Thursday, August 18, 2016

அரசியல் ஆய்வாளர் தோழர்.சிவலிங்கம் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
லண்டனில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தோழர்.சிவலிங்கம் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் பாலனின் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ எனும் நூல் பற்றிய பார்வை
சமீபத்தில் தோழர் பாலன் அவர்களின் ஆக்கத்தில் உருவாகி தோழர் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ என்ற சிறிய கையடக்கமான நூலைப் பார்க்க நேர்ந்தது.
மேற்குலக நாடுகளில் தற்போது காணப்படும் வலதுசாரி எழுச்சிகளின் பின்னணியிலும், லத்தீன் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் நிகழ்வுகளின் பின்னணியிலும் இச் சிறிய நூலில் தரப்படும் விபரங்களின் முக்கியத்துவம் புலப்படுகிறது.
எதிர்வரும் நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல், மேற்கு நாடுகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்ட தாராளவாத அரசியல் பொருளாதாரத்தின் தோல்விகள், நேட்டோ நாடான துருக்கியில் தோல்வியில் முடிவடைந்த அமெரிக்க தூண்டுதலுடன் இடம்பெற்ற ராணுவப் புரட்சி, தெற்கு சீனாவின் கடற் பிராந்தியத்தில் காணப்படும் பதற்றமான சூழல், காஷ்மீரில் காணப்படும் இந்திய ராணுவ ஒடுக்கு முறை, அதனைத் தொடர்ந்து மூன்றாவது உலக யுத்தம் வெடிக்குமா? என்ற அச்சங்களின் பின்னணியில் இந்திய அரசின் போக்குகளை அவதானிக்கும் அவசியம் தற்போது எழுந்துள்ளது.
இலங்கையில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் நிலமைகள் எப்போதுமே ஏகாதிபத்திய அரசியல் சக்திகளுக்கு வாய்ப்பான சூழலை வழங்கி வருகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற ஆயுதப் போரும், அங்கு காணப்பட்ட மனித உரிமை மீறல்களும் வெளிநாடுகளின் தலையீட்டிற்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளன.
புலிகளால் நடத்தப்பட்ட ஆயுத வன்முறையை ஒடுக்க முடியாது திணறிய இலங்கை அரசு, மேற்கு நாடுகள், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் விளைவாக இந் நாடுகள் இலங்கையின் உள் நாட்டுப் பிரச்சனையில் வெவ்வேறு வகைகளில் காலூன்றியுள்ளன.
தற்போது போர் முடிவடைந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பவும், போரை நடத்துவதற்கு வாங்கிய கடன் சுமைகளைக் குறைக்கவும் மீண்டும் கடன் உதவிகளை இதே நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றன. கடன் சுமைகளில் மூழ்கியுள்ள இலங்கை அதிகார வர்க்கம் நாட்டின் தேசிய வளங்களைக் கூறுகளாக்கிப் பிரித்து அந்நியர்களுக்குத் தாரை வார்க்க தயாராகி வருகின்றன.
அதே போன்று தனது அரசியலைப் பயங்கரவாதத்திடம் கையளித்து வெற்றுத் தேசியவாதத்தில் திளைத்த தமிழ் அரசியல் தலைமை பயங்கரவாதமும் தோற்று, தனது குறுகிய தேசியவாதமும் தோற்று சரணாகதி அரசியலிற்குள் வாழ்ந்து வருகிறது.
தனது பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப சிங்கள அதிகார வர்க்கம் யாரிடம் கையேந்தி நிற்கிறதோ அதே சக்திகளிடம் தனது அரசியல் பிரச்சனையையும் தீர்க்கும்படி கையேந்தி நிற்கிறது. அந்த வகையில் இலங்கையின் எதிர்காலம் ஏகாதிபத்திய நலன்களை நோக்கிச் செல்லும் சர்வதேச சக்திகளிடம் சிக்கியிருக்கிறது.
இப் பின்னணியிலிருந்தே தோழர். பாலனின் இந் நூலின் முக்கியத்துவம் புலப்படுகிறது. இலங்கை தற்போது பல நாடுகளின் வேட்டைக்காடாக மாற்றம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்திய ஆதிக்கம் சற்று வித்தியசமானது.
அதாவது அந் நாடு மிக அருகாமையில் இருப்பது, அதன் கலாச்சார மற்றும் அரசியல் பொருளாதார தாக்கங்கள் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதன் பாதுகாப்பு என்ற போர்வையில் நடத்தும் அழுத்தங்கள் யதார்த்தமானவை.
2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர் போர்க்கால தாக்கங்கள் படிப்படியாக வெளியில் தெரிகின்றன. மிகப் பெருந் தொகையான கடன் உதவிகளை முன்னயை மகிந்த அரசு சீனாவிடமிருந்து பெற்றிருக்கிறது. கூட்டுச் சேராக் கொள்கையிலிருந்து வெகு தூரம் சென்று மிக மிக நெருக்கமான உறவை சீனாவுடன் வளர்த்தது. அதனால் அமெரிக்க, இந்திய உறவுகள் நெருக்கமாகிய நிலையில் சீனாவின் இலங்கை மீதான நெருக்கத்தைக் குலைக்க மிகவும் திட்டமிட்ட விதத்தில் இந்த நாடுகள் கூட்டாக செயற்படுகின்றன.
ஒரு புறத்தில் தேசிய இனப் பிரச்னையைத் தீர்ப்பதாக் கூறி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு மூலமாக தனது ஆதிக்கத்தை அமெரிக்கா செலுத்தி வருகிறது. இதன் அர்த்தம் அமெரிக்க ஆதிக்கம் முன்னர் இருந்ததில்லை என்பது அல்ல.
ஆனால் மிகவும் சாதுரியமாக சிங்கள, தமிழ் தரப்புகளின் மீது மனித உரிமை மூலமாக ஆதிக்கம் செலுத்துவதைக் குறிப்பிடுகிறேன். ஆனால் இந்திய அரசு, இலங்கை அரசியலில் முன்னர் மிகவும் மூக்குடைந்த காரணத்தால் அதில் ஈடுபடுவதில்லை எனக் கூறிக்கொண்டு பொருளாதாரக் கட்டுப்பாட்டை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் நிறைவேற்றி வருகிறது. தோழர். பாலனின் இந் நூலில் அதன் விபரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன.
குறிப்பாக சம்பூர் அனல் மின்சார நிலையத்தினை நிர்மாணிக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் பின்னணியில் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் தாக்கங்கள் மிக விரிவாக தரப்பட்டுள்ளன. இதுவே இந் நூலின் மிக முக்கியமான அம்சமாகும். பல நாடுகளில் நிலக்கரியை உபயோகித்து மின்சாரம் பெறப்படும் முறை படிப்படியாக கைவிடப்படும் நிலையில் இதனைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கமென்ன?
இது வெறும் சம்பூர் மக்களின் பிரச்சனை அல்ல, இது முழுமையான தேசத்திற்கான பிரச்சனை. இதில் தமிழ் அரசியல் தரப்புகள் நடந்துகொள்ளும் முறை முற்றிலும் அரசியல் நோக்கங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்திய அரசை விமர்;சிக்கக்கூடாது என்ற மனோ நிலையில் அணுகப்படுகிறது. மக்களின் சுகாதாரம் பற்றிய எந்தவித கவனமும் இருக்கவில்லை.
அதே போன்று பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு என்ற போர்வையில் வளமுள்ள மண் பிரதேசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் உள்ள ஏனைய பிரதேசங்களில் பயன்படுத்தப்படும் நிலங்களோடு ஒப்பிடுகையில் மிகப் பெருந்தொகையான நிலம் ஆரம்பத்திலேயே கையகப்படுத்தப்பட்டுள்ள விபரம் இந் நூலில் காணப்படுகிறது.
இந் நிலங்களின் சொந்தக்காரர்களுக்கு அதற்கான கொடுப்பனவுகளை தட்டிக் கழிக்கும் போக்கின் அடையாளமாகவே உள்ளது. கூட்டமைப்பு இப் பிரச்சனையில் ஆக்கபூர்வமான எந்த யோசனைகளையும் முன்வைக்;கவில்லை. ஒரு சரணாகதி அரசியலின் வெளிப்பாடாகவே இது உள்ளது.
தற்போது ‘எட்கா’ எனப்படும் இந்திய தொழில்நுட்ப உதவி ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பெரும் அரசியல் புயலை எழுப்பியுள்ளது. அதன் விபரங்களும் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்திய ஆதிக்க அரசியல் இலங்கையின் இறைமையில் எற்படுத்தப்போகும் தாக்கங்களைத் தரும் ஓர் எச்சரிக்கை மணியாகவே இந் நூல் உள்ளது.
அரசியல் செய்பவர்கள் தமது அரசியல் போக்கை நிர்ணயிப்பதற்கு இம் மாதிரியான நூல்கள் எப்போதும் துணையாக அமையும். தோழர் பாலனின் தொடரும் முயற்சிகளுக்கு என்றும் பாராட்டுகள்.
தோழமையுடன்
வி.சிவலிங்கம்

No comments:

Post a Comment