Thursday, November 30, 2017

தோழர் தமிழ்நெறியன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழர் தமிழ்நெறியன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தோழர் தமிழ்நெறியன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தமிழ்த்தேசத்தின் புரட்சிகர வரலாற்றில் இலங்கையின் "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" அமைப்பிற்கு முக்கிய இடம் உண்டு.குறிப்பாக தோழர் பாலன் (எ) பாலச்சந்திரன் அதில் முக்கியமானவர்.
தமிழ்நாட்டுப் புரட்சியாளர்களுக்கு உதவியதால் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் இருந்தார்.
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) விற்கும் அதன் தலைவர் தோழர் தமிழரசனுக்கும் தோளோடு தோள் நின்றவர்.
தமிழ்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட தோழர் பாலன் "ஓர் ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்" எனும் நூலை தற்போது எழுதியுள்ளார்.
அது தோழர் தமிழரசனின் வரலாறு மட்டுமல்ல மார்க்சிய-லெனினிய சித்தாந்த வழியில் போராடிய தமிழ்த்தேசிய புரட்சிகர முன்னோடிகளின் வரலாறும் கூட.
"ஓர் ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்" எனும் இந்நூல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திசைகாட்டும் கையேடு ஆகும்.
மார்க்சிய-லெனினிய -மாவோ சிந்தனையை தனது தத்துவமாக வரித்துக் கொண்டவர் தான் தோழர் தமிழரசன்.
"தோழர் தமிழரசனும் அவர் பின்பற்றிய தத்துவங்களும்" எனும் தலைப்பில் அமைந்த பகுதியானது.அவர் பின்பற்றிய தத்துவத்தை கூறியதோடு நிற்காமல் "மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை"யின் சுருக்க அறிமுகமாகவும் அமைந்து விட்டது.எதிர் புரட்சியாளர்களை-திரிபுவாதிகளை அம்பலப்படுத்தியும் விரிகின்றன அப்பக்கங்கள்.
"தோழர் தமிழரசனும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்" தலைப்பு தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பை போராட்டங்கள் மூலம் கம்யூனிஸ்டுகள் நடைமுறைப்படுத்தியதையும் கூறியுள்ளார் தோழர் பாலன்.
குறிப்பாக தலைவர் தமிழரசன் அவர்களின் சாதி ஒழிப்புக்கான தத்துவ பங்களிப்பையும்,நடைமுறைகளையும் விளக்கப்படுத்துகிறார்.
இந்நூலில் உள்ள அனைத்து தலைப்புகளும் மிகவும் முக்கியமானதாகும்.
தலைவர் தமிழரசனைப் பற்றி எழுதுவதை விடவும் அதை சரியாக தலைப்பிட்டு ஒரு சட்டகத்தில் அடைப்பது முக்கியமான விடயம்.
அதை தோழர் பாலன் திறம்பட செய்துள்ளார்.அது அவருக்கு ஒன்றும் கடினமான பணியும் அல்ல.
தமிழ்நாட்டில் தற்போது எழுந்து வரும் சாதி-மத ஆதிக்கங்களை முறியடித்து பொதுமைச் சமூகத்தை கட்டி எழுப்பப் பாடுபடும் ஒவ்வொருவரும்,சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய வரலாற்றுப் பெட்டகம் இப்புத்தகம்.

No comments:

Post a Comment