Tuesday, August 15, 2023

யூதர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

•யூதர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? உலகெங்கும் அகதிகளாக அலைந்துகொண்டிருந்த யூதர்களுக்கு இஸ்ரவேல் என்ற தனிநாடு கிடைப்பதற்கு அன்றிருந்த சூழலே காரணம் என்பார் சிலர். இன்னும் சிலர் வல்லரசுகளான அமெரிக்காவும் பிரிட்டனுமே காரணம் என்பார்கள். கம்யுனிஸ்ட் தலைவர் ஸ்டாலின்தான் காரணம் என்று சொல்பவர்களும்கூட உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கிய காரணம் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற யூதர்கள் அனைவரினதும் விருப்பமும் அதை அடைவோம் என்ற உறுதியான நம்பிக்கையுமே. நாட்டை விட்டு ஓடிவிட்டீர்கள். உங்களுக்கு இனி நாட்டைப் பற்றி கதைக்க தகுதியில்லை என்று ஒரு யூதன் இன்னொரு யூதனைப் பார்த்து கூறவில்லை. மாறாக இஸ்ரவேல் என்ற நாட்டை அடைவதற்கு முன்பே ஒரு யூதன் இன்னொரு யூதனை சந்தித்துவிட்டு விடைபெறும்போது நாளை இஸ்ரவேலில் சந்திப்போம் என்றே கூறி விடை பெறுவார்களாம். அந்தளவுக்கு தமக்கு ஒரு நாட்டை அடைய வேண்டும் என்ற உறுதியும் ஒற்றுமையும் நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. அதுபோல தமிழர்களும் இன்று பல நாடுகளில் அகதிகளாக சிதறி இருக்கிறோம். சுமார் 8 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறோம் இன்று போராட்டத்தை முன்னகர்த்துவதில் இந்த புலம் பெயர்ந்தவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல. புலம் பெயர்ந்தவர்கள் தம் தமிழின அடையாளத்தை மறந்து அந்தந்த நாடுகளின் அடையாளங்களுடன் கலந்து விடுவார்கள் அல்லது கரைந்துவிடுவார்கள் என்று சிங்கள அரசும் இந்திய அரசும் நினைத்தன. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு கையால் போராட்டத்தை நகர்த்திக்கொண்டு மறு கையால் தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு உதவி வருவதைக் கண்டு அவை ஆச்சரியம் அடைகின்றன. வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப் பிடிக்க அமைப்பு இல்லை. ஆனாலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அடுத்த சந்ததியும்கூட போராட்டத்தைக் கையில் எடுத்துவிட்டது. தலைவர்களை விலைக்கு வாங்கிய சிங்கள மற்றும் இந்திய அரசுகளால் புலம்பெயர்ந்த இந்த மக்களை வாங்கவும் முடியவில்லை. இவர்களின் போராட்டங்களை அடக்கவும் முடியவில்லை. புலம் பெயர்ந்த மக்களை அடக்கவும் முடியவில்லை. அச்சுறுத்தவும்கூட முடியவில்லை என்றவுடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாராளமாக இலங்கை வந்து முதலீடு செய்யலாம் என சிங்கள அரசு ஆசை வார்த்தை வீசுகின்றது. இந்திய அரசோ அண்ணாமலையை அனுப்பி நாம் அனைவரும் இந்துக்கள் என்றுகூறி உறவுப்பாலம் கட்ட முனைகிறது. இதற்கு “நாம் மீண்டும் எழுவோம்” என்று புலம் பெயர்ந்த தமிழர் அளிக்கும் பதில் சிங்கள மற்றும் இந்திய அரசுகளுக்கு எரிச்சல் கொடுப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் தம் கைக்கூலிகள் மூலம் “ஒருமுறை எழும்பி அழிந்தது போதாதா? மீண்டும் அழியனுமா?” , “போராடுவதாக இருந்தால் நாட்டில் வந்து போராடுங்கள்” என்று கூற வைக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் யூதர்களின் வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்டு உலகத் தமிழர்கள் அனைவiரையும் ஒற்றுமைப்படுத்தி தம் இலக்கை அடையும் பயணத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment