Thursday, February 28, 2019

தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்!

தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்!
08.02.2019 யன்று தோழர் சண் அவர்களின் 26 வது நினைவு தினம் ஆகும்.
•நாம் ஏன் தோழர் சண் அவர்களை நினைவு கூர வேண்டும்?
அவர் ஒரு தமிழர் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை. அப்படியென்றால்
அவர் ஒரு புரட்சியாளர் என்பதால் நினைவு கூர வேண்டுமா?
இல்லை. அப்படியென்றால்
தமிழர் ,சிங்களவர், முஸ்லிம்கள் என மூவின மக்களாலும் மதிக்கப்பட்ட ஒரு தமிழ் தலைவர் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை. அப்படியென்றால்
மாசேதுங் உட்பட சர்வதேச புரட்சியாளர்களால் மதிக்கப்பட்ட ஒரு இலங்கை தலைவர் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை. அப்படியென்றால்
எந்தவித மந்திரிப்பதவி, எம்.பி பதவிகளுக்கும் சோரம் போகாமல் இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்ததாலா?
இல்லை. இல்லை.
அப்படியென்றால் நினைவு கூர வேண்டிய அளவுக்கு அவர் செய்த சாதனைதான் என்ன?
இலங்கையில் மாவோயிசத்தை அறிமுகப்படுத்தி வளர்த்தமைக்காக அவரை நினைவுகூரத்தான் வேண்டும்.
இலங்கையில் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதையை முன்வைத்தமைக்காக நினைவு கூர வேண்டும்.
“அடிக்கு அடியே” சாதீய கொடுமையில் இருந்து விடுபட வழி வகுக்கும் என கூறி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை அளித்தமைக்காக நினைவு கூர வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு கம்யுனிஸ்ட் தலைவர் என்பது மட்டுமன்றி இனப்பிரச்சனைக்கு தீர்வாக பிரதேச சுயாட்சியை முன்வைத்தவர் என்பதால் நினைவு கூர வேண்டும்.
மேலும் அவர் பற்றிய சில குறிப்புகள்.
•வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நன்கு படித்து பட்டதாரியானவர். தமிழ் சிங்களம் ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை மிக்கவர்.
•அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல உத்தியோகம் பெற்று வசதியான வாழ்வு வாழ்ந்திருக்கலாம்
•அல்லது பின்னரும்கூட பல கம்யுனிஸ் தலைவர்கள் தேர்தல் பாதையில் சென்று அமைச்சு பதவிகள் பெற்றதுபோல் இவரும் பெற்றிருக்கலாம்.
•ஆனால் அவர் இறுதிவரை உறுதியான புரட்சியாளராக வாழ்ந்து மறைந்தார்.
•அவரது திருமணம்கூட கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு விதவையையே திருமணம் செய்;தார்.
•சீனாவின் உதவி கிடைக்காமல் போய்விடும் என்று தெரிந்தும் சீனாவின் தவறுகளை விமர்சித்தவர்.
•மாசேதுங் உயிருடன் இருக்கும்போதே சீனா இலங்கை அரசுக்கு செய்த ஆயுத உதவிகளை கண்டித்தவர். சீனா முதலாளித்தவ பாதைக்கு திரும்புகிறது என்று கூறி அதனுடனான உறவுகளை கைவிட்டவர்.
•தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபோது இலங்கை அரசு அவர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைத்தது. அமிர்தலிங்கம் உட்பட தமிழர்விடுதலைக்கூட்டணியினர் “பொடியன்கள்” என்று அழைத்தனர். ஆனால் தோழர் சண்தான் முதன் முதலில் அவர்களை “போராளிகள்” என்று அழைத்தார். (அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, கொல்வின் ஆர்டி சில்வா, என்எம் பெரராரோ பீட்டர் கெனமன் அமிர்தலிங்கம் இருந்த மேடையில் கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் தைரியமாக கூறினார்.)
•தமிழ் சிங்கள மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்காக பல தொழிற்சங்கங்களை நிறுவி அவர்களுக்காக இலவசமாக வழக்குகள் பேசி வென்று கொடுத்தவர்.
(1)ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இந்திய ஆதரவுடன் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் மலரும் என்று கூறியபோது “இந்தியாவை நம்ப வேண்டாம். இந்தியா ஒரு போதும் தமிழீழம் பெற்று தராது. மாறாக போராளிகளை அழிக்கும்” என்று கூறியவர்.
(2)இலங்கையில் சமசமாஜக்கட்சி டிராட்சியவாதிகளுக்கும் , தேர்தல் பாதையில் பயணிக்கும் திரிபுவாத கம்யுனிஸ்டுகளுக்கும் தோழர் சண் கொடுத்த தத்துவார்த்த அடி இன்னும் அவர்களால் எழும்ப முடியாத அடியாக இருக்கிறது.
(3)இலங்கையில் இனி யார் புரட்சியை செய்தாலும் அவர் முன்னெடுத்த புதிய ஜனநாயகப்புரட்சியில் இருந்தே தொடர வேண்டும்.. தோழர் சண் அவர்களை மறுத்து விட்டு யாராலும் புரட்சி செய்ய முடியாது.
ஆம். தோழர் சண் இலங்கையில் ஒரு மாபெரும் தலைவர் மட்டுமல்ல மகத்தான தலைவரும்கூட.
அவரை நினைவு கூர்வது எமது கடமையாகும்.
குறிப்பு - இத்தகைய மகத்தான ஒரு தலைவரின் இறுதி நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தமை என்னால் மறக்க முடியாதது. அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” நூலை 1990ல் சென்னையில் அச்சடித்து வெளியிட்டிருந்தேன்.

No comments:

Post a Comment