Thursday, November 30, 2017

காந்திமதி (Kanthi Mathi ) அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னையில் வசிக்கும் காந்திமதி (Kanthi Mathi ) அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ள காந்திமதி அவர்களுக்கு எனது நன்றிகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் ஏற்கனவே எனது “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்” மற்றும் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல்கள்; குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
மதிப்பிற்குரிய நண்பர் பாலன் அவர்களுக்கு ,
வணக்கம் .
தங்களின் " ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலின் பிரதியை பற்றிய கருத்துகள் என்னுடைய கோணத்தில் ..
தமிழரசன் அவர்களுடன் நெருங்கி பழகிய தோழர் என்ற முறையில் அவரின் மார்க்ஸ்சிய சிந்தனை , மார்க்சியத்தை உள்வாங்கி அதை அவர் நடைமுறைப்படுத்திய விதம் மற்றும் மக்கள் மீதான அவரின் அக்கறை அனைத்தையும் உங்களின் நேரிடை அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் .
உங்கள் நூலின் சாராம்சம் .... தோழர் தமிழரசன் ஒரு மார்க்சியவாதி . மக்கள் நலனுக்காக படிப்பை துறந்து தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் . இலங்கை தமிழரின் தனித்தமிழ் கோரிக்கையை தீவிரமாக ஆதரித்தவர் . அதே போல் இந்தியாவிலும் தனி தழ்நாடு தான் தீர்வு என்று இலங்கை விடுதலை இயக்கங்கள் பாணியில் இங்கும் "தமிழர் விடுதலை படை " இயக்கம் மூலமாக பல போராட்ட முயற்சிகளை மேற்கொண்டவர் . போராட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுதே தனது உயிரை தியாகம் செய்தவர் . இலங்கை இந்திய உறவை பொறுத்த வரை இந்தியா இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநிறுத்தி கொண்டது .
என் பார்வையில் ..
எந்த வகையிலும் இந்தியாவின் மற்றோரு நாட்டின் மீதான அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது . ஆனால் முதலாளித்துவ உலகில் தனக்கு கீழ் உள்ள நாடுகளின் மீது தங்களின் ஆதிக்க வெளிப்பாட்டை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தவே ஒவ்வொரு நாடுகளும் தங்கள் சுயலாப நோக்கில் முனைகின்றன . அதற்காக சாம , தான , பேத , தண்ட என அனைத்து அடக்குமுறைகளையும் கையாளுவது கண்கூடு . அதே போல் இந்தியாவின் வளங்களும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களாலும் , பன்னாட்டு அரசுகளாலும் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றது .
தமிழரசன் அவர்கள் மார்க்சியவாதியாக இருந்தாலும் மண்ணுக்கேத்த மார்க்சியம் என்ற அணுகுமுறை அவரிடம் இல்லை என்பதே என் கருத்து
இலங்கை மண்ணில் அன்று இருந்த சூழலில் உருவான போராட்ட அணுகுமுறையை இங்குள்ள இந்திய சூழலுக்கு பொறுத்த நினைத்தது சரியான பார்வை கோணமாக இல்லை .
மக்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை தக்க வைக்க எளியவனை ஏய்த்து தன்னை வலியவனாக்க அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என வாழ பழகி கொண்டுள்ளனர் உலகம் முழுக்கவே . வாழவே வழியில்லை , அடிப்படையே கேள்வி என்ற நிலை வரும் பொழுது மட்டுமே போராட்ட மனநிலையும் , போராட முனைபவர்களுக்கு துணை நிற்கவும் முனைகின்றனர் .
உணர்வுகள் தூண்டப்படும் பொழுது தமிழகத்தில் ஏற்பட்ட ஒற்றுமையும் , போராட்ட மனநிலையும் ஈழ தமிழர் பிரச்சனையிலும் , ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் அறிந்ததே
ஆனால் அதுவே அடிப்படை ஆதாரத்தையே பாதிக்கும் என்ற நிலை ஏற்பட்டால் அமுங்கியும் போகும் .
இலங்கை போராட்டத்தில் போராட்டத்துக்கான கரு அங்கு இருந்தது .அங்குள்ள மக்களே தேவையிலிருந்து இனத்துவேசத்துக்கு எதிராக இணக்கமாக இனி வாழவே முடியாது என்ற சூழலில் போராட்டத்திற்கு துணிந்தனர் .
இங்கு தமிழ்நாட்டில் இந்தியாவில் அப்படிப்பட்ட ஒரு சூழலே இன்று கிடையாது . இலங்கையின் புரட்சியை இலங்கை மக்களே முடிவு செய்ய வேண்டும் , அது போலவே தனி தமிழ்நாடு வேண்டுமா இல்லையா என்பதை தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் .
புரட்சி என்பது மாலை விருந்தல்ல - மாவோ .
எளிமையான இலகுவான வழிமுறைகள் மூலமாக மக்கள் மனமாக தில் இடம் பெற முடியாது . தனி தமிழ்நாடு என்ற கோஷமும் இங்கு கிடையாது , விருப்பமும் கிடையாது இன்றுள்ள சூழலில் .
ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழரசன் அவர்கள் நல்ல மார்க்சியவாதியாக மிளிர வேண்டிய நிலையிலிருந்து தவறி உணர்வு ரீதியாக கொடுத்த பார்வையின் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வழிவிலகளால் தவறான முடிவை தேடி கொண்டார் .
கருத்தை பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றி பாலன் சார் .

No comments:

Post a Comment