப் பார்த்த இரண்டாவது சிறைவாசி நீதான்”என்றார். எனக்கு ஆச்சரியம். முதலாவது ஆள் யார் என்று கேட்டேன். அதற்கு அவர் “பழனிபாபா” என்றார். பழனிபாபா சிறையில் இருந்தவேளை சிறை நிர்வாகத்துடன் சண்டை பிடித்து ஜெயில் மனுவலை வாங்கி படித்து அதில் உள்ள சிறைவாசிகளுக்கான சலுகைகள் உரிமைகள் பெற்று தந்தவர் என்றார். பழனிபாபாவுக்கு சிறைக்குள் இப்படி ஒரு கதை இருப்பதை அப்போதுதான் நான் அறிந்துகொண்டேன். பழனிபாபா தோழர் தமிழரசன் குறித்து பேசியதை சில வருடங்களுக்கு முன்னர் முகநூல் மூலமே அறிந்துகொண்டேன். நண்பர் உமர் அவர்கள் பழனிபாபா குறித்து நூல் ஒன்றை எழுதியவர். அவர் மூலம் பல விடயங்கள் அறிந்துகொண்டேன். இமாம் அலி, ஹைதர் அலி, பாட்சா எல்லோரையும் சந்தித்து பேசியிருக்கிறேன். ஆனால் பழனிபாபாவை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஒருமுறை என் நண்பர் ஒருவர் “தன் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் குண்டினாலே ராஜீவ் காந்தி இறந்தார்.” என பழனிபாபா பேசியது பற்றி கூறி என் கருத்தை கேட்டார். நான் சிரித்துவிட்டு அவர் வேண்டுமென்றே காங்கிரஸ்காரரை கடுப்பேத்த அப்படி பேசியிருப்பார் என்றேன்.

No comments:

Post a Comment