Thursday, February 28, 2019

இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு (பகுதி- 4)

• இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு (பகுதி- 4)
• ரப்பர் அரிசி ஒப்பந்தம்
1949 ம் ஆண்டு சீனப்புரட்சி நடைபெற்று மாசேதுங் தலைமையில் ஆட்சி இடம்பெற்றது.
1952ம் ஆண்டு சீனா இலங்கையுடன் அரிசி ரப்பர் பண்டமாற்று ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு பெரிதும் உதவி புரிந்தது.
இயற்கை ரப்பரை விட மலிவு விலையில் செயற்கை ரப்பர் கண்டு பிடிக்கப்பட்டதால் இலங்கை தனது இயற்கை ரப்பரை சர்வதேச சந்தையில் விற்க முடியாமல் திண்டாடியது.
அவ்வேளையில் சீனா இலங்கையின் இயற்கை ரப்பருக்கு பதிலாக அரிசியை அதுவும் மலிவு விலையில் இலங்கைக்கு கொடுக்க முன்வந்தது.
உண்மையில் இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க இலங்கையின் நலனைக் கொண்டதாகவே இருந்தது.
• 25 கோடி ரூபா வட்டியில்லா கடன்
அடுத்து 1972ம் ஆண்டு சீனா இலங்கைக்கு 25 கோடி ரூபா பணத்தை வட்டி இல்லா கடனாக வழங்கியது.
அதுமட்டுமல்ல அதே வருடங்களில் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தை சீனா இலங்கையில் இலவசமாக கட்டிக் கொடுத்தது.
இந்த மண்டபத்தில்தான் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டை சிறிமாவோ பண்டாரநாயக்கா நடத்தினார்.
இவ்வாறு சீனா இலங்கைக்கு உதவிய காலங்களில் இந்தியா எப்படி நடந்துகொண்டது என்பதற்கு ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.
• பாண்டுங் மாநாடு
1954ம் ஆண்டு சீனா இந்தியா இலங்கை பர்மா இந்தோனிசியா போன்ற நாடுகள் பங்குபற்றிய மாநாடு ஒன்று இடம்பெற்றது.
மற்ற நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல், மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாதிருத்தல் அமைதியான சுகவாழ்விற்காக பஞ்சசீலக் கொள்கைகளை அமுல்படுத்தல் போன்ற தீர்மானங்களை சீனாவும் இந்தியாவும் சேர்ந்து அம் மாநாட்டில் நிறைவேற்றின.
அந்த மாநாட்டில் இலங்கையின் சார்பாக அப்போதைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவெல பங்கு பற்றியிருந்தார்.
இலங்கை பிரதமர் உரையாற்றிவிட்டு தன் ஆசனத்தில் அமர்ந்தபோது அருகில் இருந்த இந்திய பிரதமர் நேரு “ நீங்கள் அந்த உரையை பேசுவதற்கு முன் ஏன் என்னிடம் காட்டவில்லை?” என்று கேட்டார்.
இவ்வாறு நேரு கேட்டதன் மூலம் பஞ்சசீலக் கொள்கையை நிறைவேற்றிய மண்டபத்திலேயே இந்தியா அதனை மீறிவிட்டது.
இந்தியாவின் இந்த “பெரியண்ணை”த்தனம் சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அதன் கருவில் உருவாகிவிட்டது.
1947ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உறவுகள் மாநாட்டில் நேரு உரையாற்றும்போது “ எங்கள் அண்டை நாடுகள் எதற்கெடுத்தாலும் ஜரோப்பாவைத்தான் நோக்குகின்றன. கடந்தகாலங்களில் தங்களுக்கு அனைத்தையும் தந்த இந்தியாவை மறந்துவிடுகின்றன” என்று கூறினார்.
ஆட்சி அதிகாரத்தை கையில் பெற்றபின் இந்திய ஆட்சியாளர்களின் இந்த பெரியண்ணைத்தனம் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வருகின்றது.
சரி. ஆனால் நேரு மாமா நல்லவர் என்றும் அவரை பஞ்சசீலக் கொள்கை பேசி சீனாதான் ஏமாற்றிவிட்டது என்றும் சீனாதான் இந்தியா மீது போர் தொடுத்தது என்றும் கூறுகிறார்களே. அது பற்றிய உண்மைகளை அடுத்த பதிவில் பார்ப்போம். (தொடரும்)

No comments:

Post a Comment