Wednesday, August 30, 2023

நானும் என் தோழர்களும்

நானும் என் தோழர்களும் சென்னையில் மடிப்பாக்கம் என்னும் இடத்தில் SIP காலனி என்னும் இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். 1983 முதல் 1986வரை அந்த வீட்டில் குடியிருந்தோம். எப்போதும் குறைந்தது 25 பேராவது அங்கிருந்தோம். வீட்டு ஓனர் ஒரு பார்ப்பணர். அருகில் இருந்த வீட்டில் அவர் இருந்தார். அவருக்கு நாம் ஈழத் தமிழர் என்று மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது. நாம் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடுவது அவருக்கு தெரியும். ஆனால் அவர் அது பற்றி எதுவுமே எம்மிடம் பேசியதில்லை. பல்லாவரத்தில் மாடு வெட்டி உடன் கறி விற்கும் ஒரு கடை உண்டு. காலையில் சயிக்கிளில் அங்கு சென்று மாட்டிறைச்சி வாங்கி வந்து சமைத்து உண்பது எமது வழக்கம். தோழர் தமிழரசன் சென்னை வரும்போதெல்லாம் இரவில் எமது இந்த வீட்டில்தான் வந்து தங்குவார். அவருடைய நண்பர் ஒருவர் திட்டக்குடி சென்னை பஸ்ஸில் கண்டக்டராக இருந்தார். அந்த நண்பரின் பஸ்ஸில்தான் தோழர் தமிழரசன் சென்னை வருவார். அவர் வரும்நேரம் நள்ளிரவாகிவிடும். அந் நேரத்தில் பறங்கிமலையில் இருந்து மடிப்பாக்கத்திற்கு பஸ் இருக்காது. குதிரை வண்டியில்தான் வரவேண்டும். குதிரை வண்டிக்கு எதற்கு வீணாக பணம் கொடுக்க வேண்டும் என்றெண்ணி நடந்தே வருவார் தமிழரசன். எந்நேரம் வந்தாலும் எமது இடத்தில் நிச்சயம் சாப்பாடு இருக்கும் என்பதால் தமிழரசன் வழியில் கடையில் சாப்பிடாமலே வருவார் அவர் சாப்பிடாமல் வருவார் என்பது எமக்கும் தெரியும். எனவே வந்தவுடன் முதலில் இருக்கும் சாப்பாட்டை கொடுப்போம். எமது மாட்டிறைச்சிக் கறியை கேட்டு வாங்கி விரும்பி சாப்பிடுவார். நாம் பொதுவாக தேங்காய்பால் விட்டு நல்ல காரமாக கறி சமைப்போம். இது எமது ஈழத்து சமையல் ஸ்டைல். அதனால் இதனை சாப்பிடும் தமிழ்நாட்டு தமிழர் பலரும் அதிக காரமாக இருக்கிறது எனக்கூறி உண்ண சிரமப்படுவார்கள். ஆனால் தோழர் தமிழரசன் எம்மைப்போல் இந்த கறியை நன்றாக விரும்பி ருசித்து சாப்பிடுவார். இது எமக்கு ஆச்சரியமாக இருக்கும். அதைவிட ஆச்சரியம் என்னவெனில் அவர் எவ்வளவு உணவு கொடுத்தாலும் மீதி வைக்காமல் நன்றாக சாப்பிடுவார். அதேவேளை உணவு இல்லை என்றாலும் எதுவும் கூறாமல் தண்ணி குடித்துவிட்டு தூங்குவார். இப்போதெல்லாம் பலர் “இன்று பீவ் கறி சாப்பிட்டோம்” என்று பதிவு போடுகிறார்கள். அப் பதிவுகளை பார்க்கும்போது தோழர் தமிழரசன் மாட்டுக்கறி சாப்பிட்டது நினைவு வருகிறது.

No comments:

Post a Comment