Thursday, February 28, 2019

• இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு (பகுதி-3)

• இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு (பகுதி-3)
இலங்கையில் சீன ஆக்கிரமிப்பே இல்லை என்று நான் கூற வரவில்லை.
இலங்கையில் சீன ஆக்கிரமிப்பும் உண்டு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மாறாக
(1) இந்திய ஆக்கிரமிப்பைவிட சீன ஆக்கிரமிப்பு அதிகம் என்று சிலர் கூறுவதும்
(2) சீன ஆக்கிரமிப்பின் காரணமாக இந்தியா தமிழீழம் எடுத்து தர முன்வரும் என்றும் சிலர் கூறுவது
தவறான கருத்துகள் என்பதை காட்டுவதே இங்கு எனது நோக்கமாகும்.
எனவே இந்தியாவின் ஆக்கிரமிப்பை நான் சுட்டிக்காட்டுவதால் என்னை சீன ஆக்கிரமிப்பின் ஆதரவாளன் என்று முத்திரை குத்த வேண்டாம்.
இவ்வாறு முத்திரை குத்துவது எனது கேள்விகளுக்கான உரிய பதில் இல்லை என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
முக்கியமாக, சீனா ஒரு கம்யுனிஸ்ட்நாடு என்றும் அதனால் கம்யுனிஸ்டுகள் சீன ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறார்கள் அல்லது கண்டுகொள்வதில்லை என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
அவர்களுக்கு எனது பதில் என்னவென்றால் உண்மையான கம்யுனிஸ்டுகள் சீனாவை தற்போது கம்யுனிஸ்ட் நாடாக கருதுவதில்லை. சீனாவின் ஆக்கிரமிப்பை ஆதரிப்பதும் இல்லை.
ரஸ்சியாவில் ஸ்டாலின் மறைவிற்கு பின்பு பதவிக்கு வந்த குருசேவ் “சமாதானமும் சகவாழ்வும்” என்ற திருத்தல்வாதத்தை முன்வைத்து ஸ்டாலின் மீது அவதூறு பரப்பியபோது உலக அளவில் கம்யுனிஸ் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது.
அப்போது இலங்கையிலும் கம்யுனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டது. சீன சார்பு கம்யுனிஸ்ட் கட்சிக்கு தோழர் சண்முகதாசன் தலைமை தாங்கினார்.
இலங்கையில் மாசேதுங் சிந்தனையை அறிமுகப்படுத்தி சீனா மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியவர் தோழர் சண்முகதாசனே.
1971ம் ஆண்டு மாசே துங் உயிருடன் இருக்கும்போதே சீன அரசு ஜேவிபி கிளர்ச்சியை அடக்க இலங்கை அரசுக்கு உதவியதை முதன் முதலில் கண்டித்தவரும் தோழர் சண்முகதாசனே.
சீனா முதலாளித்துவ பாதைக்கு திரும்புகிறது என்று கூறி அதனுடன் உறவை முதன் முதலில் துண்டித்தவரும் தோழர் சண்முகதாசனே.
சீனாவின் தலைமையில் இருந்து விலகி சர்வதேச ரீதியில் ஒரு புரட்சிகர அகிலத்தை கட்டி அதற்கு தலைமை தாங்கியவரும் தோழர் சண்முகதாசனே.
( இது பற்றி மேலதிக விபரம் அறிய விரும்புவோர் தோழர் சண்முகதாசன் எழுதிய “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் நூலைப் படிக்கவும்.
இன்றும் சீனாவில் ஒரு கட்சி ஆட்சிதான் நடைபெறுகிறது. எனினும் சீனா முதலாளித்தவ பாதைக்கு திரும்பிவிட்டது. அது ஒரு முதலாளித்துவ நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
மற்ற முதலாளித்துவ நாடுகள் போன்று சீனாவும் தனது சந்தைக்காக இலங்கை உட்பட பல நாடுகளை ஆக்கிரமிக்கின்றது
எனவே தமிழ் மக்கள் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்ப்பது போன்று சீன அக்கிரமிப்பையும் எதிர்க்க வேண்டும்.
அப்படியென்றால் 1952ல் சீனா செய்த ரப்பர் அரிசி ஒப்பந்தம் 1972ல் வழங்கிய வட்டி இல்லா 25 கோடி ரூபா கடன் உதவிகளை எப்படி பார்ப்பது?
அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். ( தொடரும்)

No comments:

Post a Comment