Tuesday, February 28, 2017

•சம்பூர் மக்களால் முடியுமென்றால் கேப்பாப்பிலவு மக்களால் ஏன் முடியாது?

•சம்பூர் மக்களால் முடியுமென்றால்
கேப்பாப்பிலவு மக்களால் ஏன் முடியாது?
யுத்தம் முடிந்தும் பல வருடங்களாக சம்பூர் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
சம்பூர் மக்களின் 675 சதுர கிலோமீட்டர் பரப்பு நிலம் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவிற்கு ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்டிருந்தது.
தமது சொந்த நிலம் பறிபோவது மட்டுமன்றி அனல் மின்நிலையத்தால் சுற்று சூழல் எல்லாம் மாசு அடையப்போவதாக சம்பந்தர் அய்யாவிடம் அம் மக்கள் முறையிட்டார்கள்.
சம்பந்தர் அய்யாவோ “ இந்தியா போனால் சீனா வந்துவிடும்” என்று கூறி மக்களை கைவிட்டார். மாவை சேனாதிராசாவோ “இந்தியா மூலம் தீர்வு வரப் போகுது எனவே இந்தியாவை கோபம் கொள்ள வைக்கக்கூடாது” என்று கூறினார்.
இவ்வாறு தாம் நம்பிய தலைவர்களே தம்மை கைவிட்ட நிலையிலும்; அந்த மக்கள் மனம் தளரவில்லை. தாமே தமக்காக போராடினார்கள்.
மகிந்த ராஜபக்ச ராணுவம் மூலம் மிரட்டினார். கோத்தபாயா வெள்ளை வான் மூலம் மிரட்டினார். இந்திய ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது என்று சில புத்தி ஜீவிகள் எழுதினார்கள்.
ஆனால் சம்பூர் மக்கள் அத்தனை தடைகளையும் தாண்டி போராடினார்கள். நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஒன்று சேர்ந்து போராடினார்கள்.
சம்பூர் மக்களின் போராட்டத்திற்கு சிங்கள முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி வேடவ இன மக்களும் தமது ஆதரவினை தெரிவித்தார்கள்.
இறுதியில் மக்களின் ஒருமித்த போராட்டம் வெற்றி கண்டது. ஆம். அந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்கப்பட்டார்கள்.
அந்த சம்பூர் மக்கள் போன்று இன்று கேப்பாப்பிலவு மக்களும் தமது சொந்த நிலங்களில் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
சம்பூர் மக்களுக்கு துரோகம் செய்தது போன்று சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் கேப்பாப்புலவு மக்களுக்கும் துரோகம் செய்து வருகின்றனர்.
சம்பூர் மக்களின் போராட்டம் எப்படி சிங்கள முஸ்லிம் மக்களின் ஆதரவினைப் பெற்றதோ அதே போன்று கேப்பாப்ப்pலவு மக்களின் போராட்டமும் இன்று அனைத்து இன மக்களின் ஆதரவினைப் பெற்று வருகிறது.
சம்பூர் மக்களின் போராட்டம் எப்படி வெற்றியைப் பெற்றதோ அதே போன்று கேப்பாப்பிலவு மக்களின் போராட்டமும் நிச்சயம் வெற்றியை பெறும்.
ஆம். சம்பூர் மக்களின் போராட்டம் கேப்பாப்பிலவு மக்களுக்கு வழி காட்டுகிறது.
குறிப்பு- சம்பூரில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் சிலர் கேப்பாப்பிலவிற்கு வந்து தமது ஆதரவினை நேரில் தெரிவிக்கவுள்ளனர்.
நீதி- மக்கள் போராட்டம் ஒரு போதும் தோல்வியடைவதில்லை

No comments:

Post a Comment