Wednesday, August 30, 2023

1984ல் கிழக்கு மாகாணத்தில் அம்பிலாந்துறை

1984ல் கிழக்கு மாகாணத்தில் அம்பிலாந்துறை என்னும் இடத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலைய வண்டிக்கு கண்ணிவெடி தாக்குதல் செய்து ஆயுதங்களை கைப்பற்றினோம். அதன்பின்னர் அவ் ஆயுதங்களின் துணையுடன் சென்ரல்கேம்ப் பொலிஸ் நிலையத்தை தாக்கி அங்கிருந்த ஆயுதங்கள் யாவற்றையும் நாம் கைப்பற்றினோம். இதை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அப்போது புளட் இயக்கம் இத் தாக்குதலை தாம் செய்ததாக உரிமைகோரி யாழ் மாவட்டத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தன. ஈழப் போராட்டத்தில் இவ்வாறு ஒரு இயக்கம் செய்ததை இன்னொரு இயக்கம் செய்ததாக உரிமைகோரி பிரசுரம் வெளியிட்டதை அறிந்துள்ளேனே தவிர ஒருபோதும் ஒரு இயக்கம் செய்ததை இன்னொரு இயக்கம் கண்டித்து பிரசுரம் வெளியிட்டதாக நான் அறியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன் மருதையாற்றில் வெடிகுண்டு வைத்தபோது அதனைக் கண்டித்து மகஇக அமைப்பு தமிழ்நாடு எங்கும் போஸ்டர் ஒட்டியது. ஒரு புரட்சிகர அமைப்பு செய்த தாக்குதலை இன்னொரு புரட்சிகர அமைப்பு கண்டித்து போஸ்டர் ஒட்டியது அப்பட்டமான காட்டிக் கொடுப்பாக எனக்கு தோன்றியது. நான் இது குறித்து ஆச்சரியத்துடன் தோழர் தமிழரசனிடம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே “பொலிஸ் தங்களை கைது செய்துவிடுமோ என்ற பயத்தில் செய்துள்ளார்கள்” என்றார். தமிழ்நாடு விடுதலைப்படை செய்ததாக நீங்களே சம்பவம் நடந்த இடத்தில் போஸ்டர் ஒட்டி உரிமை கோரியுள்ளீர்கள். அப்படியிருக்க இவர்களை எப்படி பொலிஸ் கைது செய்யும் என நான் கேட்டேன். “அவர்கள் அப்படித்தான். இது குறித்து பெரிதாக எதுவும் யோசிக்க தேவையில்லை” என்றார் தோழர் தமிழரசன். நாம் தமிழ்நாட்டில் முதன் முதலாக தொடர்பு கொண்ட அமைப்பு தோழர் தமிழரசனின் அமைப்பே. அப்போது தோழர் தமிழரசன் “தமிழ்நாட்டில் பல புரட்சிகர அமைப்புகள் இருக்கின்றன. நீங்கள் எல்லாவற்றுடனும் தொடர்பு கொள்ள வேண்டும்” எனக்கூறி அவற்றின் தொடர்பு விபரங்களை தந்தார். அதன்படி மகஇக தலைவர் மருதையனை சென்னையில் சந்தித்தேன். அப்போது மருதையன் தாங்கள் மட்டுமே உண்மையான புரட்சிகர அமைப்பு. மற்றவர்கள் எல்லாம் போலிகள். அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் தாம் தொடர்பு வைக்க மாட்டோம் என்றார். அவர் தோழர் தமிழரசனுடனான எமது உறவைத்தான் கூறுகின்றார் என்பதை புரிந்துகொண்ட நான் "அவர் கூறித்தான் உங்களை சந்திக்க வந்தேன். உங்களுக்காக அவருடனான உறவை நாம் முறித்துக்கொள்ள மாட்டோம் " எனக்கூறிவிட்டு எழுந்தேன். அப்போது மருதையன் “சரி பரவாயில்லை. காலப்போக்கில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்” என்று கூறிவிட்டு தொடர்ந்து தொடர்பு கொள்ள சம்மதித்தார். ஆனால் , தமிழத்தேசிய விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசனே உண்மையான புரட்சியாளர் என்பதை வரலாறு இன்று நிரூபித்துவிட்டது. மருதையனின் இன்றைய நிலை எனக்கு ஆச்சரியம் தரவில்லை.

No comments:

Post a Comment