Thursday, November 30, 2017

கௌரி பரா ( Gowry Para ) “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருக்கும் கௌரி பரா ( Gowry Para ) “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கௌரி பரா அவர்கள் ஓர் சிறந்த இலக்கிய விமர்சகராக விளங்கி வருகிறார். அவர் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் காத்திரமான வாசிப்பாளராகவும் இருக்கிறார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள கௌரி பரா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
ஆயிரமாயிரம் சமூக போராளிகள், பகுத்தறிவாளர்கள் எல்லா சமூகங்களிலும் காலாகாலமாகத் தோன்றி மறைந்திருக்கிறார்கள்.
சிலரை தலைவர்களாக மகுடம் சூட்டி சமூகம் கொண்டாடியது, பல்லாயிரம் போராளிகள் மடிந்து மண்ணோடு மண்ணாக கலந்தனர்,
அவர்களுடைய கல்வெட்டுக்கள் எங்கும் இல்லை, அதற்கான அனுமதியும் அதிகார சக்திகளினால் சம்பந்தப்பட்வர்களுக்கு வழங்கப்படவில்லை,
சமூக சீர்திருத்தத்தை நீதி நியாயத்தை உயிரினும் மேலாக கருதி உயிரைப்பணயம் வைத்து போராடிய இந்த (unsung heroes) என்ற வகைக்குள் அடங்கக்கூடிய, கொண்டாடப்படவேண்டிய இன்னும் கொண்டாடபடாமல் இருக்கும் தோழர் தமிழரசன் போன்றோரை குறைந்த பட்சம் தெரிந்தாவது கொள்ளுங்கள் என்கிறது இந்த "ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் " என்ற நூல் .
தமிழ் சமூகத்தில் அன்றும் இன்றும் விரல் விட்டு எண்ணி விடக்கூடிய சில எழுத்தாளர்களே வறுமைக்கோட்டின் கீழ் வாழாதவர்கள்.
ஒரு சினிமா படம் வெளியாகிய உடனே பார்க்கிற துடிப்பும் ஆர்வமுள்ள நாம் ஒரு எழுத்தாளரின் நாவலோ புத்தகமோ வெளிவந்தவுடன் அதை அடித்து பிடித்து வாசிப்பதில்லை,
இன்று நம் மத்தியில் ஈழத்தமிழ் நாவலாசிரியர்கள் பல Hollywood படங்களை படைக்கவல்ல விடயங்களை அவர்கள் நாவல்களில் ஆவணப்படுத்தியது மட்டுமல்லாது விறுவிறுப்பாக வாசிப்பை தூண்டும் வகையிலும் எந்த பரதிபலனும் இல்லாமல் தம் ஆன்ம திருப்திக்காக மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
எழுதிக் கொண்டிருப்பவர்கள் பலர் விடுதலைப்போராளிகள் மற்றும் சமூகப்போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் அவர்கள் கதாபாத்திரங்கள் பல நலிவுற்ற
சமூகத்தை சார்ந்தவர்களின் பாடுகளை பிரதிபலிக்கின்றது / பிரதிநிதிப்படுத்துகின்றது.
சில விடுதலைப்போராளிகள் தங்கள் வாழ்கை குறிப்பை தாங்களே ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்
இதில் முன்னோடியாக ஈழத்தின் தொடக்க காலப்போராளியான புஷ்பராணி சிதம்பரியின் டைரிக்குறிப்பைச்சொல்லலாம்,
நடிகர்களுக்கு உள்ளது போல் எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றும் வேண்டாம் குறைந்த பட்சம் அவர்கள் சிந்தனைகளைப்பகிர அல்லது தெரிந்து கொள்ளவாவது செய்யலாம்.
சட்டம், ஒழுங்கு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பு என்ற பேரில் எந்த ஒரு அரசும் இன்று மேற்குலக முதலாளித்துவ ஐனநாயக வழிமுறையில் தனிமனித சுதந்திரத்திற்கான கதவுகளை அடித்து சாத்தலாம்;
அநேகமான மேற்குலக ஐனநாயக அரசியல் சாசனங்களில் இனியொரு தேசத்தில் ஒரு ஹிட்லர் உருவாகுவதற்கு தடையாக எந்தவொரு வழிமுறையும் இல்லை;
அது போல் நடக்காமல் தடுப்பதற்கு இருக்கும் ஒரே வழி மக்கள் எழுச்சி மற்றும் புரட்சி மட்டும் தான்.
மக்கள் புரட்சியை கொண்டு செல்ல அந்த பாதையை ஒருங்கிணைக்கவும் வழி நடத்தவும் சில தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது.
அழகான ஒரு குடும்ப வாழ்க்கைக்குள் இருந்து கொண்டு அவ்வாறான காரியங்களைச்செய்ய முடியாது.
அந்த வகை மனிதர்கள் அவர்கள் அர்பணிப்புக்கள், தியாகங்கள், வேதனைகள் மற்றும் துயரங்கள் அனைத்துமே சம கால, எதிர்கால மனிதர்கள் மனச்சாட்ச்சிக்குள் நிச்சயமாக உறுத்திக்கொண்டிருக்கப்படவேண்டியவை.
தோழர் தமிழரசன் போன்ற அரிய மனிதர்களின் போராட்ட கோட்பாடுகள், தத்துவங்கள், யுக்திகள், கொள்கைகள் என்பவற்றை அருகில் இருந்து அவதானித்த மனிதர்கள் அதிகம் பேர் இருந்தாலும் அதில் அதிகாரத்தின் துப்பாக்கிகளுக்கு இரையாகாமல் வாழும் சக போராளிகள் சிலர்,
அதிலும் சிலரே கொண்ட கொள்கையை தம் வாழ்வில் தொடர்ந்தும் ஒரு அங்கமாக ஏதோ ஒரு வகையில் செயற்படுத்தி வருவார்கள், அந்த வகை மனிதரில் ஒருவர் தான் தோழர் பாலன்.
தோழர் பாலனின் " சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் மற்றும் "இலங்கை மீதான இந்தியாவின் ஆக்கிரப்பு " போன்ற புத்தகங்களும் இந்தியாவின் அமைதியான ஆன்மீக முகத்தில் கறையாக படிந்திருக்கும் ஒடுக்குமுறை மற்றும் முதலாளித்துவத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது.

No comments:

Post a Comment