Saturday, February 11, 2017

•8வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம்!

•8வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம்!
தமது சொந்த நிலத்தை திருப்பி தரும்படி கேப்பாப்பிலவு மக்கள் 8வது நாளாக அமைதி வழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 7 வருடமாக எத்தனையோ அதிகாரிகளிடம் எத்தனையோ மனுக்களை கொடுத்தும் எத்தனையோ தலைவர்களிடம் கெஞ்சியும் எந்தவித பயனும் அற்ற நிலையில் வேறு வழியின்றி போராட்டத்தில் இந்த மக்கள் குதித்துள்ளனர்.
மக்களுடன் சேர்ந்து அவர்களது குழந்தைகளும் மாணவர்களும் 8வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மக்களின் காணிகளை விடுவிப்பதில் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று விமானப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விமான ஓடுபாதையில் இந்த மக்களின் காணிகள் வரவில்லை என்றும் மேலிடத்து உத்தரவு கிடைத்தால் அடுத்த நிமிடமே காணிகளை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் இந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் மேலிடத்துடன் பேசக்கூடிய நிலையில் இருக்கும் சம்பந்தர் அய்யாவோ அல்லது சுமந்திரனோ இது குறித்து அக்கறை இன்றி உள்ளனர்.
சம்பந்தர் அய்யாவைப் பொறுத்தவரையில் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்னையைவிட தனது காளி கோவில் கும்பாபிசேகமே முக்கியம் எனக் கருதுகிறார்.
அதனால்தான் அவர் திருகோணமலை சென்று காளி கோயில் கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ளக் காட்டிய அக்கறையை இந்த மக்களின் பிரச்சனையில் காட்டவில்லை.
அடுத்து சுமந்திரனைப் பொறுத்தவரையில் முன்னாள் புலிப் போராளிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி அதிக பாதுகாப்பைப் பெறுவதிலேயே அவர் கவனமாக இருக்கிறார்.
அந்த அதிக பாதுகாப்புடன் யாழ் சென்று தனிப்பட்ட வழக்கில் ஆஜராகி தனக்கு வருமானம் ஈட்டுவதிலுமே அக்கறையாக இருக்கிறாரே யொழிய இந்த மக்களை சந்தித்து அவர்களது பிரச்சனைக்கு உதவ அவர் விரும்பவில்லை.
இங்கு இப்போது எழும் கேள்வி என்னவெனில்,
(1) விமானப்படை அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தும் அரசு ஏன் அந்த நிலத்தை மக்களுக்கு ஒப்படைக்க தயங்குகிறது?
(2) விமான நிலையம் அமைக்கும் அளவிற்கு கேந்திர முக்கியத்துவமற்ற கேப்பாப்பிலவு நிலத்தை எதற்காக அரசு கைவிட தயங்குகிறது?
இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதிலை அறியக்கூடியவர்கள் சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் மட்டுமே.
எனவே அவர்கள் இருவரும் மனது வைத்தால் மட்டுமே அரசுடன் பேசி இந்த நிலத்தை திருப்பி மக்களிடம் ஒப்படைக்க வழி செய்ய முடியும்.
அவர்கள் இந்த மக்கள் மீது இரக்கம் காட்டுவார்களா?
அவர்கள் இந்த மக்களுக்கு உதவ முன்வருவார்களா?

No comments:

Post a Comment