Wednesday, August 31, 2016

•இந்தியாவில் ஈழ அகதிக் குழந்தைகள் கல்வி கற்கவும் உரிமை இல்லையா?

•இந்தியாவில் ஈழ அகதிக் குழந்தைகள் கல்வி கற்கவும் உரிமை இல்லையா?
காஞ்சிபுரத்திற்கு அருகில் அச்சிறுபாக்கம் என்னும் இடத்தில் பிரைட் தொண்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்ட 55 அகதிக் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஈழஅகதி மாணவர்கள் எவ்வித ஆவணமும் இன்றி கல்லூரிகளில் உயர் கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயா அம்மையார் ஈழ அகதி மாணவர்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பை தடை செய்தார்.
தற்போது உரிய ஆவணம் இல்லை எனக்கூறி அகதிக் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியையும் ஜெயா அம்மையாரின் அரசு தடை செய்துள்ளார்கள்.
அகதிகளிடம் அகதி ஆவணம் இன்றி வேறு என்ன ஆவணம் இருக்க முடியும்? எனவே உரிய ஆவணம் இல்லை எனக்கூறி கல்வி வாய்ப்பை தடை செய்வது கொடூரம் இல்லையா?
இந்தியாவை தவிர மற்ற நாடுகள் எல்லாம் ஈழ அகதிகளுக்கு கல்வி வாய்ப்பு மட்டுமன்றி குடியுரிமையைக்கூட வழங்குகின்றன.
ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் மட்டும் 36 வருடங்களாக இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை மட்டுமன்றி தற்போது கல்வி வாய்ப்பும் மறுக்கப்படுகிறது.
ஈழம் எடுத்தக் கொடுப்பேன் என்று முழங்கி “ஈழத் தாய்” என்று பட்டம் பெற்ற ஜெயா அம்மையார் தன் ஆட்சியில் ஈழ அகதிகளை இவ்வாறு துன்புறுத்துகிறார்.
மோடி பிரதமரானால் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்ற அடிப்படையில் நிச்சயம் உதவிகள் புரிவார் என்றார்கள்.
ஆனால் பதவிக்கு வந்த மோடியோ வங்கதேச இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கிறார். ஆனால் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறார்.
கல்வி ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. அதை ஈழ அகதிகளுக்கு இந்திய அரசு மறுப்பதையிட்டு எமது தலைவர்கள்கூட அக்கறை கொள்ளவில்லை.
எமது தலைவர்கள்; இத்தனைக்கும் பிறகும்கூட இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யும் என்று தேவாரம் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
முகநூலில்கூட நம்மவர்கள் அக்கறை எல்லாம் செவாலியர் விருது வாங்கிய கமலகாசனுக்கு வாழ்த்து கூறாமைக்கு ஜெயா அம்மையாருக்கு கண்டனம் தெரிவிக்கின்றனரேயொழிய அகதிக் குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டிருப்பது குறித்து கண்டனம் தெரிவிப்பதில்லை.
விளங்கிடும் தமிழ் இனம்!

No comments:

Post a Comment