Thursday, November 30, 2017

ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டிய உதவ வேண்டிய திட்டம் “நூலகம்”

•ஒவ்வொரு தமிழனும்
உணர வேண்டிய
உதவ வேண்டிய
திட்டம் “நூலகம்”
அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 45 கோடி ரூபாவை தமிழ் ஆர்வலர்கள் உலகம்பூராவும் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நல்ல விடயம். பாராட்டுக்கள். ஆனால் இதேபோன்று ஒரு நல்ல விடயம் தமிழ் ஆர்வலர்களால் கண்டு கொள்ளப்படாமல் இருந்து வருகிறது.
“நூலகம்” திட்டம் ஈழத் தமிழர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படாமல் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் ஒருவேளை ஆதரவுகள் கிடைத்திருக்குமோ தெரியவில்லை.
நூலகம் என்பது லாப நோக்கற்ற ஒரு தொண்டு நிறுவனம். அது தமிழ் நூல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகில் உள்ள அனைவரும் இலவசமாக பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது.
2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் சேவையில் இதுவரை 44000 ஆவணங்கள் இணைத்துள்ளனர். இதில் 6600 நூல்கள், 9400 சஞ்சிகைகள், 26000 பத்திரிகைகள் என்பன அடங்கியுள்ளன.
மாதந்தோறும் சுமார் 30ஆயிரம் பக்கங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். 14 ஊழியர்கள் முழுநேரமாக வேலை செய்கின்றனர்.
இந்த வருட இறுதிக்குள் 50000 ஆவணங்கள் என்ற இலக்கை அடைவோம் என்கிறார்கள். இவர்களுக்கு மாதம் 4 லட்சம் ரூபா செலவாகிறது.
தமிழ் நூல்கள் அனைத்தையும் இணையத்தில் பதிவேற்றம் செய்வது ஒரு மாபெரும் பணி. அதை தமிழக அரசால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் தமிழக அரசு அக்கறை இன்றி இருக்கிறது.
ஈழத்தில் குறைந்தபட்சம் வடமாகாணசபையாவது இதனை செய்திருக்கலாம். ஆனால் அவர்களும் இதில் அக்கறை கொள்ளவில்லை.
நூலகத்திற்கு போதிய மேசை கதிரை அலுமாரி வசதிகூட இல்லை. ஆனால் வடமாகாணசபை தலைவர் தமக்கு தலா ஒரு லட்சம் ரூபா செலவில் மூன்று சொகுசு கதிரைகளை வாங்கியுள்ளார்.
நூலகத்திற்கு மாதம் 4 லட்சம் ரூபா மட்டுமே தேவையாக இருக்கிறது. ஆனால் அதற்கு எந்த உதவியும் வழங்காத மாகாணசபை தமது உறுப்பினர்களுக்கு தலா 5கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.
நூலகத்திற்கு ஒரு அலுவலகம்கூட பெற்றுக்கொடுக்காத தலைவர் சம்பந்தர் அய்யா தனது இரண்டாவது சொகுசு மாளிகைக்கு பெயிண்ட் அடிக்க 3 கோடி ரூபாவை பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை மூலம் பெற்றுள்ளார்.
இந்த நூலகத்தை யாழ் நூலகத்துடன் இணைத்து தொடர்ந்து அதன் சேவை நிரந்தரமாக இடம்பெற வடமாகாணசபை முதல்வர் விக்கினேஸ்;வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவேளை அதற்குரிய நிதி மாகாணசபையில் இல்லை என்றால் கனடாவில் சேர்த்த முதல்வர் நிதி 50000 டொலர் அப்படியே இருப்பதாக அறிகிறேம். அதனை இந்த நூலகத்திற்கு கிடைக்க முதல்வர் வழி செய்ய வேண்டும்.
தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்களும்கூட இந்த நூலகம் திட்டத்தின் முக்கியத்துவம் உணராதவர்களாவே இருக்கிறார்கள்.
புலம்பெயர்நாடுகளில் நாய்க்கு செத்தவீடு நடத்துபவர்கள், மகளுக்கு கெலிகெப்டரில் சாமர்த்தியவீடு நடத்துபவர்கள், தெருவில் தேங்காய் உடைத்து திருவிழா நடத்துபவர்கள், சுப்பர் சிங்கர் பாடகர்களை அழைத்து கச்சேரி நடத்துபவர்கள் அதில் ஒருபகுதி பணத்தையாவது இந்த நல்ல திட்டத்திற்கு உதவ முன்வரலாம்.
இதில் இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் எமது எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களை பதிவேற்றம் செய்வதற்குரிய உரிமையை வழங்காமல் இருப்பது.
ஆங்கில பதிப்பகங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பதிப்பிக்கும் நூல்களில் இரண்டு பிரதிகளை இலவசமாக பிரிட்டிஸ் நூலகத்திற்கு வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் தமிழ் பதிப்பகங்களும் இந்த வழக்கத்தைப் பின்பற்றி நூலகத்திற்கு தமது நூல்களை வழங்க முன்வரவேண்டும்.
நான் எனது 5 நூல்களையும் நூலகத்திற்கு வழங்கியுள்ளேன். அதேபோன்று தோழர் சண்முகதாசன் நூல்களுக்கான உரிமையையும் அவரது மகளும் மருமகனும் டாக்டர் தம்பிராசா அவர்கள் மிக்க மகிழ்சியுடன் நூலகத்திற்கு வழங்கியுள்ளனர்.
ஆனால் இங்கு வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் எழுத்துக்களுக்கான உரிமை அமெரிக்காவில் வசித்துவரும் அவரது குடும்பத்தினரால் காலச்சுவடு பதிப்பகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
காலம்பூராவும் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் மாக்சிய பார்வையில் ஏழுதியவர் பேராசிரியர் கைலாசபதி. அவரது எழுத்துக்களின் உரிமை நியாயப்படி தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
மாறாக காலச்சுவடு என்ற வியாபார நிறுவனத்திற்கு வழங்கியதால் அவருடைய எழுத்துக்களை நூலகத்தில் பதிவேற்றம் செய்ய முடியாமல் உள்ளது.
தமிழ் மெல்ல சாகும் என்கிறார்கள். ஆனால் நூலகம் திட்டம் தமிழை வாழ வைக்கும். இது உறுதி.

No comments:

Post a Comment