Tuesday, October 30, 2018

அக்-10, இன்று உலக மனநல தினம்

அக்-10, இன்று உலக மனநல தினம்
இந்த தினம் எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ குறிப்பாக இன்றைய நிலையில் எமது தமிழ் இனத்திற்கு இது எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ எம்மிடையே போதியளவு விழிப்புணர்வு காணப்படவில்லை.
யாழ் நகரில் மனநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தன் தாயாரை கொடூரமாக தாக்கி கிணற்றில் வீசிக் கொன்றதாக செய்திகள் தெரிவித்தன.
ஈழத்தில் மட்டுமன்றி கனடாவில் கூட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட தமிழ்இளைஞன் தன் தாயாரை கட்டையால் அடித்துக்கொன்ற செய்தி நான் அறிந்திருக்கிறேன்.
எமது தமிழ் சமூகத்தில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும் பொத்திப் பாதுகாக்கும் ரகசியமாகவும் இருந்து வருகிறது.
பைத்தியம், கிறுக்கு, விசர் என்றும் நவீன தமிழில் லூசு, மெண்டல் என்றும் தரக்குறைவாக அழைக்கப்படுகிறது.
தமிழ்படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள்.
இதனால் சிறுவர்கள் இவர்கள் மீது கல் எறிகின்ற கோர நிலை எமது சமூகத்தில் காணப்படுகிறது
மனநோயாளர்கள் என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்படுபவர்கள் மீது பாரபட்சமும் வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகின்றன. குடும்பங்களிடையே இது ஒரு அவமானமாக பார்க்கப்படுகின்றது.
மனநோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டிய காப்பகங்கள்கூட அவர்களை கேவலமாக நடத்துகின்றன.
அவர்களின் மனிதவுரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள் , வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயம் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டங்களிலும் காணப்படுகின்றது.
எனவேதான் இந்த மனநோய் பற்றி உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்துவதற்காக உலக மனநல தினம் கொண்டாடப்படுகின்றது.
மன நல பாதிப்பு அறிகுறிகள் தெரிந்த வுடனேயே மன நல சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும் என்பதே, மன நல நாளின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
மன நோய்கள் என்பது உடல்நோய்கள் போல யாருக்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.
ஒரு நபர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டவராகவே உள்ளார்.
குறைந்தது 4 பேரில் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், மன நலத்தையும் பேணி பாதுகாப்பது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.
இலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில் அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது.
மக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
தற்போது மன நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் போதிலும், இன்னும் பல நேரங்களில் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்க மறுத்து மறுதலிப்பதாலும் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பலர் தள்ளிப் போடுகின்றனர்.
இதனால், எளிதில் செய்ய வேண்டிய சிகிச்சைகளைக் கடினமாக்குவதுடன் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், மன நல நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை என்பது கட்டாயம். தவிர்த்தால் அதுவே பின்னாளில் சிக்கலாகி விடுகின்றது.

No comments:

Post a Comment