Thursday, August 18, 2016

இலக்கிய விமர்சகர் கௌரி பரா அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
லண்டனில் இருக்கும் இலக்கிய விமர்சகர் கௌரி பரா அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
எழுத்தாளர்- தோழர் பாலன்
ஆக்கிரமிப்பு என்பது ஒரு கனதியான சொல், தெற்காசியாவில் பிராந்திய முக்கியத்துவம் மற்றும் வலிமை வாய்ந்த ஒரு நாட்டை சுட்டிக்காட்டி அவர்கள் ஆசிய கண்டத்தின் "பேட்டை ரவுடி" என்கிறார் எழுத்தாளர் தோழர் பாலன்.
இதற்கான காரணத்தை அது சம்பந்தமான தகவல்கள் தந்து அலசி வாதப் பிரதிவாதங்களோடு நிறுவுகிறார்.
அதன் பொருட்டு இதில் வரும் கட்டுரைகளில் குறிப்பிட்ட விடயங்கள், தரவுகள் எதுவும் உண்மைக்கு புறம்பானவையாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு நாடு பேட்டை ரவுடியாக இருக்கத்தான் செய்கிறது. இப்படியான மேலாதிக்கத் தனங்கள் இருக்கக் கூடாது என்று தான் ஐரோப்பாவில் ஒன்றியம் என்று ஒன்று இடதுசாரி கொள்கைகளுடன் 1975 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது,
அதனால் கூட ஒரு ஐனநாயக அமைப்பாக நெடுநாட்கள் இயங்க முடியவில்லை, ஏனென்றால் அந்த ஒன்றியத்திற்குள்ளும் பல நாடுகள் பேட்டை ரவுடிகள் போல் தான் வலம் வந்தார்கள்.
அவர்கள் வைத்தது தான் சட்டம் என்று ஆனது, பொது நலத்துக்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக ஒரு அமைப்பை உருவாக்கிய அடுத்த நொடி சுயநலம் அங்கு புகுந்து அந்த அமைப்பின் உயரிய கொள்கைகளை சிதைத்து விடும் அபாய நிலை தான் உள்ளது. இது மனித இயல்பு.
ஆக மொத்தம் உயிரியல் தந்தை டார்வின் சொன்னது போல் வல்லனவையே தக்கி நிற்கும் "Survival of the fittest " என்ற விடயம் தான் எங்கும் மேலோங்கி நிற்கிறது.
ஆசியா கண்டத்திலும் "பஞ்ச சீல" கொள்கை என்ற ஒப்பந்தம் 1960 களில் ஆசிய நாடுகளின் பொது நலன் கருதி ஆசிய அங்கத்துவ நாடுகளால் கலந்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அந்த உடன்படிக்கையை முளையிலேயே இந்தியாதான் கிள்ளி எறிந்ததாகவும் கூறுகிறார்,
இதன் உள் நோக்கம் இந்தியா தெற்காசியாவில் தன் மேலாதிக்க தன்மை பறிபோகும் என்பாதாய் இருந்தது என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்.
மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான தகுதி இந்தியாவிற்கு அன்றும் இன்றும் இல்லை, 1970 களில் வலுக்கட்டாயமாக மில்லியன் கணக்கான ஏழை மக்களுக்கு sterilisation மூலம் என்றைக்கும் அவர்கள் குழைந்தைகள் பெற்றுக்கொள்ள கூடாது என்பதற்காக மக்கள் தொகையை குறைக்கிறோம் என்ற அரசியல் கொள்கையின் மூலம் 6.2 மக்களுக்கு sterilisation செய்தவர்கள்,
இதைப்பற்றிய தகவல்கள் சனத்தொகை கட்டுப்பாடு குறைப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் டெய்சி என்ற ஒரு கதாபாத்தின் மூலம் R K Narayanan எழுதிய "Painter of Signs " என்ற நாவலில் காணலாம். அவர் இதை ஒரு நல்ல விடயம் போல தான் எழுதியிருந்தார்.
சனத்தொகை பெருக்கம் என்பது ஏழை மக்களாலும் தாழ்த்தப்பட்ட மக்களாலும் பெருகும் ஒரு தொத்து வியாதி என்று இந்தியா நினைக்கிறது. இதைப்போல் ஒரு மனித உரிமை மீறல் இன சுத்திகரிப்பு வேறு எங்கும் நடக்குமா தெரியவில்லை.
இன்று யார் எதை சாப்பிடலாம் எதை சாப்பிடகூடாது என்று கட்டளை இடும் அளவுக்கு சர்வாதிகாரம் இந்தியாவில் உள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்தியா சிக்கிம் என்ற ஒரு தனி நாட்டை தன் சுயநலம் கருதி ஒரு மாகாணம் ஆக இணைத்து என்கிறார். அதே போல் பாரபட்சமானதாகவும் சமசீர் இல்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா இலங்கையை தனது முப்பதாவது மாகாணமாக இப்பொழுது இணைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் எனக்கு பழையதும் புதியதுமாய் பல சம்பவங்களும் முன்னாட்களில் வாசித்த பல புத்தகங்களும் நினைவுக்கு வந்தன.
இருபது வருடத்திற்கு முன்பு எனக்கு ஒரு ஆங்கில நண்பர் இருந்தார், அவர் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்தவர் தான், மத்தியதர வாழ்க்கை தான் வாழ்ந்தார், நினைத்தால் அவர் ஒரு பணக்கார வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்,
இவரிடம் " historical guilt" எனும் அந்த பிரித்தானியாவின் காலனியத்தால் தெற்காசிய மக்களுக்கு அதன் முன்னோர் விளைந்த அநீதிகளுக்கான குற்றவுணர்வு இருந்தது, அதற்காக சம்மந்தமே இல்லாத என்னிடம் மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசுவார்.
"இந்தியா இலங்கை மட்டுமல்ல பிரித்தானியாவில் கூட தொழிலாளர் வர்க்கத்தை முதலாளி வர்க்கம் அடிமைகளாகத்தான் வைத்திருந்தார்கள் என்பார், இதை உங்கள் நாட்டவர்கள் விளங்கிக்கொள்வதே இல்லை” என்பார்,
“என் நாட்டவர்கள் உங்கள் நாடுகளில் நாகரீகமற்ற மக்களை நாகரீகமாக்குகிறோம் என்றதெல்லாம் பொய் "என்பார், இந்தியாவில் இருக்கும் புராதன கோயில்களை வைத்தே, யாருடைய நாகரீகம் முன்னேற்றமானது என்று சொல்லிவிடலாம்” என்பார்
இவை பற்றி அன்று எனக்கு எந்த அக்கறையும் இல்லை, மூதாதையர் இழைத்த குற்றங்களுக்கு மூன்றாம் தலை முறை சம்பந்த சம்பந்தமே இல்லாத ஒருவரிடம் மன்னிப்பை கோரியது, தலைமுறைகள் தாண்டி மனதளவிலான பக்குவத்தை அடுத்தவர்களை ஆக்கிரமிக்கிறது பற்றி அடைந்ததை காட்டுகிறது.
ஒரு தனிமனிதரின் மன மாற்றம் சமுதாயத்தை மாற்ற வல்லது இல்லைதான், ஆனாலும் சிறுதுளி பெருவெள்ளம், இந்த குற்றவுணர்வை சுமக்கும் படித்த ஆங்கிலேயர் பலரைப் பார்த்திருக்கிறேன்.
பிரித்தானியாவில் பன்மைத்துவ கலாச்சாரத்தை சிதறடிக்காமல் பாதுகாப்பதும் இந்த மூன்றாம் தலைமுறையின் கூட்டு குற்றவுணர்வு தான் என்றே தோன்றுகிறது.
முதலாளித்துவ சமுதாயத்தின் பிடிக்குள் அகப்படாமல் வாழும் யுக்தி இவர்களில் அநேகருக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் முதலாளித்துவத்தின் நீரோடையில் கலந்துவிட துடிப்பது அதை எதிர்க்கும் நாங்கள் தான்,
முதலாளிகளின் பிள்ளைகள் படிக்கும் இடங்களில் தான் எங்கள் பிள்ளைகளை படிப்பிக்கிறோம், அது எங்கள் வசதிக்கு மீறினதாக இருந்தாலும். தமக்கு கீழே உள்ளவரின் பிரச்சனை பற்றியோ அல்லது சக சமுதாயத்தின் பிரச்சனை பற்றியோ நம் பிள்ளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை,
அவர்களுக்கு சிக்கனத்தை சிக்கனமாகவேனும் நாம் இன்று சொல்லித்தருவதில்லை. பொருட்களை வாங்கி குவிக்க கற்று கொடுக்கிறோம், ஆடம்பரம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியம் என்ற நினைப்பில் தான் இன்று உலகெங்கும் நம் பிள்ளைகள் வளர்கின்றன,
பணத்தை shopping complex குள் வாரி இறைத்தால் அது சந்தோஷமான விடயம் என்று எண்ணுகிறார்கள். முதலாளித்துவ எதிர்ப்பு நம் வாழ்வியல் சூழலோடு பின்னி பிணைய வேண்டும், அது நம் வீடுகளில் தான் தொடங்க வேண்டும்.
தோழர் பாலனின் புத்தகத்தில், ஆக்கிரமிப்பு என்ற வார்த்தை பெரு நிறுவனங்களின் முதலீடு என்ற ஒரு விடயத்துடன் இரண்டறக் கலந்திருக்கிறது. ஈழப்போரின் பின் இந்தியாவின் இலங்கை மீதான முதலீடுகள், தலையீடுகள் குறித்து இவரின் விசனமான கருத்துக்களை இதில் முன் வைத்திருக்கிறார்.
காலனிய ஆதிக்க காலத்தில் East India Company மூலம் பிரித்தானியர்கள் தெற்காசியாவில் உள்ள வளங்களை சுயாதீன ஒப்பந்தங்கள் மூலம் தான் கணக்கு வழக்கு இல்லாமல் சுரண்டினார்கள்,
இன்றைக்கு இது போன்ற செயலை தனக்கு கீழே உள்ள ஒரு சிறிய நாட்டில் இந்தியா செய்கிறது. சுயாதீன ஒப்பந்தங்களில் " Equal bargaining power" என்னும் ஒரு விடயம் உண்டு, இந்த பேரம் பேசலில் சம உரிமை என்ற விடயத்தை முப்பது வருட போரினால் நொந்து போயிருக்கும் இலங்கை நேர்த்தியாக கையாளுகிறதா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது,
அங்கு வணிக ஒப்பந்தங்களை, சம்பந்தப்பட்ட நாட்டின் வெளியுறவு கொள்கைகளுடன் இணைத்து சிலாகித்து ஒப்பந்தங்கள் மூலம் விளையவிருக்கும் நன்மை தீமைகளை தொலைநோக்கு சிந்தனையுடன் ஆராயும் பக்குவம் உள்ள அத்துறை சார்ந்த நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாகவும் இருக்கலாம்.
நாம் இன்று வாழும் சூழல் நுகர்வு கலாச்சாரத்தின் உச்சம் என்று சொன்னால் அது மிகையாகாது. தாராள பொருளாதாரம் மூலம் ஆசைகள் எம்மையும் அறியாமல் தேவைகளாக பரிணாம வளர்ச்சி கண்ட காலம் இது. எந்த பொருளும் , எப்போதும் , எங்கும் நினைத்த மாத்திரத்தில் மடியில் வந்து விழ வேண்டும் என்ற எண்ணம் மனநிலை எங்கள் பலருக்கு உண்டு, இந்த ஆசைகளில் விளையும் லாபத்தில் குளிர் காய்வது முதலாளி வர்க்கம் தான்,
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு சுயாதீன வர்த்தக ஒப்பந்தம் 1998 ல் இந்த கைச்சாத்திடப்பட்டது என்கிறார் தோழர் பாலன். அதில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் 3,950 மில்லியன் டொலர்கள் பெறுமதியானவையாம். இதனால் இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் சமச்சீர் அற்ற வர்த்தகமாக நடக்கிறதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த சுயாதீன ஒப்பந்தங்களில், இரு நாடுகளின் விருப்பங்களின் நிமித்தமும் வர்த்தக பொருளாதார சந்தையின் வேகத்தையும் கணக்கிலெடுத்தே கைச்சாத்திடப்படுகின்றன. இது இரு நாடுகளிலும் உள்ள பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவும் இருக்கலாம்.
இன்றைக்கு அரசாங்கங்கள் நினைத்தாலும் பெரும் நிதி நிறுவனங்களினதும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களினதும் பிடிக்குள் இருந்து வெளியே வர முடியாது, அரசாங்கங்கள் இவர்களின் கைப்பொம்மைகள் தான்.
ஆனால் ஒன்று, மக்கள் கூட்டாக நினைத்து எளிமையான வாழ்வு வாழ எண்ணினால் மட்டும் தான் இதற்குள் இருந்து அரசாங்கள் வெளியே வரலாம். பொருட்கள் வாங்க ஆட்கள் இல்லாமல் போனால், முதலாளித்துவத்தின் வீரியம் குறையும், இயற்கை வளங்கள் வீணே அழிக்கப்படும் தன்மை குறையும்.
அண்மையில் விஐய் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்தேன், அதில் வரும் எல்லா விடயங்களும் அபத்தம் தான். ஆனால் இது மாபெரும் அபத்தம்.!!!அந்த விளம்பரம் மக்களுக்கு ஒரு விடயத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்கிறது,
வயதான பெற்றோரின் நன்மை கருதி அவர்களின் கடைசி காலத்தை கழிக்க அவர்களுக்கு ஒரு flat வாங்கி மகன்,மகள் கொடுப்பது போல் காட்டுகிறது, இது தொடர் மாடி கட்டிடங்கள் கட்டி விற்கும் முதலாளிகளின் விளம்பர யுக்தி,
இதில் மிகவும் அபத்தம் என்று சொல்லக்கூடியது இந்த விளம்பரம் தொடங்கும் விதம் " நாங்கள் எப்போதும் தனியாக இல்லை" . ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தின், ஒழுங்கில் கட்டமைப்பின் மடியில் கைவைத்துவிட்டு பின் அந்த ஒன்றுக்கும் உதவாத மாற்றம் வயதான பெற்றோரை தனிமைப்படுத்தப்பட்ட சொல்லிக்கொடுக்கும் மாற்றம் கலாச்சாரம் மகத்துவமானதென்றும் சொல்லுவது. இதை கண்ட சில சுய புத்தி இல்லா, நுகர்வு கலாச்சாரத்தின் அடிமையாக கிடக்கும் பார்வையாளர்களின் மனதில் என்ன ஓடும்?
நான் நல்ல பிள்ளையாக இருந்தால் பெற்றோரின் கடைசிக்கால வாழ்வு வளமாக ஒரு flat வாங்கி விட வேண்டும் என்று. வீடு என்பது இன்று பெரு நகரங்களில் தான் உள்ளது, நாலு சுவர்களுக்குள் மின்சாரத்தினால் இயங்கும் ஒரு இயந்திரம் தான்
வீடு, இப்படி வானுயர் கட்டடத்தில் ஒரு பகுதியில் வாழும் வாழ்வில் மன நோய் வந்து மாண்டு போவோர் இன்று பலர். வீடு, வளவு, தோட்டம், துரவு என்று சொல்வதெல்லாம் தான் வீடு, வானுயர் தொடர்மாடியில் உள்ள சிறைக்கூடங்களை இவர்கள் வீடு என்று சொல்கிறார்கள் என்பதற்காக மூளை உள்ள மனிதர் எல்லாம் அதை நம்பி விடார்.
தோழர் பாலன் இன்னொன்றைப்பற்றியும் இந்த கட்டுரைத்தொகுப்பில் ஆதங்கப்படுகிறார், அதாவது இந்தியா இலங்கையில் நிலக்கரி எடுக்கிறோம், மின்சாரம் செய்கிறோம் என்றும் அனைத்து வளங்களையும் கைப்பற்ற முனைவதால் அங்குள்ள மக்களின் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த வாழ்வு பாதிக்கப்படுவதற்கு சந்தர்ப்ங்கள இருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்,
அதுவும் சுற்றுப்புற சூழல் பற்றி துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ளவர்களால் சூழல் மாசுபாடு பற்றிய ஆய்வுகள் செய்யப்படாமல் நிலக்கரி அகழ்வு நிகழ்ந்தால் பல லட்சம் மீனவர்கள் வாழ்வாதாரம், சூழல் மாசுபடுவதால் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் அங்கு வாழவே முடியாமல் போகும் என்றும், நுரையீரல் சம்மதமான நோய்களுக்கும் ஆளாகக்கூடும் என்றும் தீர்க்கதரிசனம் சொல்கிறார்.
இப்படிப்பட்ட நிறுவங்களின் பேராசை கொண்ட திட்டங்கள் தான் கடைசியில் பெரும் நகரங்கள் நோக்கி இந்த அப்பாவி மக்களை விரும்பியோ விரும்பாமலோ செல்ல வைக்கிறது.
"Gray Mountain" என்று John Grisham என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவல் ஒன்று இருக்கிறது, உண்மை சம்பவத்தின் பின்னணி தான் இந்நாவலின் கரு. அப்பலாச்சியா என்ற மலைத்தொடரில் நூற்றி நாற்பத்தேழு மலை உச்சிகளைக் தகர்த்து, அம்மலைத்தொடரின் இயற்கை வளத்தை அழித்து bio diversity என்கிற விடயத்தை குலைத்து மின்சார உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்கள் நிலக்கரியை எடுத்து இயற்கை எழில் கொஞ்சும் விலங்குகளின் பறவைகளின், அங்கு வாழ்ந்த மக்களினதும் வாழ்வாதாரத்திற்கான எல்லாவற்றையும் சுடுகாடாக்கியிருக்கிறார்கள்,
இதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கிறது, இதை எதிர்த்த பலர் மர்மமாய் உயிர் இழந்திருக்கிறார்கள் இக்கதையில், இன்று அந்த மலைத்தொடர்கள் சுடுகாடு போல் காட்சி அளிக்கிறது, நீர் நிலைகளிலும் நஞ்சு கலந்து விட்டிருக்கிறது, வளி மண்டலம் கூட அசுத்தமாக்கப்பட்டிருக்கிறது.
எதை இழந்து எதைப்பெறுவது என்ற அடிப்படை லாப நட்ட கணக்கு கூட சரியாக தெரியவில்லை அரசாங்களுக்கு, பெரும் நிறுவனங்களின் கைப்பொம்மைகள் தான் இவர்கள். மக்கள் நகரங்கள் நோக்கி நகரத்தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். எல்லாம் எதற்காக?
மின்விளக்கிகளால் அலங்கரிக்கப்பட்ட தூங்கா நகரங்களில் மக்களை நுகர்வுக்கலாச்சாரத்திற்கு அடிமைப்படுத்த மட்டுமே. கண்ணை உறுத்தும் மின்சார விளக்குகளின் ஒளியில் உயர்ந்த மாடி shopping complex களில் இன்று தம்மை மறந்து இரவு பகலாக shopping செய்கிறார்கள்,
பெரும் நிறுவனங்களின் லாபத்தை பெருக்கும் முகமாக -இயற்கை அழிவுகளுக்கு அனுமதி அளிக்கிற அரசியல்வாதிகள் சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு பற்றியும் ஓசோன் லேயரில் ஓட்டை விழுவது பற்றியும் பின் கருத்தரங்கு செய்வார்கள். இது அன்றும் இன்றும் என்றும் இருக்கப்போகும் நடைமுறை அரசியல். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல் ஒரு செயல் இது.
இப்புத்தகத்தில் தோழர் பாலன் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பில் இந்திய அரசின் தலையீடு, விஸ்தரிப்பிற்கு தேவைக்கு அதிகமானதாக பொது மக்களின் நிலங்களை அபகரித்த்ததை ஆதாரபூர்வமாக நிரூபணம் செய்கிறார்.
ஒரு சமூகப்போராளியின் தன் மக்கள் பற்றிய கரிசனை, சுற்றுப்புற சூழல் மாசுபடுத்தல் பற்றிய ஆத்மார்த்தமான ஆதங்கம் இந்த புத்தகம் முழுவதும் வியாபித்திருக்கிறது.
அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது

No comments:

Post a Comment