Tuesday, August 15, 2023

விடுதலை படத்தில் வாத்தியார்

விடுதலை படத்தில் வாத்தியார் (புலவர்) ரயிலுக்கு குண்டு வைத்தது போல் வெற்றிமாறன் காட்டியிருப்பார். ஆனால் உண்மையில் அந்த ரயில் குண்டு வெடிப்பிற்கும் புலவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த சம்பவம் தோழர் தமிழரசன் தலைமையிலேயே நடந்தது. மேலும் படத்தில் காட்டியதுபோல் அது கனிம வள கொள்ளைக்கு எதிராக நடந்த சம்பவம் அல்ல. இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி நடந்த சம்பவம். பலரும் நினைப்பதுபோல் ரயிலுக்கு குண்டு வைக்கப்படவில்லை. பாலத்திற்குதான் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலம் தகர்க்கப்பட்டு இரண்டரை மணி நேரம் கழித்து வந்த ரயிலே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பாலத்தை தகர்த்துவிட்டு அருகில் இருந்த ரயில்நிலையம் சென்று பாலம் தகர்க்கப்பட்ட செய்தி ஸ்டேசன் மாஸ்டரிடம் கூறப்பட்டது. ஸ்டேசன் மாஸ்டர் உடனே சம்பந்தப்பட்ட தலைமை அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் அடுத்து வரும் ரயிலை மறிக்க வேண்டாம். தொடர்ந்து செல்ல அனுமதியுங்கள் என அவருக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டேசன் மாஸ்டருக்கு மேலிடத்தின் முடிவு குழப்பத்தை தந்திருக்கிறது. அதனால் அவர் மனம் கேளாமல் ரயில் சாரதியிடம் ஏதோ சத்திம் கேட்டது. மெதுவாக செல்லுங்கள் என கூறியிருக்கிறார். அச் சாரதியும் மெதுவாக ஓட்டி வந்ததால் முன்பக்க ஒரு பெட்டி மட்டுமே பாலத்தில் கவிழ்ந்து விழுந்தது. ரயில் கவிழ்ந்ததிற்கும் அதில் பயணம் செய்த 30 பேர் இறந்ததற்கும் ரயில்வே நிர்வாகமே பொறுப்பு. ஆனால் அரசு செய்த சதியால் அப் பழி தோழர் தமிழரசன் மீது விழுந்தது. மக்களுக்காக போராடிய தன்மீது மக்களைக் கொன்ற பழி விழுந்துவிட்டதே என்று தோழர் தமிழரசன் மிகவும் வருந்தினார். அதுவே அவர் பொன்பரப்பியில் தன் ஆயுதங்களை மௌனிப்பதற்கும் அதனால் மரணமடைவதற்கும் காரணமாகிவிட்டது. வெற்றி மாறன் விடுதலை இரண்டாம் பாகத்தில் இந்த உண்மைகளை காட்டுவாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் உண்மைகள் உறைந்துபோகாது. அது மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துவிட்டது. தோழர் தமிழரசன் இப்போது பரந்துபட்ட மக்களால் உணரப்படுகிறார்.

No comments:

Post a Comment