Thursday, November 30, 2017

அமைதிப்படைக்கு எதிரான ஒரு சாட்சி அமைதியாக தன் உயிரை இழந்துவிட்டது!

•அமைதிப்படைக்கு எதிரான ஒரு சாட்சி
அமைதியாக தன் உயிரை இழந்துவிட்டது!
கோபு என்று அழைக்கப்பட்ட மூத்த தமிழ் பத்திரிகையாளரான எஸ்.எம். கோபாலரெத்தினம் தனது 87-வது வயதில் இன்று மட்டக்களப்பில் காலமானார்.
1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'ஈழநாடு' நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றினார்.
யாழ்பாணத்தில் வெளிவந்த " ஈழமுரசு "பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை 1987ம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பத்திரிகையாளர் கோபு இந்திய அமைதிப்படையினரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது அனுபவத்தை " ஈழ மண்ணில் ஓர் இந்திய சிறை " என்ற தலைப்பில் எழுதினார்.
இந்த கட்டுரை "ஜுனியர் விகடன் " இதழில் தொடர் கட்டுரையாக வெளியாகியிருந்தன.
இந்திய அமைதிப்படை அப்பாவி தமிழ் மக்களை மட்டுமல்ல மருத்துவமனை மற்றும் பத்திரிகை நிறுவனங்களையும் தாக்கினார்கள் என்பதற்கு ஒரு உயிர் உள்ள சாட்சியாக பத்திரிகையாளர் கோபு இருந்து வந்துள்ளார்.
ஒருமுறை கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஆசிரியரிடம் “நீங்கள் ஏன் இந்திய அக்கிரமங்கள் குறித்த செய்திகளை உங்கள் பத்திரிகையில் வெளியிடுவதில்லை?” என்று கேட்டேன்.
அதற்கு அவர் “ அவ்வாறு வெளியிட்டால் உடனே இந்திய தூதரலாயத்தில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன” “யார் எழுதியது? ஏன் வெளியிட்டீர்கள்?என்று பல்வேறு விசாரிப்புகள் இடம்பெறுவதாக வருத்தத்துடன் கூறினார்.
அதுமட்டுமல்ல இந்திய அதரவு செய்திகளை வெளியிடும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு விசா உட்பட பல்வேறு சலுகைகள் இந்திய தூதரகத்தால் இன்றும்கூட வழங்கப்பட்டு வருகின்றன்.
இந்நிலையில் இந்திய அமைதிப்படையின் கொடுமைகளை துணிந்து எழுதி வெளியிட்ட பத்திரிகையாளர் கோபு உண்மையில் பாராட்டப்பட வேண்டியவரே.
அவர் மறைந்தாலும் அவர் எழுத்தில் வெளியிட்டுள்ள இந்திய அமைதிப்படையின் கொடுமைகள் காலம் காலமாக சாட்சியாக வரலாற்றில் இருக்கும்.
கோபு அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்.

No comments:

Post a Comment