Thursday, February 28, 2019

•இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு (பகுதி -2)

•இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு (பகுதி -2)
கடந்த 7.2.19 யன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் இல் பலூச் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கான ஆதரவு கூட்டம் நடைபெற்றது.
பாகிஸ்தானில் பாலுச் இன மக்கள் தமது சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
காஸ்மீர் போராளிகளுக்கு பாகிஸ்தான் எப்படி உதவுகிறதோ அதேபோன்று பலூச் போராளிகளுக்கு இந்திய அரசு உதவி வருகிறது.
ஆனால் காஸ்மீரில் இந்திய ராணுவம் இறந்தால் “பாகிஸ்தான் பயங்கரவாதம”; என்று கூறுவோர் பாகிஸ்தானில் ராணுவம் இறந்தால் “இந்திய பயங்கரவாதம்” என்று கண்டிப்பதில்லை.
அதேபோன்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஈழதமிழ் புத்திஜீவி ச.வி. கிருபாகரன் “ இலங்கையில் 2009 ற்கு பின்னர் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதுடன் தமிழர்களது சுயநிர்ணய போராட்டம் நாளுக்கு நாள் பின்தங்கி செல்வதற்கு சீனா காரணம்” என்று கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்குவதில் சீனாவைவிட இந்தியாவின் பங்கே அதிகம்.
இந்த உண்மை குழந்தைப் பிள்ளைகளுக்குகூட நன்கு தெரியும் அப்படியிருந்தும் எமது புத்திஜீவிகள் ஏன் தொடர்ந்தும் சீனாவை மட்டும் சுட்டிக் காட்டுகின்றனர்?
எதிரியை இனங் காணத்தவறும் அல்லது எதிரியை நண்பனாக கருதும் போராட்டம் ஒருபோதும் வெற்றியைப் பெற முடியாது என்பது இந்த புத்திஜீவிகளுக்கு தெரியாதா?
பாகிஸ்தானில் பலுச் மக்களின் போராட்டத்தை அடக்கும் பாகிஸ்தான் அரசுக்கு சீனா உதவி செய்கிறது. அதேவேளை பலூச் மக்களுக்கு இந்தியா உதவுகிறது.
அப்படியாயின் இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்கும் இலங்கை அரசுக்கு சீனா உதவி செய்யும்போது இந்தியா தமிழ் மக்களுக்குதானே உதவ வேண்டும். ஆனால் இந்தியாவும் சீனாவும் சேர்ந்துதானே இலங்கை அரசுக்கு உதவி வருகின்றன.
இந்தியா சீனா மட்டுமல்ல பாகிஸ்தானும்கூட தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்கும் இலங்கை அரசுக்குதானே உதவுகின்றன. இது ஏன் என்பதை எமது புத்திஜீவிகள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
இன்றுமட்டுமல்ல இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இந்தியா செய்தபோதும் அதனை முதலில் ஆதரித்தது சீனாவே. பாகிஸ்தான் கூட ஆதரவு தெரிவித்தது.
பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் யுத்தம் நடந்த வேளையிலும்கூட இந்தியாவின் எதிரி நாடுகள் எனக்கூறப்படும் சீனா பாகிஸ்தான் போன்றவை தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவுமில்லை. உதவவும் இல்லை.
• தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்குவதில் அதிக பங்கு வகிப்பது இந்தியாவா? சீனாவா?
(1) இலங்கையில் 4 இந்திய தூதரலாயம் உண்டு. சீனா ஒரேயொரு தூதரலாயமே கொண்டுள்ளது.
(2) இலங்கையில் இந்தியா இரண்டு முறை ராணுவ தலையீடு செய்துள்ளது. ஆனால் சீன ராணுவம் ஒருமுறைகூட தலையிடவில்லை.
(3) இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி வழங்குகின்றது. ஆனால் சீனா வழங்கியதில்லை.
(4) கடந்தவருடம்கூட இந்தியா இலங்கைக்கு போர்க்கப்பல் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளது. ஆனால் சீனா இதுவரை போர்க் கப்பலை வழங்கியதில்லை.
(5) இலங்கையில் இந்திய உளவுப்படை தாராளமாக தலையீடு செய்கிறது. அண்மையில்கூட தன்னை இந்திய உளவுப்படை கொல்ல சதி செய்ததாக ஜனாதிபதி மைத்திரி குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் சீனாவின் உளவுப்படை இலங்கையில் தலையீடு செய்ததாக இதுவரை எந்த செய்தியும் வெளிவரவில்லை.
(6) இந்தியா 20 காந்தி சிலைகளை வடக்கு கிழக்கில் நிறுவுகிறது. ஆனால் சீனா எந்தவொரு சிலையையும் நிறுவவில்லை.
(7) யாழ் இந்திய தூதர் யாழ் மருத்துவமனை படுகொலைகளைப் பற்றி பிரசுரித்த உதயன் பத்திரிகை நிறுவனரை கண்டித்தார். அவர் ஒரு எம்.பி என்று தெரிந்தும் அவரை மிரட்டினார். அச் செய்தியை எழுதிய யாழ் பல்கலைக்கழக பேராசிரியரின் உயர் படிப்பிற்கான விசாவை வழங்காமல் பழி வாங்கினார். ஆனால் சீனா தூதுவர் இவ்வாறு எதுவும் செய்ததாக எந்த செய்தியும் இதுவரை வெளிவரவில்லை.
(8) 36 வருடங்களாக இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இந்தியா மறுக்கிறது. அவ் அகதிகளின் உயர்கல்வி வாய்ப்பைக்கூட இந்தியா மறுக்கிறது. ஆனால் இந்தியா மறுத்த அகதி மாணவி நந்தினிக்கு மருத்துவ கல்வி கற்கும் வாய்ப்பை சீனா வழங்கியுள்ளது.
(9) யுத்தம் முடிந்து பத்து வருடமாகியும் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைத்து வைத்திருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய இந்தியா மறுக்கிறது. ஆனால் சீனாவில் எந்த தமிழ் அகதியும் சிறை வைக்கப்பட்டிருப்பதாக தகவல் இல்லை.
(10) இந்திய உளவுப்படை சிவசேனை என்று அமைப்பை உருவாக்கி தமிழ் மக்களிடையே மதப் பூசல்களை உருவாக்கிறது. ஆனால் சீனா அப்படி எதுவும் இதுவரை செய்யவில்லை.
(11) இந்தியாவில் இருந்து பொருளாதார ராணுவ ஆக்கிரமிப்பு மட்டுமல்ல கலை கலாச்சார இலக்கிய ஆக்கிரமிப்பும் தமிழ் மக்கள் மீது நிகழ்கிறது. ஆனால் சீனா கலை கலாச்சார ஆக்கிரமிப்பை தமிழ் மக்கள் மீது நிகழ்த்தவில்லை.
(12) இந்தியாவில் இருந்து எல்லைதாண்டி வந்து தமிழ் மக்களின் மீன்வளம் கொள்ளையடிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ் மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் இந்திய அரசு மறுக்கிறது.
(13) இந்தியாவில் இருந்து வரும் கஞ்சா போதையினால் தமிழ் மக்கள் சீரழிக்கப்படுகின்றார்கள். புலிகளுக்கு வந்த ஆயுதக்கப்பலை மடக்கிய இந்திய அரசு இந்த போதைப்பொருள் கடத்தலை தடுக்காமல் இருக்கிறது.
(14) 2009ற்கு பின்புதான் பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன் சீமெந்து காங்கேசன் துறைமுகம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பூரில் 600 ஏக்கர் நிலம் திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய்குதம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இல்மனைட் கனிவளம் மட்டுமன்றி மன்னார் பெற்றோல் வளமும் இந்தியாவுக்தான் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு கிழக்கில் தமிழர்களின் வளம் யாவும் இந்தியாவினாலேதான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றுகூட சீனாவுக்கு வழங்கப்படவில்லை.
உண்மை நிலை இப்படியிருக்க 2009ற்கு பின்பு தமிழர்களின் சுயநிர்ணய போராட்டம் பின்தங்கி செல்வதற்கு சீனாதான் காரணம் என்று கிருபாகரன் எப்படி கூறுகிறார்?
கடந்த வாரம் இலங்கை அரசு சீனாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் கடனாக பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன்.
சீனா மட்டுமல்ல பிரான்ஸ் அரசும் இலங்கை அரசுக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வந்துள்ளன.
அப்படியென்றால் இவை ஆக்கிரமிப்பு இல்லையா? இவை பற்றி என்ன கூறப்போகின்றீhத்கள் என நீங்கள் கேட்க நினைக்கலாம். அதுபற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment