Thursday, November 30, 2017

தோழர் குமரன் அவர்கள் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
மதுரையில் இருக்கும் தோழர் குமரன் அவர்கள் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தோழர் குமரன் மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனையில் புரட்சிகர இளைஞர் முன்னணி என்னும் அமைப்பில் செயற்பட்டு வருபவர்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தோழர் குமரன் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
தோழர் பாலனின் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் தமிழீழப் பற்றாளர்களால் வாசிக்கப்பட வேண்டும் !
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு மிகப் பெரிய அரசியல் தாக்கத்தை தமிழர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டம் விடுதலைப்புலிகள்,பிரபாகரன் போன்ற உணர்ச்சிமிக்க தளத்தில் விவாதங்கள் பெரும்பான்மை தமிழ்நாட்டு மக்களிடையே அறிமுகமாகியிருக்கிறதே ஒழியே இந்திய ஆளும் வகுப்புகளின் மேலொடுக்குமுறை பற்றி மிகப் பெரும்பான்மை மக்களிடையே விவாதங்களாக மாற்றப்படவில்லை.
தோழர் பாலன் எழுதிய நூலில் இந்திய ஆளும் வகுப்பு நீண்ட காலமாகவே எங்ஙனம் இலங்கையின் வளங்களை கொள்ளையிட முயற்சித்து வருகிறது என்பதை தக்கச் சான்றுகளுடன் எடுத்தியம்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பிற வல்லரசிய நாடுகளின் துணையோடு நசுக்கிய முதன்மை எதிரி என்பது தெற்காசியாவின் பேட்டை ரவுடி இந்திய ஆளும்வர்க்கம் தான் என்பதை நன்கு தெளிவுபடுத்துகிறார்.
ஈழத்தை பொறுத்த வரை அமெரிக்க உள்ளிட்ட மேலை வல்லரசிகளின் அரசியல்-பொருளியல் நலன் இந்திய ஆளும் வகுப்பின் நலனையே சார்ந்துள்ளது என்பதை அவர் நிறுவியுள்ளார்.
அண்மைய நிகழ்வுகளில் இலங்கையில் அதிகரித்து வரும் சீன முதலீடுகள் ,ஆசிய பசிபிக்கில் சீன அளுகையை முறியடிக்க அமெரிக்க -இந்திய ஆளும் வகுப்புகளை மிக நெருங்கியப் போர்க் கூட்டாளியாக மாறிவருவதை நாம் பார்த்துவருகிறோம்.
இந்த நேரத்தில் தோழர் பாலன் எழுதிய நூலை தமிழீழ பற்றாளர்கள் கண்டிப்பாகப் படித்து தெளிவு பெற வேண்டும்.
நம்முடைய எதிரிகள் யார்?,நண்பர்கள் யார்? என்பதை அறிந்துகொள்ளும் போது தான் வெற்றியை நோக்கி நாம் நடைபோட முடியும்

No comments:

Post a Comment