Tuesday, August 15, 2023

விடுதலை படம் யாவும் கற்பனை

விடுதலை படம் யாவும் கற்பனை என்றும் யாரையும் குறிப்பிடவில்லை என்றும் வெற்றிமாறன் படத்தின் ஆரம்பத்திலேயே கூறியிருக்கிறார். ஆனாலும் படம் பார்ப்பவர்களுக்கு வாத்தியாரும் (புலவர்) தமிழரசனும் நிச்சயம் நினைவில் வருகிறார்கள். அப் படத்தில் வாத்தியார் (புலவர்) காவல்நிலையத்தை தாக்குவதாக காட்டியிருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் உண்மையில் புலவரோ அல்லது தமிழரசனோ காவல்நிலையத்தை ஒருபோதும் தாக்கவில்லை. தோழர் தமிழரசன் மறைவிற்கு பின்பு அவரின் தமிழ்நாடுவிடுதலைப்படையை முன்னெடுத்த தோழர் லெனின், தோழர் சுந்தரம் போன்றவர்களே காவல்நிலையங்களை தாக்கியிருந்தனர். தோழர் தமிழரசன் காவல்நிலையத்தை தாக்கவில்லை என்றாலும் அப்போது பொலிஸ் அதிகாரியாக இருந்த தேவாரத்தை கொல்ல முயன்றார். ஏனெனில் காவல்துறை அதிகாரி தேவாரம் நக்சலைட்டுகள் என்றுகூறி தர்மபுரி மாவட்டத்தில் பல அப்பாவி இளைஞர்களை கொன்றிருந்தார். அதற்கு தேவாரத்தை பழி வாங்க வேண்டும் என தமிழரசன் நினைத்தார். தேவாரம் விருகம்பாக்கத்தில் இருந்த ஒரு பெண் வீட்டிற்கு இரவில் வந்து செல்லும் விபரம் தமிழரசனுக்கு தெரிந்திருந்தது. எனவே அங்கு வைத்து தேவாரத்தைக் கொல்வதற்காக துப்பாக்கியுடன் சென்னை வந்து காத்திருந்தார் தமிழரசன். ஆனால் தேவாரத்தின் அதிர்ஷ்டம் தமிழரசன் காத்திருந்தவேளை அவர் வரவில்லை. வந்திருந்தால் கொல்லப்பட்டிருப்பார். தோழர் தமிழரசன் நினைத்த இப்படியான காவிரி அணைக்கு குண்டு வைப்பது போன்று பல விடயங்கள் நடக்காமல் போய்விட்டது. 1990ல் வேலூர் கோட்டையில் கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமில் அப்பாவி அகதிகள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கோட்டைக்குள் கலகம் செய்தார்கள். அதை அடக்கச்சென்ற தேவாரம் கலைஞர் உத்தரவுக்கு இணங்க இரண்டு அகதிகளை சுட்டுக் கொன்றார். சுட்டுக்கொன்றதுகூட பரவாயில்லை. அவர்கள் பிரியாணி கேட்டு கலகம் செய்ததால் சுட்டுக் கொன்றேன் என தேவாரம் பேட்டி கொடுத்தார் . அப்போதுதான் தோழர் தமிழரசன் நினைத்தது நடக்காமல் போய்விட்டதே என நான் கவலை கொண்டேன்.

No comments:

Post a Comment