Thursday, August 18, 2016

•மேய்ப்பன் இல்லாத செம்மறி ஆடுகளா புலம்பெயர் தமிழர் சமூகம்?

•மேய்ப்பன் இல்லாத செம்மறி ஆடுகளா புலம்பெயர் தமிழர் சமூகம்?
மேய்ப்பன் இல்லாத செம்மறி ஆடுகள் எப்படி பட்டிக்கு போகாமல் சிதறி திரியுமோ அதேபோன்று புலம்பெயர் தமிழர் சமூகம் தகுந்த தலைமை இன்றி திரிகின்றது.
புலிகள் அமைப்பு இருந்தவரை அவர்கள் வழி காட்ட வில்லை எனினும் அவர்கள் குறித்த அச்ச உணர்வு ஒரு கட்டுப்பாட்டை தானாகவே கொடுத்தது.
இன்று புலிகள் அமைப்பு அற்ற நிலையில், கேட்பதற்கு யாருமற்ற நிலையில், வழி காட்ட யாருமற்ற நிலையில,; புலம்பெயர் தமிழர் சமூகம் இருக்கிறது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கருதப்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர் சமூகத்திற்கு வழி காட்ட தவறிவிட்டது. அக்கறை அற்று இருக்கிறது.
புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தபோது இனி புலம்பெயர் தமிழர் சமூகம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் ஒருமித்த சரியான தலைமை இன்மை காரணமாக புலம்பெயர் தமிழர் சமூகம் காத்திரமான பங்களிப்பை வழங்க தவறிவிட்டது.
தமிழ்நாட்டில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் ஈழத் தமிழர் விடயத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்றனர்.
ஆனால் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எமது பிரச்சனைக்காகக்கூட ஒன்றிணைந்து குரல் கொடுக்க தவறிவிட்டோம்.
இன்று சுமார் 6 லட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்து பலமான எதிர்ப்பை இலங்கை அரசுக்கு வழங்க முடியும். வழங்க வேண்டும்.
தாயகத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. வறுமை காரணமாக தாய் தன் பிள்ளைகளை கிணற்றில் வீசி கொல்லும் அவல நிலை. பிறந்த குழந்தையை பால் கூட கொடுக்காமல் காட்போட் பெட்டியில் போட்டுச் செல்லும் அவலம்.
இதையெல்லாம் கண்டும் காணாமல் புலம்பெயர் தமிழ் சமூகம் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. சமூகப் பொறுப்புடன் செயற்பட புலம்பெயர் தமிழர் முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment